புதுச்சேரி

பொங்கல் துணிக்கு பதிலாக பணம்: ஒரு லட்சம் பேருக்கு ரூ.9 கோடி வழங்கத் திட்டம்

தினமணி

புதுச்சேரியில் அரசு சார்பில் ஆதிதிராவிடர்களுக்கு பொங்கல் துணிக்கு பதிலாக அதற்குரிய பணத்தை குடும்பத் தலைவரின் வங்கிக் கணக்கில் செலுத்தும் திட்டம் வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதன் மூலம் மாநிலம் முழுவதும் ஒரு லட்சம் பயனாளிகளுக்கு ரூ.9 கோடியை வங்கிகளில் வரவு வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
 புதுவையில் ஆண்டுதோறும் தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகைகளின்போது ஆதிதிராவிடர் சமூகத்தைச் சார்ந்த 18 வயது பூர்த்தியடைந்த ஆண்களுக்கு வேட்டியும், பெண்களுக்கு சேலையும் ஆதிதிராவிட நலத்துறை சார்பில் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.
 இலவச வேட்டி, சேலை வாங்குவதில் முறைகேடுகள் நடப்பதாக வந்த புகாரையடுத்து, நிகழ் ஆண்டு பொங்கலுக்கு இலவச வேட்டி, சேலைக்கு பதிலாக அதற்குரிய தொகை வழங்கப்பட உள்ளது. இந்தத்தொகை குடும்பத்தலைவரின் வங்கிக் கணக்கில் நேரிடையாக செலுத்தப்படும்.
 இதன் தொடக்க நிகழ்ச்சி புதுவை சட்டப்பேரவை வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் முதல்வர் வே.நாராயணசாமி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு திட்டத்தை தொடக்கி வைத்தார்.
 சட்டப்பேரவைத் தலைவர் வெ.வைத்திலிங்கம், அமைச்சர் மு.கந்தசாமி, சட்டப்பேரவை துணைத் தலைவர் வே.பொ.சிவக்கொழுந்து, எம்.எல்.ஏ.க்கள் இரா.சிவா, ஜெயமூர்த்தி, புதுவை அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி ஜான்குமார், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் நீல கங்காதரன், ஆதிதிராவிட நலத்துறை இயக்குநர் ரகுநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 பணம் பெறுவது எப்படி?
 பொங்கல் துணிக்கான பணம் பெறுவது தொடர்பாக ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநர் ரகுநாதன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
 புதுச்சேரி ஆதிதிராவிடர் நலத் துறை சார்பில் இலவச வேட்டி, சேலைக்கான தொகை குடும்பத் தலைவரின் வங்கிக் கணக்கில் செலுத்த அரசால் முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, ஆதிதிராவிட பயனாளிகள் தங்கள் தொகுதியில் உள்ள அங்கன்வாடி மையங்களை அணுகி விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து ஆதார் அட்டை, உணவு பங்கீட்டு அட்டை, வங்கி சேமிப்பு கணக்குப் புத்தகம் ஆகியவற்றின் நகல்களுடன் இணைத்து உடனடியாக அங்கன்வாடி மையங்களில் சமர்ப்பிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியன் - 2 வெளியீட்டுத் தேதி இதுதானா?

தமிழ்ப் படங்களின் பாணியில் சிஎஸ்கேவை கிண்டல் செய்யும் பஞ்சாப்!

தில்லி அரசு - ஆளுநர் இடையே மீண்டும் மோதல்: மகளிர் ஆணையத்தின் 223 ஊழியர்கள் நீக்கம்!

டி20 உலகக் கோப்பை: கனடாவின் அணி அறிவிப்பு!

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

SCROLL FOR NEXT