அரசு ஊழியரை குடும்பத்துடன் தீ வைத்து எரிக்க முயற்சி
உளுந்தூர்பேட்டை அருகே அரசு ஊழியரை குடும்பத்துடன் தீ வைத்து எரிக்க முயன்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
உளுந்தூர்பேட்டை அருகே அரசு ஊழியரை குடும்பத்துடன் தீ வைத்து எரிக்க முயன்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி வட்டம், குருபீடபுரம் ஊராட்சிக்கு உள்பட்ட சித்தாத்தூர் புதுகாலனியில் வசித்து வருபவர் சாமிநாதன் மகன் சுப்பிரமணியன் (55). இவர், உளுந்தூர்பேட்டை வட்டம், பாலி தமிழ்நாடு சிறப்புக் காவல் படையில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில், சனிக்கிழமை இரவு வீட்டில் தனது மனைவி சாந்தி (48), மகள் ஜான்சிராணி (25), மகன் வழிப் பேரன் மகிவீரன் (5) ஆகியோருடன் தூங்கிக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த மர்ம நபர்கள் வீட்டை வெளிப்பக்கமாகப் பூட்டிவிட்டு, வீட்டுக்குள் தீவைத்து சென்றதாகத் தெரிகிறது.
திடீரென வீடு தீப்பற்றி எரிவதைப் பார்த்த சுப்பிரமணியன் வீட்டின் ஜன்னலை உடைத்து, அதன் வழியாக உள்ளே இருந்தவர்களை வெளியேற்றி, அவரும் தப்பித்தார்.
பின்னர், உளுந்தூர்பேட்டை தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
உடனடியாக அங்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை மேலும் பரவாமல் அணைத்தனர்.
இதுகுறித்து சுப்பிரமணியன் எடைக்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், போலீஸார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.