கடலூர்

என்எல்சி-க்கு நிலம் வழங்கியவர்களுக்கு ஏக்கருக்கு ரூ. 24 லட்சம் இழப்பீடு வழங்க எம்எல்ஏ கோரிக்கை

தினமணி

தற்போதைய நில எடுப்புக் கொள்கையின்படி 4 மடங்கு இழப்பீடு வழங்கப்படுகிறது. அதன்படி, என்.எல்.சி. இந்தியா நிறுவனத்துக்கு நிலம் வழங்கியவர்களுக்கு ஏக்கருக்கு ரூ. 24 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என நெய்வேலி எம்எல்ஏ. சபா.ராஜேந்திரன் சட்டப்பேரவையில் வலியுறுத்தினார்.
 இதுதொடர்பாக சட்டப்பேரவையில் அண்மையில் நடைபெற்ற மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது, நெய்வேலி தொகுதி திமுக உறுப்பினர் சபா.ராஜேந்திரன் பேசியதாவது:
 என்.எல்.சி. இந்தியா நிறுவனத்துக்கு நிலம் கையகப்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு நிலங்களைக் கையகப்படுத்துவதால் விவசாயிகள், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். வீடு, நிலம், கடை மற்றும் இதர சொத்துகளை ஒட்டு மொத்தமாக இழக்க நேரிடுகிறது.
 எனவே, பாதிக்கப்பட்டவர்களுக்கு தேசிய மறுவாழ்வு, மீள் குடியேற்றக் கொள்கை 2007-இன்படி, என்எல்சி இந்தியா நிறுவனம் நிவாரணம் வழங்கி வருகிறது. இவர்களுக்கான இழப்பீடுகளை முன்னதாகவே வழங்கினால் பயனுள்ளதாக இருக்கும்.
 மத்திய அரசின் புதிய நில எடுப்புச் சட்டத்தின்படி, 1.1.2014 முதல் இழப்பீட்டுத் தொகை, தேசிய மறுவாழ்வு - மீள் குடியேற்ற இழப்பீடுத் தொகை ஆகியவை வழங்கப்பட உள்ளன.
 ஆனால், 2014-ஆம் ஆண்டுக்கு முன்னர் நிலம் வழங்கியவர்களுக்கும் இதே சட்டத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 எனவே, புதிய நில எடுப்புக் கொள்கையின்படி 4 மடங்கு இழப்பீடாக வழங்கப்படுகிறது. நெய்வேலி பகுதியில் ஒரு ஏக்கருக்கு ரூ. 24 லட்சம் இழப்பீடாக வழங்கப்பட வேண்டும்.
 கடந்த 2017-இல் தொழில் துறை முதன்மைச் செயலர் ஒரு கூட்டத்தைக் கூட்டி, மாவட்ட ஆட்சியர் தலைமையில் முத்தரப்புக் கூட்டத்தை நடத்தி, பிரச்னைகளுக்குத் தீர்வு காண வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
 இந்தக் கூட்டத்தை உடனடியாகக் கூட்டி நிலம் வழங்கியவர்களுக்கு வேலைவாய்ப்பு, மாற்று மனை வழங்கியதற்கான பட்டா ஆகியவற்றை வழங்க வேண்டும்.
 என்டிபிசி என்ற பொது நிறுவனம் மறுவாழ்வு, மீள் குடியேற்றச் சட்டம் என தனியாக வைத்துள்ளது. அதுபோல, என்எல்சி இந்தியா நிறுவனத்துக்கும் உருவாக்க வேண்டும். பயன்படுத்தாமல் இருக்கும் நிலத்தை விவசாயிகளுக்கே மீண்டும் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார் அவர்.
 இதற்கு பதிலளித்துப் பேசிய அமைச்சர் பி.தங்கமணி, 1.4.2014-க்கு முன்னர் நிலம் வழங்கியவர்களுக்கு புதிய நில எடுப்புச் சட்டத்தின்படி இழப்பீடு வழங்க முடியாது. புதிய சட்டத்தின்படி, இழப்பீட்டுத் தொகை 4 மடங்கு என்பதால் என்எல்சி இந்தியா நிறுவனம் அதற்கு ஒப்புக்கொண்டிருக்கின்றது. இதற்காக முன் பணமாக ரூ. 13.75 கோடி வழங்கியுள்ளது.
 இழப்பீட்டுத் தொகையை முன்னதாக வழங்க முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச் சென்று நிர்வாகத்துடன் கலந்து பேசி சுமுக நிலையை எட்ட ஏற்பாடு செய்யப்படும். அதேபோல, முத்தரப்புப் பேச்சுவார்த்தை நடத்தவும் முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு சென்று விவசாயிகளுக்கு இழப்பீடு தொகை கிடைக்க ஆவன செய்யப்படும்.
 மத்திய அரசு நிறுவனத்துக்கு மத்திய அரசின் கொள்கைப்படிதான் விலையை நிர்ணயம் செய்ய முடியும் என்றார் அவர்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கௌதம் கம்பீர் ஸ்டைலில் விளையாடுகிறோம்: ஹர்ஷித் ராணா

ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவருக்கு நேர்ந்த சோகம்!

ஆதியின் அல்லி!

150 இடங்களில் கூட தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறாது! ராகுல் பேச்சு

100 நாள் வேலை திட்ட ஊதியம் ரூ. 400 ஆக உயர்த்தப்படும் -ராகுல் காந்தி

SCROLL FOR NEXT