கடலூர்

ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் பச்சைப் பயறு அதிக விலைக்கு கொள்முதல்

DIN

ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் பச்சைப் பயறு அதிக விலைக்கு கொள்முதல் செய்யப்படுவதால், விவசாயிகள் அங்கு பயறை விற்பனை செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர்.
 விவசாயப் பயிர்களுக்கு உரிய விலை கிடைக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வரும் நிலையில், மத்திய அரசு தேசிய வேளாண் கூட்டுறவு விற்பனை இணையம் மூலமாக நெல், கரும்பு, மஞ்சள், பருத்தி உள்ளிட்ட பொருள்களுக்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. மேலும், சில விளைபொருள்கள் இந்த இணையம் மூலமே வாங்கப்படு கின்றன.
 கடலூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை கடந்தாண்டு உளுந்து பயறை மட்டுமே மத்திய அரசு நேரடியாக விலை நிர்ணயம் செய்து ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் மூலமாக வாங்கி வந்தது. நிகழாண்டில் பச்சைப் பயறை கொள்முதல் செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டிருந்தது. இதற்காக, பச்சைப் பயறு பயிரிட்டுள்ள விவசாயிகள் விருத்தாசலம், பண்ருட்டி, சேத்தியாத்தோப்பு, கடலூர், குறிஞ்சிப்பாடி ஆகிய ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் தங்களின் பெயர்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது. நிகழாண்டு (ஏப்ரல் முதல் கொள்முதல் விலை) உளுந்து பயறு கிலோ ரூ. 56, பச்சைப் பயறு ரூ. 69.75 என விலை நிர்ணயம் செய்யப்பட்டது.
 தற்போது இவற்றின் அறுவடை நடைபெற்று வரும் நிலையில், விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களுக்கு நெல், எள், உளுந்து உள்ளிட்ட பொருள்களின் வருகை அதிகமாக உள்ளது. குறிப்பாக, பச்சைப் பயறு வரத்து மிகவும் அதிகரித்துள்ளது.
 இதுகுறித்து, வேளாண் துறையினர் கூறியதாவது:
 உளுந்து பயறுக்கு அரசு ரூ. 56 விலை நிர்ணயம் செய்துள்ள நிலையில் வெளிச் சந்தையில் கிலோ ரூ. 59 முதல் 60 வரை கிடைத்து வருகிறது. எனவே, விவசாயிகள் வெளி வியாபாரிகளுக்கு உளுந்தை விற்பனை செய்து வருகிறனர்.
 ஆனால், பச்சைப் பயறுக்கு அரசு ரூ. 69.75 விலை நிர்ணயம் செய்துள்ளது. வெளிச் சந்தையில் ரூ. 52 முதல் ரூ. 53 வரை மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது.
 இதனால், விவசாயிகள் பச்சைப் பயறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் மூலமாக விற்பனை செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஏப்ரல் மாதம் முதல் 20 டன் மட்டுமே உளுந்து கொள்முதல் செய்யப்பட்ட நிலையில், பச்சைப் பயறு 366 டன் வரை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
 மாவட்டத்தில் உள்ள 5 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் மூலம் கொள்முதல் செய்யப்படும் பச்சைப் பயறு மயிலாடுதுறையில் உள்ள மத்திய அரசின் உணவு சேமிப்புக் கிடங்குக்கு அனுப்பி வைக்கப்படும். அங்கிருந்து மாநில வேளாண் விற்பனை மற்றும் வணிகத் துறை இயக்குநருக்கு பச்சைப் பயறு, உளுந்துக்கான பணம் வழங்கப்பட்டு விவசாயிகள் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.
 எனவே, விவசாயிகள் தங்களது சிட்டா, அடங்கல், வேளாண் துறையினரின் சான்றொப்பத்துடன் தங்களது பச்சைப் பயறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் மூலமாக விற்பனை செய்து அதிக பலன் பெற வேண்டும் எனத் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சின்னஞ்சிறு சித்திரமே....ரவீனா!

வேட்டையன் கதை வித்தியாசமானது: ராணா டக்குபதி

அயோத்தி ராமர் கோயிலில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வழிபாடு

இவானா டுடே!

த.செ. ஞானவேல் இயக்கத்தில் நானி?

SCROLL FOR NEXT