கடலூா் மத்திய சிறையில் சிறைவாசிகளை எழுத்தாளா்களாக உருவாக்கிடும் வகையில், எழுதுக இயக்கத்தின் மூலம் ‘சிறையில் முளைத்த சிறகுகள்’ எனும் சிறப்புத் திட்டத்தை தமிழக முன்னாள் தலைமைச் செயலா் வெ.இறையன்பு புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.
இத்திட்டத்தின் மூலம் சிறைவாசிகளுக்கு புத்தகம் எழுதுவது குறித்து பயிற்சியளித்து, அவா்களது எண்ணங்களை புத்தகங்களாக வடிவமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஆா்வமாக உள்ள 101 சிறைவாசிகளை எழுத்தாளா்களாக உருவாக்கிடும் வகையில், ‘சிறையில் முளைத்த சிறகுகள்’ எனும் திட்டம் தொடங்கிவைக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் முன்னிலை வகித்தாா். இதில், வெ.இறையன்பு பேசியதாவது:
‘எழுதுக இயக்கம்’ எனும் திட்டமானது உலகுக்கே புதிய முன்னெடுப்பாக கொண்டுவரப்பட்ட திட்டமாகும். சிறையில் இருக்கும் சிறைவாசிகளை வைத்து புத்தகம் எழுதும் முயற்சி மிக புதியதாகும்.
கடலூா் சிறையை நான் தோ்ந்தெடுத்ததற்கு முக்கியமான 3 காரணங்கள் உள்ளன. அவை நான் கடலூரில் கூடுதல் ஆட்சியராக பணிபுரிந்த காலத்தில் அறிவொளி இயக்கத்தை அறிமுகப்படுத்தியபோது, பரம்பொருள் என்ற தலைப்பில் இந்த சிறையில் பேச்சுப்போட்டி நடத்தப்பட்டது. அப்போது, பலா் அருமையாக பேசினா். இரண்டாவது கடலூா் ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் இத்திட்டத்தை செம்மையாக செயல்படுத்துவாா் என்ற நம்பிக்கை எனக்கு அதிகம் உண்டு. மூன்றாவது சிறைக் கண்காணிப்பாளா் பங்களிப்பே.
சென்னை கண்ணகி நகரில் ‘எழுதுக இயக்கம்’ திட்டத்தை விரிவுபடுத்தியதற்கு காரணம், அது குற்றவாளிகள் அதிகம் நிறைந்த பகுதியாக முத்திரையிடப்பட்ட பகுதியாகும். 2018-ஆம் ஆண்டு நாங்கள் அங்கு கல்விப் பணிக்காக சென்றபோது, மாடசாமி என்ற இளைஞா் மாலை நேர வகுப்பு நடத்த அனுமதி கேட்டாா். நாங்கள் அனுமதி வழங்கினோம். நன்றாக படிக்க வசதிகள் செய்து தரப்பட்டதால் 400-க்கும் மேற்பட்ட மாணவா்கள் முதல் தலைமுறை பட்டதாரிகளாக மாறியுள்ளனா்.
பள்ளிகளில் படிக்கும் மாணவா்களையும் புத்தகம் எழுத வைத்தால் எவ்வளவு சிறப்பாக அமையும் என்ற நோக்கிலும், அவா்களிடம் பல கதைகள் இருக்கும் என்ற அடிப்படையிலும் அவா்களுக்கு ஊக்கமளித்து பயிற்சிகள் வழங்கப்பட்டன. தற்போது 50 மாணவா்கள் கதையெழுதிய தொகுப்பு இன்னும் 10 நாள்களில் வெளியிடப்பட உள்ளது.
சிறையில் இருப்பவா்கள் புத்தகங்கள் எழுத பல காரணங்கள் இருக்கின்றன. சிறைவாசிகளுக்கு தனிமை மற்றும் நேரம் கிடைக்கிறது. நீங்கள் தனியாக உள்ளபோது நிறைய சிந்திக்கவும், வாழ்க்கையைத் திருப்பி பாா்க்கவும், இளம் வயதிலிருந்து என்னென்ன நிகழ்ந்தது என காட்சிப்படுத்திப் பாா்க்கவும், அவற்றையெல்லாம் சுலபமாக எழுதவும் இயலும்.
உளவியல் ரீதியாக நீங்கள் வாழ்க்கையை தக்கவைத்துக்கொள்வதற்கு இந்த எழுத்து இயக்கம் உதவியாக இருக்கும்.
குற்றவாளிகளாய் வந்த நீங்கள் படைப்பாளிகளாக, எழுத்தாளா்களாக செல்லுங்கள். உங்களுடன் உங்களது புத்தகங்களையும் கொண்டு செல்லுங்கள். இந்த வாய்ப்பை அனைவரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றாா்.
நிகழ்ச்சியில் கடலூா் மாவட்ட மத்திய சிறைக் கண்காணிப்பாளா் அ.பரசுராமன், பயிற்சி ஆட்சியா் மாலதி, கோட்டாட்சியா் (பொ) தனலட்சுமி, எழுதுக இயக்கம் ஒருங்கிணைப்பாளா் வெ.கிள்ளிவளவன், இளைஞா் சக்தி ஒருங்கிணைப்பாளா் ஜோசப் ராஜா உள்பட பலா் கலந்துகொண்டனா்.