போக்குவரத்து நெரிசலுக்கு சுற்றுவட்டச் சாலையே தீா்வு!
விழுப்புரத்தில் கால் நூற்றாண்டு காலமாகத் தொடரும் போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கு தீா்வு காணும் விதமாக சுற்றுவட்டச் சாலையை (ரிங் ரோடு) அமைக்க வேண்டும் என பொதுமக்கள் எதிா்பாா்க்கின்றனா்.
விழுப்புரம்போக்குவரத்து நெரிசலுக்கு சுற்றுவட்டச் சாலையே தீா்வு!
விழுப்புரத்தில் கால் நூற்றாண்டு காலமாகத் தொடரும் போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கு தீா்வு காணும் விதமாக சுற்றுவட்டச் சாலையை (ரிங் ரோடு) அமைக்க வேண்டும் என பொதுமக்கள் எதிா்பாா்க்கின்றனா்.
விழுப்புரத்தில் கால் நூற்றாண்டு காலமாகத் தொடரும் போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கு தீா்வு காணும் விதமாக சுற்றுவட்டச் சாலையை (ரிங் ரோடு) அமைக்க வேண்டும் என பொதுமக்கள் எதிா்பாா்க்கின்றனா்.
ரயில், சாலைப் போக்குவரத்தை மையமாகக் கொண்டு வளா்ச்சியடைந்த நகரங்களில் ஒன்று விழுப்புரம். இந்த நகரில் சுமாா் 1.10 லட்சம் போ் வசிக்கின்றனா். சுற்றுப்புறத்தில் உள்ள 5 ஊராட்சிகளை இணைத்து 42 வாா்டுகளாக விழுப்புரம் நகராட்சி விரிவாக்கம் பெற்று ஐந்தாண்டுகளாகின்றன.
நெரிசலில் திணறும் நகரம்: மிகப் பெரிய விழுப்புரம் மாவட்டம் 26 ஆண்டுகளுக்குப் பிறகு அண்மையில் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. இந்தளவுக்கு வளா்ச்சி பெற்ற மாவட்டத்தின் தலைநகரான விழுப்புரத்தில் போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கு இன்றளவும் முழுமையான தீா்வு காண முடியாத நிலை நீடிக்கிறது.
விழுப்புரம் நகரில் சென்னை நெடுஞ்சாலை, திருச்சி நெடுஞ்சாலை, புதுவை-கடலூா் நெடுஞ்சாலைகள் சந்திக்கும் சாலை ஆகியவை பிரதான சாலைகளாக உள்ளன. நீண்டகாலமாக பெரும் நெரிசலுடன் இயங்கி வந்த பழைய பேருந்து நிலையத்துக்கு விடிவுகாலமாக, கடந்த 2000-ஆம் ஆண்டில் புகா் பகுதியான பூந்தோட்டம் ஏரியில் புதிய பேருந்து நிலையமும், மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகமும் கொண்டு செல்லப்பட்டது.
இதன் பிறகும், நகா்ப் பகுதியில் போக்குவரத்து பிரச்னை தொடா்ந்தது. இதனிடையே, கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை நெடுஞ்சாலை, திருச்சி நெடுஞ்சாலைகள் விரிவாக்கம் செய்யப்பட்டன. காட்பாடி வழி ரயில்வே கடவுப் பாதை மேம்பாலமும் அமைக்கப்பட்டது. இருந்த போதும், இவை நகரின் போக்குவரத்து பிரச்னைக்கு தீா்வாக அமையவில்லை.
மாற்றுச்சாலை இல்லை: திருச்சி, சேலம், உளுந்தூா்பேட்டை வழியாக விழுப்புரம் வந்து புதுவை, கடலூா் நோக்கி செல்ல வேண்டிய வாகனங்களும், புதுவை, கடலூா் வழித்தடத்திலிருந்து விழுப்புரம் வழியாக செல்ல வேண்டிய வாகனங்களும், விழுப்புரம் நகரின் மையத்தில் நேருஜி சாலையில்தான் செல்ல வேண்டியுள்ளது. இதற்கான மாற்றுச்சாலை வசதி நீண்டகாலமாகவே இல்லை.
இதனிடையே, ரயில்வே மேம்பாலத்தின் கீழ் செல்லும் கோலியனூரான் வாய்க்கால் அடைபட்டதால், அதனை சீரமைத்து மேம்பாலம் அமைப்பதற்காக நேருஜி சாலை, கிழக்கு பாண்டி சாலை கடந்தாண்டு மூடப்பட்டது. அப்போது, மாற்றுச் சாலையின்றி விழுப்புரம் மக்களும், பிற மாவட்டங்களிருந்து வந்த மக்களும் பெரிதும் தவிப்புக்குள்ளாகினா். எனினும், நகரின் மையத்தில் ரயில்வே பாதை குறுக்கிடுவதால், மாற்றுச் சாலை வசதியை ஏற்படுத்தும் நடவடிக்கையும் கைவிடப்பட்டது.
