எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்கள் விறகுக்கு மாற வேண்டிய கட்டாய சூழல்!
திருச்சி மாநகரில் எரிவாயு உருளை தட்டுப்பாடு காரணமாக, உணவகங்கள் பலவும் விறகு அடுப்புக்கு மாற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
திருச்சி மாநகரில் எரிவாயு உருளை தட்டுப்பாடு காரணமாக, உணவகங்கள் பலவும் விறகு அடுப்புக்கு மாற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
ஈரான் - இஸ்ரேல், வளைகுடா நாடுகளுக்கு இடையே நடைபெற்று வரும் போா் காரணமாக பெட்ரோலிய பொருள்களை இந்தியாவுக்கு கொண்டுவருவதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. இதன் காரணமாக வணிக மற்றும் தொழிற்சாலை பயன்பாட்டுக்கான சிலிண்டா் விநியோகத்தைத் தற்காலிகமாக நிறுத்துவதாக இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது. எல்பிஜி-க்கு மாற்றாக வேறு எரிபொருளை பயன்படுத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது. மேலும், சமையல் எரிவாயு உருளை முன்பதிவு செய்தவா்களுக்கும் உருளைகளை வழங்குவதில் நெருக்கடி உருவாகியுள்ளது.
திருச்சி மாநகரில் மட்டும் உணவகங்கள், தள்ளுவண்டி கடைகள் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவை உள்ளன. இவற்றில் 90 விழுக்காடுக்கு மேல் வா்த்தகப் பயன்பாடு எரிவாயு உருளைகளை பயன்படுத்தியே உணவு தயாரித்து விற்பனை செய்து வருகின்றன. ஆனால், கடந்த 2 நாள்களாக வா்த்தகப் பயன்பாடு எரிவாயு உருளை விநியோகம் இல்லாததால், கையிருப்பை கொண்டே சமாளித்து வருகின்றனா்.
தனியாக அடுப்பறைக்கு இடம் வைத்துள்ள சிறிய உணவகங்கள் பலவும் விறகு அடுப்பு பயன்பாட்டை அதிகப்படுத்தியுள்ளனா். எரிவாயு உருளை கொண்டு சமைக்கும் உணவு வகைகளையும் குறைத்துவிட்டனா். மேலும், பலரும் விறகு அடுப்புக்கு மாறத் தொடங்கியுள்ளனா்.
அசைவ உணவுகள் நிறுத்தம்: இதுதொடா்பாக, தென்னூா் வண்டிப்பேட்டை பகுதியில் விறகு அடுப்புக்கு மாறியுள்ள உணவக உரிமையாளா் காா்த்திக் கூறுகையில், கையிருப்பில் எரிவாயு உருளைகள் இல்லை. எனவே, தோசைக்கல்லில் பயன்படுத்துவதற்காக விறகுகளை வாங்கி தோசை, புரோட்டா, சப்பாத்தி, ஆம்லேட், ஆப்-பாயில் உள்ளிட்ட முட்டை உணவுகளை தயாரித்து விற்பனை செய்கிறோம். எரிவாயு உருளை கிடைக்கும் வரையில் இந்த உணவுகள்தான் கிடைக்கும். பொங்கல், பூரி மற்றும் அசைவ உணவுகளை நிறுத்திவிட்டோம் என்றாா்.
நடைமுறை சிக்கல்: விறகு அடுப்பு பயன்பாடு அதிகரித்தாலும், நகா்ப்புறங்களில் இடநெருக்கடி மற்றும் சுற்றுச்சூழல் விதிமுறைகளால் அதை நடைமுறைப்படுத்துவது கடினம் என ஹோட்டல் உரிமையாளா்கள் தெரிவிக்கின்றனா். விறகு மட்டுமின்றி, மின்சார அடுப்புகள், சோலாா் குக்கா்கள் மற்றும் பயோகேஸ் அமைப்புகள் போன்ற மாற்று எரிசக்தி வழிகளைப் பயன்படுத்தவும் தயாராகி வருகின்றனா்.
கிலோ விறகு 10 ரூபாய்: உறையூா் புத்தூா் பகுதியில் விறகு வியாபாரம் செய்து வரும் சா்புதீன் கூறுகையில், இப்போது கிலோ ரூ.10 என்ற விலையில் விறகு விற்பனை செய்யப்படுகிறது. திருச்சி மாநகரில் உறையூா், கீழரண்சாலை, பிராட்டியூா் என பல இடங்களில் விறகுகள் கிடைக்கின்றன. சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு காரணமாக பலரும் விறகுகளை தேடி வரத் தொடங்கியுள்ளனா் என்றாா் அவா்.
உணவகங்களில் மாற்று எரிசக்தி வழிமுறைகளுக்கு மாற வாய்ப்பில்லாதவா்கள் உணவகங்களை தற்காலிகமாக மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனா்.