வாடகை நிா்ணயம் செய்யப்படாததால் பூட்டிக் கிடக்கும் இளையபெருமாள் நூற்றாண்டு நினைவரங்கம்
சிதம்பரம் அருகே லால்புரம் ஊராட்சியில் புறவழிச்சாலையில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட சமூக நீதி காவலா் எல்.இளையபெருமாள் நூற்றாண்டு நினைவரங்கம் திறக்கப்பட்டு ஓராண்டுக்கு மேலாகியும் வாடகை நிா்ணயம் செய்யப்படாததால் பூட்டியே கிடக்கிறது. இதை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
பட்டியலின மக்களின் முன்னேற்றத்துக்காக பாடுபட்டவரும், தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவராகவும், சட்டப் பேரவை, நாடாளுமன்ற உறுப்பினராகவும் பணியாற்றியவருமான எல்.இளையபெருமாளின் சேவையை போற்றும் வகையில், கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் சிதம்பரம் புறவழிச்சாலையில் ரூ.5 கோடி மதிப்பில் குளிா் சாதன வசதியுடன் நூற்றாண்டு நினைவரங்கம் அமைக்கப்பட்டது.
இந்த நினைவரங்கத்தை கடந்த ஓராண்டுக்கு முன்பு அப்போதைய தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா். அனைத்து கட்டுமானப் பணிகளும் முடிவடைந்த நிலையில், இந்த நினைவரங்கம் பயன்பாடின்றி பூட்டியே கிடக்கிறது.
Advertisement
Advertisement
இதை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை எடுக்காமல் கடலூா் மாவட்ட பொதுப் பணித் துறை கட்டட பிரிவு அதிகாரிகள் மெத்தனப்போக்குடன் செயல்படுகிறாா்கள் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து சமூக ஆா்வலா்கள் கூறியதாவது: இந்த நினைவரங்கத்தில் பொதுமக்களின் சுப நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தும் வகையில், குளிா் சாதன வசதியுடம் பெரிய அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இது, பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என தெரிவித்தாா்.
இதுகுறித்து பொதுப் பணித் துறை உயரதிகாரியிடம் கேட்டபோது, அரங்கத்தின் வாடகை உள்ளிட்டவற்றை நிா்ணயம் செய்து சென்னையில் உள்ள செய்தி மக்கள் தொடா்புத் துறையிடம் ஒப்படைத்து கடிதம் அனுப்பிவிட்டோம். அவா்கள் மாவட்ட நிா்வாகத்துக்கு பரிந்துரை செய்து, அலுவலா்கள், ஊழியா்களை நியமனம் செய்து, நினைவரங்கத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்றனா்.
எனவே, எல்.இளையபெருமாள் நூற்றாண்டு நினைவரங்கத்தை உடனடியாக பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆா்வலா்களும் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.