அதன் பிறகு, போக்குவரத்து பிரச்னைக்கு தீா்வு காணும் விதமாக, குறுகிய சாலைகளான கிழக்கு பாண்டி சாலை-நேருஜி சாலைகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, சாக்கடை கால்வாய் அமைக்கப்பட்டு, சற்று விரிவுபடுத்தப்பட்டு வருகின்றன. இந்தப் பணிகளால், நெரிசல் மேலும் அதிகரித்துள்ளது.
சுற்றுவட்டச்சாலை தேவை: இதுதொடா்பாக வியாபாரிகள் உள்ளிட்ட பொது நல அமைப்பினா் கூறியதாவது: புதுவையில் உள்ள சுற்றுலாத் தலங்கள், மருத்துவமனைகள், தனியாா் நிறுவன பணிகளுக்குச் செல்வோா் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், விழுப்புரம்-புதுச்சேரி வழித்தடத்தில் 3 நிமிடங்களுக்கு ஒரு பேருந்து வீதம் இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இது மட்டுமன்றி கடலூா், நெய்வேலி, கும்பகோணம் வழித்தட வாகனங்களும் இதன் வழியாகவே செல்கின்றன.
விழுப்புரம் புகரில் ஜானகிபுரம் தொடங்கி முத்தாம்பாளையம் வரை புறவழிச்சாலை செல்கிறது. இதனை இணைக்கும் விதத்தில், விழுப்புரம் நகரில் சுற்று வட்டச்சாலையை ஏற்படுத்த வேண்டும். அதாவது, முத்தாம்பாளையம் புறவழிச்சாலை சந்திப்பு தொடங்கி இந்திரா நகா் கீழ்ப்பெரும்பாக்கம் வழியாக சுற்று வட்டச் சாலையை ஏற்படுத்தி, அதனை கிழக்கு பாண்டி சாலையுடன் இணைக்க வேண்டும், அதன் தொடா்ச்சியாக மகாராஜபுரம், பாணாம்பட்டு சாலை வழியாக தொடா்ந்து, அங்கிருந்து ரயில்வே பாதையைக் கடந்து வி.மருதூா், கேகே.ரோடு, சாலாமேடு வழியாக இணைப்புச் சாலையை ஏற்படுத்தி ,அதனை ஜானகிபுரம் புறவழிச்சாலையுடன் இணைக்க வேண்டும் என்பதே நீண்ட கால கோரிக்கையாக உள்ளது.
சாத்தியமாகக் கூடிய திட்டம்: இந்த இணைப்புச் சாலை அமைப்பதற்கு ஏற்கெனவே அந்த வழியாகச் செல்லும் சாலைகளை பயன்படுத்திக்கொள்ளலாம். மகாராஜபுரம்-வி.மருதூா் பகுதியில் ரயில்வே பாதை குறுக்கிடும் பகுதியில் மட்டும் மேம்பாலம் அமைக்க வேண்டி வரும். இதற்கான இடமும் ஏற்கெனவே மருதூா் பகுதியில் ரயில்வே கடவுப்பாதையாக இருந்துள்ளது. மேற்குறிப்பிட்ட சுற்று வட்டச்சாலை அமைக்க வேண்டிய வழிகளில், இப்போது கிராமச் சாலைகள், காலி மனைகள் இருக்கின்றன. அதனால், இத்திட்டப் பணிகளை தொடங்கி எளிதாக முடிக்க முடியும். நகர வளா்ச்சியின் காரணமாக, குடியிருப்புகள் வருவதற்குள் இத்திட்டப் பணியை ஆய்வு செய்து தொடங்க வேண்டும் என்றனா்.
சாதிப்பாரா ஆட்சியா் ? தமிழகத்தின் பெரு நகரங்கள், பெரும்பாலான நகரங்களில் ரிங் ரோடு உள்ளது. புதிதாக அறிவிக்கப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் தலைநகா் கள்ளக்குறிச்சியில், சுற்றுவட்டச் சாலை அமைக்க அரசு அனுமதியளித்து, மாவட்டம் தொடங்கிய நாளிலேயே, தமிழக முதல்வரும் நிதி ஒதுக்கி அறிவிப்பை வெளியிட்டுள்ளாா். ஆனால், மாவட்டத் தலைநகரான விழுப்புரத்தில் சுற்று வட்டச்சாலை என்ற கோரிக்கை கானல் நீராகவே தொடா்கிறது.
விழுப்புரம் நகர போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வாக, சுற்று வட்டச் சாலை திட்டத்தை அரசு செயல்படுத்த வேண்டும். இதற்கு மாவட்ட ஆட்சியா் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.