படுதார்கொல்லை சிற்றேரி நிலத்திலிருந்து மணல் எடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை
படுதார்கொல்லை சிற்றேரி நிலத்திலிருந்து மணல் எடுத்து நீரைத் தேக்கிவைக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட நிர்வாகத்துக்கு அமைச்சர் அறிவுறுத்தினார்.
படுதார்கொல்லை சிற்றேரி நிலத்திலிருந்து மணல் எடுத்து நீரைத் தேக்கிவைக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட நிர்வாகத்துக்கு அமைச்சர் அறிவுறுத்தினார்.
காரைக்கால் மாவட்டத்தில், காவிரி நீர் வரத்துக்கு முன்பாக நீர்நிலைகள் தூர்வாரும் பணியை திருநள்ளாறு பகுதி குமாரக்குடி கிராமத்தில் வேளாண் துறை அமைச்சர் ஆர். கமலக்கண்ணன் சனிக்கிழமை தொடங்கிவைத்தார்.
2 -ஆவது நிகழ்ச்சியாக, நிரவி - திருப்பட்டினம் தொகுதியில் உள்ள படுதார்கொல்லை கிராமத்தில் வாய்க்கால்கள் தூர்வாரும் பணியை தொடங்கிவைக்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் பங்கேற்றார்.
சட்டப் பேரவை உறுப்பினரும், புதுச்சேரி மின் திறல் குழுமத் தலைவருமான கீதாஆனந்தன், மாவட்ட ஆட்சியர் ஆர். கேசவன், திருப்பட்டினம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ஜான் அரேலியஸ், பொதுப் பணித்துறை அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.
மாவட்டத்தில் வாய்க்கால், வடிகால்கள் எவை முக்கியமானது என்பதை கண்டறிந்து தூர்வாரும் பணியை பொதுப்பணித்துறை போர்க்கால முறையில் செய்ய வேண்டும். அதற்கான கவனத்தை பொதுப் பணித் துறையினர் கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து, படுதார்கொல்லை கிராமத்தில் அரசு, சிற்றேரி அமைக்க ஆர்ஜிதம் செய்துள்ள 35 ஏக்கர் நிலத்தை அமைச்சர் பார்வையிட்டார்.
இதுகுறித்து அமைச்சர் ஆர். கமலக்கண்ணன் கூறும்போது, புதிதாக ஏரிகள் அமைப்பது, இருக்கும் ஏரியை மேம்படுத்துவது போன்றவற்றில் அரசு கவனம் செலுத்துகிறது. நிதிநிலை அறிக்கையில் இதற்கான திட்ட அறிவிப்புகள் செய்யப்பட்டுள்ளன. காவிரி நீர் வரத்தை முழுமையாக கடைமடை ஆறுகள், குளங்களில் தேக்கிவைக்கத் தேவையான நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளையும், பொதுமக்களையும் கேட்டுக்கொண்டுள்ளேன்.
படுதார்கொல்லை ஏரிக்கான நிலத்தை சிறிதளவு வெட்டிவிட்டு கிடப்பில் போட்டுவிட்டனர். இதை ஆழமாக வெட்டுவதற்கேற்ப அரசு நிதி ஒதுக்கி செயல்படுத்தும் வரை காத்திருக்காமல், பொதுமக்கள் குறைந்த கட்டணம் செலுத்தி, உரிய அனுமதி பெற்று மணல் எடுத்துக்கொள்ள தேவையான நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த ஏரியில் நீர் தேக்கப்பட்டால், இந்த சுற்றுவட்டாரத்தில் நிலத்தடி நீர் மட்டம் உயர்வு, குடிநீர் பிரச்னைக்குத் தீர்வு, விவசாயிகளுக்குப் பயன்பாடு உள்ளிட்டவை ஏற்படும் என்றார் அமைச்சர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.