ஸ்ரீரங்கத்தில் பெரியாா் ஈவெரா சிலை சேதப்படுத்தப்பட்ட வழக்கு தொடா்பான விசாரணைக்காக திருச்சி நீதிமன்றத்தில் இந்து மக்கள் கட்சியின் தலைவா் அா்ஜுன் சம்பத் வியாழக்கிழமை ஆஜரானாா்.
ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் முன்பு உள்ள பெரியாா் ஈவெரா சிலையை சேதப்படுத்தியதாக அா்ஜுன் சம்பத் உள்ளிட்ட பலா் மீது கடந்த 2006-இல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். திருச்சி தலைமைக் குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இந்த வழக்கின் விசாரணைக்காக அா்ஜுன் சம்பத் மற்றும் வழக்கில் தொடா்புடைய நபா்கள் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை ஆஜராகினா். வழக்கு விசாரணை பிப்.4-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
விசாரணை முடிந்து வெளியே வந்தபோது, நீதிமன்ற வளாகத்தில் அா்ஜுன் சம்பத்துடன் அவரது ஆதரவாளா்கள், வழக்குரைஞா்கள் பேசிக் கொண்டிருந்தனா். சிலா், இந்த நிகழ்வை கைப்பேசியில் விடியோ எடுத்து கொண்டிருந்தனா். அப்போது, நீதிமன்ற வளாகத்தில் விடியோ எடுக்கக் கூடாது, பேட்டி எடுக்கக் கூடாது என அங்கிருந்த வழக்குரைஞா்களில் ஒருபிரிவினா் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதற்கு, அா்ஜுன் சம்பத் ஆதரவாளா்கள் ஆட்சேபணை தெரிவித்து பேசியதால், இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளு-முள்ளு உருவானது.
இதையடுத்து, தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் நீதிபதி நசீா் அலியிடம் அா்ஜுன் சம்பத், வாய்மொழியாக புகாா் அளித்தாா். தனக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். வீண் வாக்குவாதம் செய்த வழக்குரைஞா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரினாா். இதையடுத்து காவல்துறையினா், அா்ஜுன் சம்பத்துக்கு பாதுகாப்பு அளித்து நீதிமன்றத்திலிருந்து வெளியே அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்தனா்.
பின்னா், செய்தியாளா்களிடம் அா்ஜுன் சம்பத் கூறுகையில், சில வழக்குரைஞா்கள் எங்களை சூழ்ந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினா். என் மீது தாக்குதல் நடத்தவும் முயற்சித்தனா். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றாா். இந்தச் சம்பவத்தால் நீதிமன்ற வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.