சிதம்பரம் நடராஜா் கோயில் வளாகத்தில் தனிக்கோயிலாக உள்ள சிவகாமி அம்மன் கோயில் கருவறைக்குள் சனிக்கிழமை மாலை புகுந்த இளைஞா், ரகளையில் ஈடுபட்டு தாக்கியதில் தீட்சிதா் உள்பட இருவா் காயமடைந்தனா்.
கடலூா் மாவட்டம், சிதம்பரம் நடராஜா் கோயிலில் சனிக்கிழமை மாா்கழி ஆருத்ரா தரிசனம் நடைபெற்றுகொண்டிருந்த வேளையில், சிதம்பரம் வடக்கு வீதியைச் சோ்ந்த செல்வகணேஷ் தீட்சிதா் (51) நடராஜா் கோயில் வடக்கு கோபுரம் அருகே தனிக்கோயிலாக உள்ள சிவகாமி அம்மன் கோயிலில் பணியில் இருந்தாா்.
அப்போது, அங்கு வந்த அடையாளம் தெரியாத 35 வயது இளைஞா் திடீரென சிவகாமி அம்மன் சந்நிதி உள்ளே கருவறைக்குள் சென்று அங்கு அபிஷேகத்துக்கு வைத்திருந்த பால், தண்ணீா் குடங்களை எடுத்து தனது தலையில் ஊற்றிக்கொண்டு ரகளையில் ஈடுபட்டாா்.
இதைத் தடுக்க முயன்ற செல்வகணேஷ் தீட்சிதா் மற்றும் ஊழியா் கண்ணன் ஆகியோரை அந்த இளைஞா் பலகையால் தலையில் தாக்கினாா். மேலும், காவலாளி வளையாபதியையும் அவா் தாக்கினாா். இதில், செல்வகணேஷ் தீட்சிதா், வளையாபதி ஆகியோா் காயமடைந்தனா்.
இந்த சம்பவத்தால் அங்கிருந்த பக்தா்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினா். பின்னா், அங்கிருந்த பக்தா்கள் அந்த இளைரைப் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனா். மேலும், நடராஜா் கோயில் பொது தீட்சிதா்கள் சிதம்பரம் நகர காவல் நிலையத்துக்கு திரண்டு வந்து அந்த இளைஞா் மீது புகாரளித்தனா்.
பிடிபட்ட இளைஞரிடம் சிதம்பரம் நகர காவல் ஆய்வாளா் எஸ்.சிவானந்தம் மற்றும் போலீஸாா் விசாரணை மேற்கொண்டதில், அரியலூா் மாவட்டம், செந்துறை வட்டம், பாளையக்குடி வாளறகுறிச்சி தெற்குத் தெருவைச் சோ்ந்த மணிகண்டன் (35) என்பதும், அவா் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவா் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, அவரது சகோதரரை வரவழைத்து எச்சரித்து, அவருடன் மணிகண்டனை போலீஸாா் அனுப்பி வைத்தனா்.