காரைக்கால், டிச. 20: சனியைப் போல் கொடுப்பாரும் இல்லை கெடுப்பாரும் இல்லை என்று கூறுவதற்கேற்ப அல்லாமல் வாழ்வில் கெட்டு நிற்போரையும் தலைநிமிர வைக்கும் ஆற்றல் படைத்தவராக உள்ளவர் நவகிரஹ நாயகரான ஸ்ரீ சனீஸ்வர பகவான்.
நவகிரஹங்களில் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பிரவேசிப்பதில் அதிக காலம் எடுத்துக் கொள்ளக் கூடியவர் சனிபகவான். மிக மெதுவாக இரண்டரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்வதால் சனி பகவானுக்கு மந்தன் என்ற மற்றொரு பெயரும் உண்டு.
சனி பகவான் மிக நேர்மையானவர், தவறிழைப்பவர்களைத் தண்டிக்கக் கூடியவர், நலம் வேண்டுவோருக்கு ஏராளமாக வாரி வழங்குபவர் என்ற பெருமை உள்ளதால் ஸ்ரீ சனீஸ்வரபகவான் ஈஸ்வர பட்டத்துடன் அருள்பாலிக்கும் திருநள்ளாறு மிகுந்த பெருமையை பெறுகிறது.
தன்னைப் பிடித்திருந்த சனி அகல, நளசக்கரவர்த்தி திருநள்ளாறு வந்து அங்குள்ள தீர்த்தத்தில் நீராடி, பிரதான தெய்வமாக அருள்பாலிக்கும் ஸ்ரீ தர்பாரண்யேசுவரரை வழிபட்ட காரணத்தால், சனி விலகியது.
இந்த காரணத்தால் திருநள்ளாற்றில் உள்ள தீர்த்தத்துக்கு நளதீர்த்தம் என்ற பெயரும் உண்டானது. திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேசுவரர் கோயிலில் ஸ்ரீ சனீஸ்வர பகவான் தனி சன்னதி கொண்டு அருள்பாலிக்கிறார். இக்கோயிலில் வேறு நவகிரஹங்கள் பிரதிஷ்டை கிடையாது. கோயிலின் தலவிருட்சம் தர்ப்பை.
பொதுவாக உக்ரமூர்த்தியாகிய சனிபகவான் இக்கோயிலில் அனுக்ரக மூர்த்தியாக கிழக்கு நோக்கி அபயமுத்திரையுடன் அருள் வழங்குகிறார். நளசக்கரவர்த்திக்கு சனி தொல்லை நீங்கியவுடன் இறைவனை வணங்கி வரம் வேண்டினார். அப்போது தம்மைப் போல் இங்கு வந்து இறைவனையும், சனீஸ்வரனையும் வணங்கும் பக்தர்களுக்கு துன்பம் போக்கி நலம் சேர்க்க வேண்டுமென கோரியதை இறைவன் ஏற்று அவ்வாறே வரமளித்தார் என்று கோயில் வரலாறு கூறுகிறது.
தங்கக் காக வாகனம்: சனி பகவானுக்குக் காகமே வாகனம். இக்கோயிலில் தங்க காக வாகனம் உள்ளது. சனிப்பெயர்ச்சி விழாவின்போது ஸ்ரீ சனீஸ்வரபகவான் (உத்சவர்) தங்கக் காக வாகனத்தில் வீற்றிருந்தவாறு பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
மூலவரை தரிசிப்பதுபோன் எந்த நேரத்திலும் உத்சவரை இக்கோயில் அற்புதமான வாகனத்திலிருந்தவாறு திரிசிக்க முடியாது. ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாத பிரமோத்சவத்தின் ஒரு நாளில் ஸ்ரீ சனீஸ்வர பகவான் தமது வாகனமான காகம் (தங்கத்தாலானது) மீது அமர்ந்து நான்கு மாட வீதியுலா செல்கிறார்.
இரண்டரை ஆண்டுகளுக்கொரு முறை நடைபெறும் சனிப்பெயர்ச்சி விழாவின் போது மட்டுமே தங்கக் காக வாகனத்தில் சனீஸ்வர பகவான் வசந்த மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
இவ்வகையில் பகவானை உரிய வாகனத்தில் இருந்தவாறு தரிசிப்பது அரிது என்பதால், இக்காலகட்டத்தில் உத்சவரை காண வருவோர் அதிகம் என கூறலாம்.
இரண்டரை ஆண்டுகளுக்கொரு முறை நடைபெறும் சனிப்பெயர்ச்சி விழாவின் போது நாடு முழுவதும் இருந்து பக்தர்கள் திருநள்ளாறு கோயிலுக்கு வருவது வழக்கம். இதன்படி வாக்கிய பஞ்சாங்கப்படி புதன்கிழமை காலை 7.51 மணிக்கு சனிப்பெயர்ச்சி விழா இக்கோயிலில் நடைபெறுகிறது.
திருநள்ளாறு ஸ்ரீ சனீஸ்வரபகவான் அருள்பாலிக்கும் ஸ்ரீ தர்பாரண்யேசுவரர் கோயில் ஏழுநிலை ராஜகோபுரம் கொண்டது. நளன் குளம் தற்போது புனரமைப்பு செய்யப்பட்டு ஒரே நேரத்தில் 10 ஆயிரம் பக்தர்கள் நீராடும் வகையில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இக்கோயில் புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் காரைக்காலில் இருந்து 6 கிலோ மீட்டர் மேற்கே அமைந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.