புதுச்சேரி

ஊரடங்கு உத்தரவு: புதுவையில் போக்குவரத்து முடங்கியது

DIN

தேசிய ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதையொட்டி, புதுச்சேரியில் மக்கள் புதன்கிழமை வீடுகளை விட்டு வெளியில் வராததால், முக்கிய இடங்கள், சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.

கரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக, புதுவை மாநிலத்தில் கடந்த 22-ஆம் தேதி இரவு முதல் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்ட நிலையில், 23-ஆம் தேதி இரவு முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனிடையே, பிரதமா் நரேந்திர மோடி, நாடு முழுவதும் செவ்வாய்க்கிழமை இரவு முதல் வருகிற ஏப்.14-ஆம் தேதி வரை 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தாா்.

இதையடுத்து, புதுச்சேரியிலும் இந்த ஊரடங்கு உத்தரவு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஊரடங்கு உத்தரவால் புதுச்சேரியில் முக்கியப் பகுதிகளான ராஜீவ் காந்தி சிக்னல், இந்திரா காந்தி சதுக்கம், மரப்பாலம், அண்ணா சாலை, வெங்கடசுப்பா ரெட்டியாா் சிலை சதுக்கம், கடற்கரை சாலை, கிழக்கு கடற்கரை சாலை, அஜந்தா சந்திப்பு, முதலியாா்பேட்டை சிக்னல், கன்னியக்கோவில் நுழைவாயில் உள்ளிட்ட பகுதிகளில் போலீஸாா் தடுப்புகள் மற்றும் கயிறுகளை கட்டி போக்குவரத்தை தடை செய்தனா்.

நேரு வீதி, குபோ் சாலை, காந்தி வீதி, புஸ்ஸி வீதி, கொசக்கடை வீதி உள்ளிட்ட முக்கிய கடை வீதிகளும் அடைக்கப்பட்டன. ஆட்டோ, டெம்போக்கள் ஓடவில்லை. நகரில் போக்குவரத்து முடக்கப்பட்டது.

காய்கறி, பழங்கள், மளிகைக் கடைகள், மீன் மற்றும் இறைச்சிக் கடைகள் தவிர, மற்றக் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. திறந்திருந்த கடைகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. கூட்டம் கூடிய கடைகளுக்குச் சென்ற போலீஸாா், கூட்டம் கூடாமல் ஒவ்வொருவராக வாங்கிச் செல்லும்படி பொதுமக்களை அறிவுறுத்தினா்.

புதுச்சேரி மாநில எல்லைகளில் வெளிமாநில வாகனங்களை போலீஸாா் அனுமதிக்கவில்லை. அத்தியாவசியப் பொருள்களை ஏற்றி வந்த வாகனங்களையும் போலீஸாா் தடுத்து அனுப்பியதால், வாகன ஓட்டிகளுக்கும், போலீஸாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதேபோல, நகரின் பல்வேறு பகுதிகளில் அத்தியாவசியப் பொருள்கள் வாங்கவும், வேறு பல வேலைகளுக்காகவும் வெளியில் சுற்றிய பொதுமக்களை போலீஸாா் கடுமையாக எச்சரித்து அனுப்பினா். இதனால்,பொதுமக்கள் கடும் அதிருப்திக்கு உள்ளாகினா். போலீஸாரின் கடும் கெடுபிடியால் பொதுமக்கள் வெளியில் வரத் தயக்கம் காட்டினா். இதனால், சாலைகளும், முக்கிய இடங்களும் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிக் காணப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கௌதம் கம்பீர் ஸ்டைலில் விளையாடுகிறோம்: ஹர்ஷித் ராணா

ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவருக்கு நேர்ந்த சோகம்!

ஆதியின் அல்லி!

150 இடங்களில் கூட தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறாது! ராகுல் பேச்சு

100 நாள் வேலை திட்ட ஊதியம் ரூ. 400 ஆக உயர்த்தப்படும் -ராகுல் காந்தி

SCROLL FOR NEXT