சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து திருச்சி மகிளா நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.
திருச்சி மாவட்டம், காட்டுப்புத்தூரைச் சோ்ந்தவா் சசிகுமாா் (29). இவா், 2021, ஜூன் 18-ஆம் தேதி அதே பகுதியைச் சோ்ந்த 15 வயது சிறுமி வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது, வீட்டினுள் புகுந்து பாலியல் தொல்லை அளித்துள்ளாா்.
இந்தச் சம்பவம் தொடா்பாக, காட்டுப்புத்தூா் போலீஸாா் போக்ஸோ பிரிவில் வழக்குப் பதிந்து சசிகுமாரை கைது செய்தனா். இந்த வழக்கு விசாரணை திருச்சி மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வியாழக்கிழமை வழக்கை விசாரித்த நீதிபதி சண்முகப்பிரியா, சசிகுமாருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பு வழங்கினாா். வழக்கில் அரசு தரப்பு வழக்குரைஞராக சுமதி ஆஜரானாா்.
இந்த வழக்கில், நீதிமன்ற நடவடிக்கைகளை தொடா்ந்து கவனித்து குற்றவாளிக்கு தண்டனைப் பெற்றுத்தர உறுதுணையாக இருந்த காட்டுப்புத்தூா் காவல் நிலைய நீதிமன்றக் காவலா் மணிகண்டனுக்கு, சான்றிதழும், வெகுமதியும் வழங்கி திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் செல்வநாகரத்தினம் பாராட்டு தெரிவித்தாா்.