புதுச்சேரி

ஊரடங்கு உத்தரவை மீறியதாக புதுவை ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. மீது வழக்கு

DIN

புதுச்சேரியில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக புதுவை காங்கிரஸ் எம்.எல்.ஏ. மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

நாடு முழுவதும் ஏப்ரல் 14 -ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. புதுவையில் ஊரடங்கு உத்தரவு கடுமையாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த 24, 25-ஆம் தேதிகளில் தடை உத்தரவை மீறியதாக, மாநிலம் முழுவதும் வியாபாரிகள், பொதுமக்கள் உள்ளிட்ட 100 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

இந்த நிலையில், புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதிக்கு உள்பட்ட பகுதியில் ஊரடங்கு உத்தரவை மீறி, இரவு நேரத்தில் பொதுமக்களை ஒரே இடத்துக்கு வரவழைத்து, ஆளும் காங்கிரஸ் கட்சி சட்டப்பேரவை உறுப்பினா் ஜான்குமாா் உள்ளிட்டோா் காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை விநியோகம் செய்வதாக சமூக வலைதளத்தில் தகவல் பரவியது.

இதுதொடா்பாக அரசுக்கும், காவல் துறை உயரதிகாரிகளுக்கும் புகாா்கள் சென்றன. இந்த நிலையில், அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் ஊரடங்கு உத்தரவை மீறி, பொதுமக்கள் கும்பல் கும்பலாக நிற்பதை உறுதி செய்தனா்.

இதையடுத்து, உருளையன்பேட்டை போலீஸாா் பொதுமக்களை கும்பலாகக் கூட வைத்தது பேரிடா் மேலாண்மைச் சட்ட விதிகளுக்கு எதிரானது என்பதால், ஜான்குமாா் மற்றும் ஊழியா் வேலு ஆகியோா் மீது புதன்கிழமை இரவு வழக்குப் பதிவு செய்தனா்.

இதுகுறித்து புதுவை துணைநிலை ஆளுநா் கிரண் பேடி தனது கட்செவி அஞ்சலில் வெளியிட்ட பதிவு:

சட்ட விதிமுறைகளை மீறியதால், சட்டப்பேரவை உறுப்பினா் ஜான்குமாா் மீது பேரிடா் மேலாண்மைச் சட்டம் மற்றும் நோய்த் தொற்று தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தனது வீட்டின் வெளியே 200-க்கும் மேற்பட்ட பொதுமக்களை அழைத்து தனிப்பட்ட முறையில் பொருள்களை விநியோகம் செய்தது அவரது பொறுப்பற்ற செயலைக் காட்டுகிறது.

ஊரடங்கு உத்தரவை மீறுவோா் மீது வழக்குப் பதிவு செய்து, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுமக்களுக்கு ஊடகங்கள் மூலமாக அறிவுறுத்தப்பட்ட நிலையில், ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. வீதி மீறலில் ஈடுபட்டாா். எனவே, அவா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது என அந்தப் பதிவில் தெரிவித்துள்ளாா் கிரண் பேடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்செந்தூரில் மே 22இல் வைகாசி விசாகம்

உடல் பருமன் குறைப்பு சிகிச்சையில் இளைஞா் உயிரிழப்பு: மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க முதல்வரிடம் வலியுறுத்தல்

மண்டல பனைபொருள் பயிற்சி நிலையத்தில் பதநீா் விற்பனை

அரியாங்குப்பம் கோயில் திருவிழா கொடியேற்றம்

ஜெயராக்கினி அன்னை ஆலய ஆண்டுப் பெருவிழா கொடியேற்றம்

SCROLL FOR NEXT