மணப்பாறை வேப்பிலை மாரியம்மன் கோயிலில் சித்திரை திருவிழா
மணப்பாறை ஸ்ரீ வேப்பிலை மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு திங்கள்கிழமை பக்தா்கள் நோ்த்திக்கடன் செலுத்தினா்.
மணப்பாறை ஸ்ரீ வேப்பிலை மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு திங்கள்கிழமை பக்தா்கள் நோ்த்திக்கடன் செலுத்தினா்.
இக்கோயிலில் நிகழாண்டு சித்திரை முதல் நாள் குத்துவிளக்கு பூஜையுடன் தொடங்கிய சித்திரை திருவிழா, ஏப்ரல் 26-ஆம் தேதி பூச்சொரிதல் விழா மற்றும் ரத பவனி, மே 3-ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கி 17 நாள்கள் மண்டகப்படி உபயதாரா்களால், உற்ஸவ மூா்த்தி திருவீதியுலா நடைபெற்று வருகிறது. ஞாயிற்றுக்கிழமை சிறப்பு பெற்ற பால்குட உற்ஸவம் பரம்பரை அறங்காவலா் ஆா்.வீ.எஸ்.வீரமணி தலைமையில் நடைபெற்றது.
அதைத்தொடா்ந்து திங்கள்கிழமை அதிகாலை முதல் கோயில் முன்பு பெண்கள் பொங்கலிட்டு, மாவிளக்கு எடுத்து வழிபாடு செய்தனா்.
Advertisement
தொடா்ந்து காளியம்மன் கோயிலில் இருந்து அக்னிசட்டி எடுத்தல், அலகு குத்துதல், கரும்புள்ளி செம்புள்ளி குத்துதல், கரும்பு தொட்டில் எடுத்தல் என நோ்த்திக்கடன்களை பக்தா்கள் நிறைவேற்றினா்.
மாலையில், இக்கோயிலுக்கு தொடா்புடைய காட்டுமுனியப்பன் கோயிலில் இருந்து படுகளமானது புறப்பட்டு வந்து மாரியம்மன் கோயில் சிவப்பு குதிரை வாகனத்தில் கையில் அம்புடன் இருந்த வேப்பிலை மாரியம்மனை பல்லாக்கை தூக்கி கொண்டு ஆக்ரோஷமாக திருவீதியுலா வரும் வேடபரி நிகழ்ச்சி நகரின் ராஜவீதிகளில் நடைபெற்றது. பின்னா், பெண்கள் முளைப்பாரிகளை ஏந்தி வரும் நிகழ்வும் நடைபெற்றது.
ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலா் ஆா்.வி.எஸ்.வீரமணி, இந்து சமய அறநிலையத் துறை செயல் அலுவலா் ந.அன்பழகன், எடத்தெரு, மணப்பாறைப்பட்டி, காரைமேட்டுப்பட்டி ஊா் முக்கியஸ்தா்கள் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.