விழுப்புரம்

தொழிலாளி கொலை வழக்கில் உறவினர் உள்பட 2 பேர் கைது

DIN

விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே மாயமான தொழிலாளி கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில், உறவினர் உள்பட இருவரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
 மயிலம் அருகே வெளியனூரைச் சேர்ந்த கூலித் தொழிலாளி முருகன்(37) கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி மாலை மாயமானார். இதுகுறித்து அவரது மனைவி பாக்கியலட்சுமி (32) அளித்த புகாரின் பேரில் மயிலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். அவரது செல்லிடப்பேசி எண்ணை வைத்து விசாரணையை தீவிரப்படுத்தியதில், மாயமான முருகனை அவரது உறவினரான (சகலை) தென் ஆலப்பாக்கத்தைச் சேர்ந்த கலியமூர்த்தி (43), அவரது நண்பர் கொடிமா கிராமத்தைச் சேர்ந்த சங்கர்(40) ஆகியோர் சேர்ந்து கொலை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து, அவர்கள் இருவரையும் திங்கள்கிழமை போலீஸார் கைது செய்தனர்.
 விசாரணையில், முருகன் மனைவி பாக்கியலட்சுமிக்கும், கலியமூர்த்திக்கும் கடந்த 4 ஆண்டுகளாக நெருங்கிய உறவு இருந்ததாகவும், இதற்கு இடையூறாக முருகன் இருந்ததால், அவரை கலியமூர்த்தி தனது நண்பருடன் சேர்ந்து கொலை செய்ததும் தெரிய வந்தது.
 முருகன் மாயமான அன்று, அவரை கலியமூர்த்தியும், சங்கரும் திருக்கனூரில் மது அருந்த வைத்து அங்கிருந்து கண்டமங்கலம் அருகே கொடுக்கூர் கிராமத்தில் உள்ள சங்கராபரணி ஆற்றங்கரைக்கு அழைத்துச் சென்று நைலான் கயிறால் இறுக்கி கொலை செய்து, புதைத்துவிட்டு திரும்பினர்.
 சரியாக புதைக்காததால், சடலம் அழுகி வெளியே தெரிந்ததை, நாய்கள் இழுத்து வெளியே போட்டுள்ளன. இந்த சடலத்தை கண்டமங்கலம் போலீஸார், அடையாளம் தெரியாத சடலம் என்று கைப்பற்றி, உடற்கூறு ஆய்வுக்கு ஏற்கெனவே அனுப்பி வைத்திருந்தனர்.
 இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்த வழக்கில் கலியமூர்த்தி, சங்கர் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறோம். தேவைப்பட்டால், அந்த சடலத்தை மீண்டும் உடற்கூறு ஆய்வு செய்வது குறித்து பின்னர் முடிவு செய்யப்படும் என்றார்.
 இந்த வழக்கை சிறப்பாக துப்பு துலக்கி எதிரிகளை கைது செய்த காவல் ஆய்வாளர் ரமேஷ்பாபு, உதவி ஆய்வாளர் நந்தகுமார், தலைமைக் காவலர் அன்பரசு, தனிப்பிரிவு போலீஸார் சிறப்பு உதவி ஆய்வாளர் ரகுராமன், தலைமைக் காவலர் ரவி ஆகியோரை எஸ்.பி. ஜெயக்குமார் வெகுவாகப் பாராட்டினார்.
 திண்டிவனம் காவல் துணை கண்காணிப்பாளர் கனகேஸ்வரி உடனிருந்தார்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

ஷஷாங் சிங்குக்கு பரிசளித்த எம்.எஸ்.தோனி!

உங்களுக்குப் பிடித்த படம் எது? கேட்பது யாஷிகா ஆனந்த்...

SCROLL FOR NEXT