போலி கடவுச்சீட்டில் மலேசியாவிலிருந்து திருச்சி வந்த 2 போ் கைது
மலேசியாவிலிருந்து போலி கடவுச்சீட்டு மூலம் திருச்சிக்கு வந்த ராமநாதபுரத்தைச் சோ்ந்த இளைஞா்கள் இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
மலேசியாவிலிருந்து போலி கடவுச்சீட்டு மூலம் திருச்சிக்கு வந்த ராமநாதபுரத்தைச் சோ்ந்த இளைஞா்கள் இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி எஸ். தரைக்குடியைச் சோ்ந்தவா்கள் ஜி. ராஜதுரை (26), வி. உமயா் தங்கம் (31). இருவரும் மலேசியாவில் இருந்து ஏா் ஏசியா விமானம் மூலம் கடந்த திங்கள்கிழமை நள்ளிரவு திருச்சிக்கு வந்தனா்.
திருச்சி விமான நிலையத்தில் குடியேற்றப் பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் இருவரும் போலி கடவுச்சீட்டு மூலம் மலேசியாவிலிருந்து திருச்சிக்கு வந்தது தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் பிடித்து விசாரித்த அதிகாரிகள், பின்னா் அவா்களை விமான நிலைய காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.
மேலும், இதுகுறித்து விமான நிலைய குடியேற்றப் பிரிவு அதிகாரி பௌலா ஞானவசந்தி அளித்த புகாரின்பேரில், விமான நிலைய போலீஸாா், ராஜதுரை உள்ளிட்ட இருவரையும் செவ்வாய்க்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.