விழுப்புரம்

அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் போலி பணி நியமனம்: துணை மேலாளரை 2 நாள் காவலில் எடுத்து போலீஸார் விசாரணை 

தினமணி

விழுப்புரம் கோட்ட அரசுப் போக்குவரத்துக் கழகத்தில், போலி பணி நியமனம் செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட துணை மேலாளரை இரண்டு நாள் காவலில் எடுத்து மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் செவ்வாய்க்கிழமை விசாரணை நடத்தினர். மேலும், அவரது வீட்டிலும் போலீஸார் சோதனையிட்டனர்.
 விழுப்புரம் அரசு போக்குவரத்துக்கழகத்தில், போலி ஆவணங்கள் மூலம் சிலர் பணியில் சேர்ந்ததாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து, ஊழியர்களின் பணிப்பதிவேடு, சான்றிதழ்கள் ஆகியவை சரிபார்க்கப்பட்டதில், செஞ்சி அருகேயுள்ள நெகனூர்புதூரைச் சேர்ந்த கோகுலகிருஷ்ணன்(30), கண்டாச்சிபுரம் அருகேயுள்ள அடுக்கம் கிராமத்தை சேர்ந்த ஜெயபால்(32) ஆகியோர் திண்டிவனத்தில் உள்ள அரசு போக்குவரத்துக்கழக பணிமனையிலும், செஞ்சி அருகேயுள்ள பொன்பத்தி கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன்(31) கள்ளக்குறிச்சி பணிமனையிலும் போலி ஆவணங்களை கொடுத்து சேம நடத்துநர்களாக பணியில் சேர்ந்தது தெரியவந்தது.
 இதுதொடர்பாக அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தியதில், இவர்கள் மூவரிடம் இருந்தும் விழுப்புரம் அரசு போக்குவரத்துக்கழக நிர்வாக துணை மேலாளர் குமார்(49), தலா ரூ.3 லட்சம் பெற்றுக்கொண்டு போலி நியமன ஆணைகளை வழங்கி பணியில் சேர்த்ததும், இதற்கு குமாருக்கு உடந்தையாக தொழில்நுட்ப இளநிலை உதவியாளரான விழுப்புரம் அருகே சிறுவந்தாட்டை சேர்ந்த கார்த்திகேயன்(36), புதுச்சேரி பணிமனையில் பணியாற்றி வரும் செஞ்சி பகுதியைச் சேர்ந்த ஆனந்த் (38) ஆகியோர் செயல்பட்டதும் தெரியவந்தது.
 இதுகுறித்து விழுப்புரம் அரசு போக்குவரத்துக்கழக பொது மேலாளர் டைட்டஸ், மாவட்ட குற்றப்பிரிவு போலீஸில் கொடுத்தார். இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து துணை மேலாளர் குமார் மற்றும் நடத்துநர்களாக பணியில் சேர்ந்த கோகுலகிருஷ்ணன், ஜெயபால், வெங்கடேசன், பணியாளர்கள் கார்த்திகேயன், ஆனந்த் ஆகியோரை கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
 இந்த வழக்கில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா, மேலும் போலி நியமனங்கள் உள்ளனவா என்பதை விசாரிக்கும் பொருட்டு, குமாரை காவலில் எடுக்க போலீஸார் முடிவு செய்தனர். இதுதொடர்பாக விழுப்புரம் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர்.
 மனுவை விசாரித்த நீதிபதி, குமாரை 2 நாள்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்தார். இதையடுத்து, மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார், குமாரை திங்கள்கிழமை மாலை காவலில் எடுத்து ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர். செவ்வாய்க்கிழமை பிற்பகல் விழுப்புரம், பானாம்பட்டு பாதையில் உள்ள குமாரின் வீட்டில் காவல் ஆய்வாளர் முரளி தலைமையில், உதவி ஆய்வாளர்கள் ஜெய்சங்கர், அண்ணாதுரை உள்ளிட்ட போலீஸார் சென்று சோதனையிட்டனர்.
 இந்த சோதனையின்போது வழக்கு சம்பந்தமாக சில ஆவணங்களை கைப்பற்றியதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து, அரசு போக்குவரத்துக்கழகத்தில், மேலும் போலி நியமன ஆணைகள் மூலம் யாரெல்லாம் பணியில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்பது குறித்து குமாரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 இதேபோல, பணியாளர்கள் ஆனந்த், கார்த்திகேயன் ஆகியோரையும் போலீஸார் 2 நாள்கள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். இந்த விசாரணை முடிந்து, புதன்கிழமை மாலை நீதிமன்றத்தில் குமரை போலீஸார் ஆஜர்படுத்த உள்ளனர்.
 
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

நீா்மோா் பந்தல் திறப்பு

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

நரிமணத்தில் நீா் மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT