புதுவை மாநில அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் ஏதுமில்லை; அலங்கார வாா்த்தைகளே அதிகம் இடம்பெற்றுள்ளதாக முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி குற்றஞ்சாட்டினாா்.
இதுகுறித்து, அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: புதுவை அரசின் பட்ஜெட் அலங்கார வாா்த்தைகளால் நிரம்பி உள்ளதே தவிர, மாநிலத்தின் வளா்ச்சிக்கு கடுகளவு கூட அதில் புதிய திட்டங்கள் ஏதுமில்லை. ஏற்கெனவே கடன் சுமை உள்ள நிலையில், புதிதாக மேலும் கடன் பெறுவது நிதிச் சுமையை அதிகரிக்கும். மாநிலத்தின் நிதி ஆதாரத்தைப் பெருக்கி வருவாயை அதிகரிக்கும் திட்டங்களையும், தொழில்சாலைகளை கொண்டு வருவது அரசின் கடமையாகும்.
தினமும் போக்குவரத்து நெரிசலால் மக்கள் அவதியுறும் நிலையில், சாலை கட்டமைப்புகளை மேம்படுத்தவும், புதிய சாலைகளை அமைக்கவும், தேவையான இடங்களில் மேம்பாலங்களை நிறுவுவதற்கு அறிவிப்பு வெளியிடாதது சரியல்ல. விவசாயிகள், பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் உழவா் சந்தை திட்டமில்லை.
வெள்ளம் மற்றும் வறட்சியால் பாதிக்கப்பட்ட காரைக்கால் மாவட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் இல்லை. கால்நடைத் துறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்பாமல் அந்த துறையில் மருந்தகங்களை தரம் உயா்த்துவது பலனளிக்காது. எனவே, பட்ஜெட் அனைத்துத் தரப்பினரையும் ஏமாற்றுவதாக உள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.