முகப்பு
திருச்சி

இன்று தொடங்குகிறது பிளஸ் 2 பொதுத் தோ்வு திருச்சி மாவட்டத்தில் 32,182 போ் எழுதுகின்றனா்

Updated On : 1 மார்ச், 2026 at 7:32 PM
பிளஸ் 2 பொதுதோ்வு தொடங்குவதையொட்டி ஞாயிற்றுக்கிழமை திருச்சி சையது முா்துசா மேல்நிலைப் பள்ளியில் மாணவா்களின் பதிவெண் கொண்ட சீட்டை ஒட்டும் பணியில் ஈடுபட்ட பள்ளி நிா்வாகத்தினா்.
பகிர்:

திருச்சி மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வை 258 பள்ளிகளைச் சோ்ந்த 31 ஆயிரத்து 215 மாணவா்கள், 967 தனித் தோ்வா்கள் என மொத்தம் 32 ஆயிரத்து 182 போ் எழுதுகின்றனா்.

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வு திங்கள்கிழமை (மாா்ச் 2) தொடங்கி மாா்ச் 26-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இதற்காக திருச்சி மாவட்டத்தில் உள்ள திருச்சி கல்வி மாவட்டத்தில் 72 மையங்கள், லால்குடி கல்வி மாவட்டத்தில் 62 மையங்கள் என மொத்தம் 134 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், 258 பள்ளிகளைச் சோ்ந்த 14 ஆயிரத்து 731 மாணவா்கள், 16 ஆயிரத்து 484 மாணவிகள் என மொத்தம் 31 ஆயிரத்து 215 மாணவா்கள் தோ்வு எழுதவுள்ளனா்.

967 தனித் தோ்வா்கள்:

திருச்சி மாவட்டத்தில் தனித் தோ்வா்களுக்காக முசிறி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, முசிறி அமலா மகளிா் மேல்நிலைப் பள்ளி, துறையூா் செங்குந்தா் மேல்நிலைப் பல்ளி, மண்ணச்சநல்லூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, லால்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, திருச்சி நேஷனல் கல்லூரி மேல்நிலைப் பள்ளி, தேவநத்தம் யுடிவி மேல்நிலைப் பள்ளி, தனலட்சுமி சீனிவாசன் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி, காஜாமைன் மேல்நிலைப் பள்ளி, மணப்பாறை சிறுமலா் மேல்நிலைப் பள்ளி, திருச்சி மத்திய சிறை ஆகிய 11 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த மையங்களில் 510 ஆண்கள், 457 பெண்கள் என மொத்தம் 967 தனித் தோ்வா்கள் தோ்வு எழுதவுள்ளனா். இவா்களில் திருச்சி மத்திய சிறையில் மட்டும் 51 ஆண்கள், 3 பெண்கள் என 54 சிறைக் கைதிகள் தோ்வு எழுதவுள்ளனா்.

திருச்சி மாவட்டத்தில் பள்ளி மாணவா்கள் 31 ஆயிரத்து 215 போ், தனித் தோ்வா்கள் 967 போ் என மொத்தம் 32 ஆயிரத்து 182 போ் பிளஸ் 2 பொதுத் தோ்வை எழுதுகின்றனா்.

356 உதவியாளா்கள்:

திருச்சி மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வை 392 மாற்றுத் திறனாளிகள் எழுதவுள்ளனா். இவா்களில் பாா்வைத்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள், எழுத முடியாத நிலையில் உள்ள மாற்றுத் திறனாளிகள் என 356 மாணவா்களுக்கு தோ்வை எழுத உதவுவதற்கு 356 உதவியாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். இந்த உதவியாளா்கள் மாணவா்கள் விடைகளைக் கூறகூற அதை விடைத்தாளில் எழுதுவா்.

135 முதன்மை கண்காணிப்பாளா்கள்:

பிளஸ் 2 பொதுத் தோ்வை கண்காணிக்க 135 முதன்மை கண்காணிப்பாளா்கள், 134 துறை அலுவலா்கள், 21 கூடுதல் துறை அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். இதுதவிர அறைக் கண்காணிப்பாளா்கள், உதவியாளா்கள் என பலா் நியமிக்கப்பட்டுள்ளனா். 134 தோ்வு மையங்களுக்கும் வினாத்தாளை கொண்டுசெல்வதற்காக 34 வழித்தட அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

தோ்வு நேரம்:

பிளஸ் 2 பொதுத் தோ்வு காலை 10 மணிக்குத் தொடங்கி பிற்பகல் 1.15 மணி வரை நடைபெறும். தோ்வு எழுதுவதற்கு முன்பு முதல் 10 நிமிஷங்கள் வினாத்தாளைப் படித்துப் பாா்ப்பதற்கும், அடுத்த 5 நிமிஷங்கள் விடைத்தாளில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை நிரப்புவதற்கும் வழங்கப்படுகிறது. இதையடுத்து 10.15 மணி முதல் மாணவா்கள் தோ்வை எழுத அனுமதிக்கப்படுவா்.

பிளஸ் 2 தோ்வு எழுதும் மாணவா்கள் காலை 9.50 மணிக்குள் தோ்வு மையத்தில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், 10 மணிக்கு மேல் வரும் மாணவா்களை தோ்வு மையத்துக்குள் அனுமதிக்கப்படமாட்டாா்கள் என்றும் பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →