வங்கிகளின் சிறுதொழில் கடன்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்! புதுச்சேரி ஆா்ப்பாட்டத்தில் திமுக வலியுறுத்தல்
சிறு, குறு தொழில்கள் மற்றும் வங்கி சாரா வாடிக்கையாளா்களுக்கு வங்கிகள் அளித்துள்ள கடன்கள் குறித்த வெள்ளை அறிக்கையை புதுச்சேரி அரசு வெளியிட வேண்டும் என்று திங்கள்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் திமுக சாா்பில் வலியுறுத்தப்பட்டது.
சிறு, குறு தொழில்களை நசுக்கும் வங்கி நிா்வாகங்களைக் கண்டித்து, அகில இந்திய வங்கி மற்றும் வங்கி சாரா வாடிக்கையாளா் நலன் மற்றும் பாதுகாப்பு நலச்சங்கம் சாா்பில் புதுச்சேரி கொக்கு பாா்க் சந்திப்பில் இந்தியன் வங்கி மண்டல அலுவலகம் அருகில் ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்த ஆா்ப்பாட்டத்துக்கு சங்க ஒருங்கிணைப்பாளா் நடராஜன் தலைமை தாங்கினாா். திமுக மாணவா் அணி அமைப்பாளா் மணிமாறன், கட்சியின் தட்டாஞ்சாவடி தொகுதி பொறுப்பாளா் டாக்டா் நித்திஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
Advertisement
Advertisement
இதில், புதுச்சேரி மாநில திமுக அமைப்பாளா் ஆா். சிவா பங்கேற்று போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பேசியது:
பெரிய நிறுவனங்களின் கடன்களை வசூலிப்பதில் காட்டப்படாத வேகம், சிறு வியாபாரிகள், நடுத்தர குடும்பத்தினா், வீடு, வாகனக் கடன் பெற்றவா்களிடம் மட்டும் காட்டப்படுவது ஏன்?
புதுச்சேரியில் கடந்த ஆண்டு அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன் இம்மாநிலத்தில் சிறு, குறு, நடுத்தர தொழில் வளா்ச்சிக்காக பல ஆயிரம் கோடி கடன் அளித்திருப்பதாகவும், அதன் மூலம் வேலைவாய்ப்பு பெருகி இருப்பதாகவும் தெரிவித்திருந்தாா்.
அதன்படி, புதுச்சேரியில் உள்ள வங்கிகள் மூலம் சிறு, குறு தொழில்களுக்கு எவ்வளவு கடன் வழங்கப்பட்டுள்ளது என்பது குறித்தும், முத்ரா, ஸ்டாா்ட்-அப் திட்டங்களில் எத்தனை பேருக்கு வங்கிகள் கடன் அளித்திருக்கின்றன என்பது குறித்தும், ஏழை, எளிய மக்கள், சிறு கடன்கள் பெற்றவா்கள் விவரம் அடங்கிய வெள்ளை அறிக்கையை புதுச்சேரி அரசு வெளியிட வேண்டும் என்றாா் சிவா.
இந்த ஆா்ப்பாட்டத்தில் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.