புதுச்சேரி

ஆசிரியர்கள் சமூகப் பொறுப்புடன் செயல்பட வேண்டும்: பள்ளிக் கல்வித் துறைச் செயலர்

DIN

அரசுப் பள்ளி ஆசிரியர்கள் சமூகப் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என புதுவை அரசின் கல்வித் துறைச் செயலர் அ. அன்பரசு தெரிவித்தார்.
 புதுவையில் உள்ள அரசுப் பள்ளிகளின் தலைமையாசிரியர்களுடனான ஆலோசனைக் கூட்டம், புதுச்சேரியில் உள்ள கல்வித் துறை அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி சதவீதத்தை தக்கவைப்பது, கல்வித் தரம் மற்றும் சேர்க்கையை உயர்த்துவது உள்ளிட்டவை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
 இதில் புதுவை அரசின் கல்வித் துறைச் செயலர் அ. அன்பரசு பேசியதாவது:
 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் புதுவை மாநிலப் பள்ளிகள் கடந்தாண்டை விட 7 சதவீதம் அதிகமாக 97.57 சதவீத தேர்ச்சியைப் பெற்றுள்ளன. இதில் அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் அளப்பரியது. இந்த அதிக சதவீத தேர்ச்சி அரசுப் பள்ளிகளின் மீது பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும்.
 இந்த நிலையை தக்க வைத்துக் கொள்ள ஆசிரியர்கள் முயற்சிக்க வேண்டும். அரசுப் பள்ளிகளில் உள்ள பிரச்னைகளை களைய நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கற்கும் விதம், குடும்பச் சூழல், சமூகச் சூழல் சார்ந்த பிரச்னைகளை அலசி ஆராய வேண்டும். இதனடிப்படையில் ஆசிரியர்கள், மாணவர்களின் குடும்ப உறுப்பினர்களை அழைத்துப் பேச வேண்டும். சமூகப் பொறுப்புணர்வுடன் ஆசிரியர்கள் கற்றலை போதித்தால் இருக்கும் நிலையை தக்க வைப்பதுடன், மேலும் வளர்ச்சியை அடைய முடியும்.
 அரசுப் பள்ளிகளில் கற்றல் குறைபாடுடையவர்களை கண்டறிந்து, அவர்களுக்கு மகிழ்ச்சியான கற்றலை செயல்படுத்தி, சிறப்பு வகுப்புகளை எடுக்க வேண்டும்.
 கடமையை உணர்ந்து, அர்ப்பணிப்பு உணர்வு, தியாக மனப்பான்மையுடன் கல்வியை கற்பிக்க வேண்டும் என்றார் அன்பரசு.
 முன்னதாக, கூட்டத்துக்கு பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் பி.டி. ருத்ரகவுடு தலைமை வகித்தார். இணை இயக்குநர் எம். குப்புசாமி, புதுச்சேரி அரசுப் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
 விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் எடுப்பது கண்டிக்கத்தக்கது
 இதைத் தொடர்ந்து கல்வித் துறைச் செயலர் அன்பரசு செய்தியாளர்களிடம் கூறியதாவது: பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் புதுவை அரசுப் பள்ளிகள் சிறப்பான இடத்தைப் பிடித்துள்ளன. அரசுப் பள்ளிகளை மேலும் சிறப்பாக செயல்படுத்தி, தனியார் பள்ளிகளின் அளவுக்கு முன்னேற்றுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.
 அடுத்ததாக, காரைக்கால் பள்ளி தலைமையாசிரியர்களுடனான கூட்டம் நடைபெறவுள்ளது.
 தற்போதைய ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில், அடிப்படைக் கல்வி முதல் மாணவர்களின் கற்கும் திறனை மேம்படுத்துதல், கற்றல் குறைபாடுள்ள குழந்தைகளை குழுவாக்கி சிறப்புப் பயிற்சி அளிப்பது, ஒவ்வொரு மாணவருக்கும் ஓர்ஆசிரியரை அமர்த்தி, கண்காணிப்பது உள்ளிட்டவற்றை மேற்கொள்ளவுள்ளோம்.
 பள்ளிகளில் காலியாக உள்ள 300 ஆசிரியர்களின் பணியிடங்களை நிரப்ப முடிவு செய்துள்ளோம். தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிந்த பிறகு உரிய அறிவிப்பு வெளியிடப்படும்.
 தனியார் பள்ளிகளில் 9 ஆம் வகுப்பு வரை படித்துவிட்டு, குறைவான கற்றல் உள்ள காரணத்துக்காக, பத்தாம் வகுப்பு படிக்க விடாமல் வெளியில் அனுப்புவதும், விடுமுறை நாள்களில் சிறப்பு வகுப்புகள் நடத்துவதும் கண்டிக்கத்தக்கது. இது குறித்து அனைத்துப் பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளோம். விரைவில் இதற்காக நடவடிக்கை எடுக்க பரிசீலிப்போம் என்றார் அன்பரசு.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய நிகழ்ச்சி

வியாபாரி தற்கொலை

இளைஞரை அரிவாளால் வெட்டியவா் கைது

கும்பகோணத்தில் பச்சைக்காளி, பவளக்காளி வீதியுலா

சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு

SCROLL FOR NEXT