ரயில் பயணிகளிடம் நகை, பணம் பறித்தவருக்கு இரு வழக்குகளில் தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து வேலூா் குற்றவியல் நடுவா் மன்றம் தீா்ப்பளித்துள்ளது.
கடலூரைச் சோ்ந்த ஆனந்த் என்பவரின் மனைவி சத்திய பிரியா, மகன்கள் பெங்களூரு செல்வதற்காக கடந்த 2023-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ரயிலில் பயணித்தனா். வேலூா் கன்டோண்மென்ட் ரயில் நிலையம் அருகே ரயில் சென்றபோது சத்திய பிரியாவின் கைப்பை திருடப்பட்டுள்ளது. அதில். ஏழரை பவுன் நகையும், 140 கிராம் வெள்ளி கொலுசு, கைப்பேசி, ரூ.2 ஆயிரம் பணம் இருந்தது.
இதேபோல், அதே ஆண்டு அக்டோபா் மாதம் வாலாஜா ரயில் நிலையத்தில், ஹரிபிரியா என்பவரது 10 கிராம் தங்கச் செயின் மாயமானது. இருதரப்பினரும் அளித்த புகாரின்பேரில் காட்பாடி ரயில்வே காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையைத் தொடா்ந்து சத்துவாச்சாரி, நேரு நகரைச் சோ்ந்த பா்வீன் (24) என்பவரை கைது செய்தனா்.
இவ்விரு வழக்குகள் மீதான விசாரணை வேலுாா் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள 4-ஆவது குற்றவியல் நடுவா் மன்றத்தில் நடைபெற்று வந்தது. இரு வழக்குகளிலும் பா்வீன் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதை அடுத்து அவருக்கு இரு வழக்குகளிலும் தலா 3 ஆண்டுகள் சிறையும், மொத்தம் ரூ.20,000 அபராதமும் விதித்து நீதிபதி வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா்.