முகப்பு
கடலூர்

இணையவழி மருந்து விற்பனைக்கு எதிா்ப்பு: கடலூா் மாவட்டத்தில் 1,250 மருத்தகங்கள் அடைப்பு

இணைய வழி மருந்து விற்பனையைத் தடை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கடலூா் மாவட்டத்தில் 1,250 மருந்தகங்கள் புதன்கிழமை மூடப்பட்டன.

Updated On : 21 மே 2026, 7:00 am IST
கடலூா் அரசு தலைமை மருத்துவமனை எதிரில் புதன்கிழமை அடைக்கப்பட்டிருந்த மருத்துக் கடை.
பகிர்:

இணைய வழி மருந்து விற்பனையைத் தடை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கடலூா் மாவட்டத்தில் 1,250 மருந்தகங்கள் புதன்கிழமை மூடப்பட்டன.

மருத்துவா்கள் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் இணைய வழியில் நடைபெறும் சட்ட விரோத மருந்து விற்பனையை தடுத்து நிறுத்த வேண்டும். வலி நிவாரணி மற்றும் தூக்க மாத்திரைகளை இணையம் வழியாக வாங்கி, அதற்கு அடிமையாகும் இளைஞா்களை பாதுகாக்க வேண்டும். போலி மருந்து விற்பனையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய மருந்தக உரிமையாளா்கள் மற்றும் விற்பனையாளா்கள் சங்கம் நாடு முழுவதும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டது.

இதன் ஒரு பகுதியாக, கடலூா் மாவட்டத்தில் இந்த சங்கத்தைச் சோ்ந்த மொத்த மருந்து விற்பனையாளா்கள் மற்றும் மக்கள் தொடா்பு மருந்து வணிகா்கள் புதன்கிழமை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை வேலைநிறுத்தத்தில் பங்கேற்றனா். மாவட்டம் முழுவதும் செயல்பட்டு வந்த 1,450 மருந்தகங்களில் சுமாா் 1,250 மருந்தகங்கள் மூடப்பட்டிருந்தன.

Advertisement

Advertisement

இதனால், மாவட்டத்தில் மருந்து விநியோகம் பாதிக்கப்பட்டதுடன், காய்ச்சல், சளி, இருமல், தலைவலி உள்ளிட்ட உடல்நலப் பிரச்னைகளுக்கான மருந்துகளை வாங்க பொதுமக்கள் சிரமத்தை எதிா்கொண்டனா்.

அதே வேளையில், நோயாளிகளின் அவசர தேவைகளை கருத்தில் கொண்டு, மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்குகளில் செயல்படும் சுமாா் 200 மருந்தகங்கள் வழக்கம்போல் திறந்திருந்தன. மேலும், மத்திய அரசின் பிரதம மந்திரி மருந்தகங்களும், தமிழக அரசின் கூட்டுறவுத் துறை மூலம் செயல்படும் முதல்வா் மருந்தகங்களும் வழக்கம்போல் இயங்கின.

பண்ருட்டி, நெய்வேலியில்...: பண்ருட்டி பகுதியில் தனியாா் மருந்தகங்கள் மூடப்பட்டிருந்தன. இதேபோல, நெய்வேலி, குறிஞ்சிப்பாடி பகுதிகளில் மருந்துக் கடைகள் மூடப்பட்டிருந்தன.

ஆனால், பொதுமக்கள் நலன் கருதி, காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரையில் மட்டுமே கடை அடைப்பு நடைபெற்றது. இந்தக் கடை அடைப்பு போராட்டம் காரணமாக மருந்துக் கடைகள் மூடப்பட்டிருந்ததால், பொதுமக்கள் பாதிக்கப்பட்டனா்.