முகப்பு
புதுச்சேரி

இந்தியப் பெருங்கடல் பகுதியை வளர்ச்சிக்கான தளமாக மாற்ற வேண்டும்

இந்திய பெருங்கடல் பகுதியை போட்டி போட்டு ஆக்கிரமிக்கும் தளமாக மாற்றாமல், வளர்ச்சிக்கான தளமாக மாற்ற வேண்டும் என்று தென்ஆப்பிரிக்க வெளியுறவுத் துறை துணை இயக்குநர் ஜெனரல் அனில் சுக்லால் வேண்டுகோள்

Updated On : 5 ஏப்ரல் 2018, 9:34 am IST
பகிர்:

இந்திய பெருங்கடல் பகுதியை போட்டி போட்டு ஆக்கிரமிக்கும் தளமாக மாற்றாமல், வளர்ச்சிக்கான தளமாக மாற்ற வேண்டும் என்று தென்ஆப்பிரிக்க வெளியுறவுத் துறை துணை இயக்குநர் ஜெனரல் அனில் சுக்லால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்தியப் பெருங்கடல் அமைப்பு (ஐஓஆர்ஏ) , பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்ஆப்பிரிக்க நாடுகளின் கூட்டமைப்பு ( (பிரிக்ஸ்) அமைப்பு ஆகியவற்றுக்கான தலைமை பொறுப்பை தென்ஆப்பிரிக்கா வகித்து வருகிறது. பிரிக்ஸ் கூட்டமைப்பின் 10}ஆவது உச்சி மாநாடு தென்ஆப்பிரிக்க நாட்டின் தலைநகரான டர்பனில் வருகிற ஜூலை மாதம் நடைபெறவுள்ளது. அதேபோல இந்திய பெருங்கடல் நாடுகள் அமைப்பின் உச்சி மாநாடும் விரைவில் நடைபெறவுள்ளது.
இதையொட்டி இந்த மாநாட்டில் விவாதிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள் தொடர்பாக பிரிக்ஸ் நாடுகளில் உள்ள முக்கிய அமைப்புகளுடன் விவாதம் நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக புதுவை பல்கலைக்கழகத்தில் புதுதில்லி வளரும் நாடுகளுக்கான ஆராய்ச்சி மற்றும் தகவல் அமைப்பு, புதுவை மத்திய பல்கலைக்கழக கடல்சார் ஆராய்ச்சி மையம் ஆகியவை இணைந்து இந்த விவாதத்துக்கு புதன்கிழமை ஏற்பாடு செய்திருந்தன. இந்த விவாத அரங்கை தென்னாப்பிரிக்கா நாட்டின் வெளியுறவுத் துறை துணை இயக்குநர் ஜெனரல் அனில்சுக்லால் குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தார். 
பின்னர் அவர் பேசியதாவது: பிரிக்ஸ் கூட்டப்பில் 5 நாடுகளும், இந்திய பெருங்கடல் நாடுகள் கூட்டமைப்பில் 21 நாடுகளும் உள்ளன. உலக மக்கள்தொகையில் 43 சதவீதம் பிரிக்ஸ் நாடுகளில் தான் உள்ளன. அதேபோல உலக மக்கள்தொகையில் 33 சதவீதம் இந்திய பெருங்கடல் நாடுகளில் உள்ளன. எனவே, இந்த இரு அமைப்புகளில் உள்ள நாடுகளால் உலக பொருளாதாரத்தில் முக்கியப் பங்கு வகிக்க முடியும். இதுகுறித்து பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் விவாதிக்கப்படும்.
ஏற்கெனவே பிரிக்ஸ் கூட்டமைப்பால் உருவாக்கப்பட்டுள்ள ஆசிய முன்னேற்ற வங்கி, பிரிக்ஸ் முன்னேற்ற வங்கி ஆகியவற்றை பொருளாதார ரீதியாக முன்னேற்றம் செய்ய எவ்வாறு நிர்வகிப்பது என்பது குறித்தும் பேசப்படும். புதிய அறிவியல் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி பொருளாதார வளர்ச்சியை இந்த நாடுகளால் எட்ட முடியும்.
இந்த நாடுகளில் வறுமை, வேலையில்லா திண்டாட்டம், பருவநிலை மாற்ற பிரச்னைகள் இருந்தாலும் இதையெல்லாம் லாவகமாக சந்தித்து அடுத்தக்கட்ட வளர்ச்சியை அடைய வேண்டும். மேலும், இந்த நாடுகளில் இப்போது சைபர் குற்றங்கள், சைபர் தீவிரவாதம் அதிகரித்துள்ளன. இதை கட்டுப்படுத்துவது குறித்தும் மாநாட்டில் விவாதிக்கப்படும்.
கடல் வளமான மீன், இயற்கை எரிவாயு, எண்ணெய் வளம் உள்ளிட்டவற்றை பயன்படுத்தினால்தான் பொருளாதார வளர்ச்சியை எளிதாக எட்ட முடியும். இந்திய பெருங்கடலை ஆக்கிரமித்து தங்களுக்கு சாதகமான, தங்களது கட்டுப்பாட்டு பகுதியாக மாற்ற சில நாடுகள் எண்ணுகின்றன. இந்தப் பகுதியை போட்டிக்கான தளமாக கருதாமல், வளர்ச்சிக்கான தளமாக மாற்ற இந்திய பெருங்கடல் நாடுகள் முயற்சி செய்ய வேண்டும் என்றார் அவர்.
இந்தியாவுக்கான தென்ஆப்பிரிக்க தூதர் என்.மன்சினி பேசும்போது, பிரிக்ஸ், இந்திய பெருங்கடல் நாடுகளில் பெண்கள் நல்ல முன்னேற்றம் அடைந்து வருகின்றனர். முடிவு எடுக்கும் இடங்களிலும், வலிமைமிக்க தொழில்முனைவோராகவும், அரசுத்துறை உயர் பொறுப்புகளுக்கும் பெண்கள் வந்துள்ளனர் என்றார் அவர்.
இந்திய வெளியுறவுத் துறை இணைச் செயலர் அலோக் ஏ.திம்ரி பேசும்போது, இந்திய கடல் சார்ந்த வெளியுறவுக்கொள்கையை அரசு அதிகாரிகள் மட்டுமே வகுக்க முடியாது. பல்கலைக்கழக மாணவர்களும், ஆராய்ச்சியாளர்களும் இணைந்து பணியாற்றினால் சிறப்பான கொள்கையை உருவாக்க முடியும் என்றார் அவர்.
வளரும் நாடுகளுக்கான ஆராய்ச்சி மற்றும் தகவல் அமைப்பு பேராசிரியர் எஸ்.கே.மொகந்தி, பல்கலைக்கழக துணைவேந்தர் (பொ) நளினி தம்பி, கடல்சார் ஆராய்ச்சி மைய ஒருங்கிணைப்பாளர் ஏ.சுப்ரமணியம் ராஜு, உதவி பேராசிரியர் எஸ்.ஐ.ஹூமாயுன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments