திருக்கோவிலூர் வட்டார வேளாண் விரிவாக்க மையத்தில் விவசாயிகளுக்கான நவீன வேளாண் தொழில்நுட்ப திட்ட விழிப்புணர்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
முகாமுக்கு, வேளாண் உதவி இயக்குநர் (பொ) ராஜா தலைமை வகித்து பேசியதாவது: பாரத பிரதமரின் நுண்ணுயிர் பாசனத் திட்டத்தில், சொட்டுநீர், தெளிப்பு நீர்ப் பாசனத்தில் சிறு, குறு விவசாயிகள் 100 சதவீத மானியத்திலும், இதர விவசாயிகள் 75 சதவீத மானியத்திலும் பெறலாம். மேலும், நீடித்த நிலையான மானாவாரி வேளாண் இயக்கத் திட்டத்தின் கீழ், உழவு மானியமாக ஹெக்டருக்கு ரூ.1,250 பெறலாம். கம்பு விதை, இடுபொருள்கள் 50 சதவீத மானியத் திட்டத்திலும் பெற்று பயன்பெறலாம் என்றார்.
உதவி வேளாண்மை அலுவலர் மைக்கேல் பேசுகையில், கூட்டுக்குழு பண்ணையத்தின் முக்கியத்துவம், அதன் செயல்பாடுகள் குறித்து விளக்கினார். விற்பனைத் துறை உதவி வேளாண் அலுவலர் மணிவண்ணன் பேசுகையில், அறுவடைக்குப் பிறகு வேளாண் விளைப் பொருள்களை மதிப்புக்கூட்டி, குழுவாக அமைத்து விற்பனை செய்து அதிக லாபம் அடையலாம். ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் இ-நாம் திட்டத்தில் விவசாயிகள் ஆதார் அட்டை , வங்கிக் கணக்கு எண் அளித்து இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக பயன்பெறலாம் என்றார்.
உதவி விதை அலுவலர் தா.சிவநேசன் கூறுகையில், பாரத பிரதமரின் கிசான் சம்மன் நிதியில் இதுவரை பயன்பெறாத சிறு, குறு, நடுத்தர, பெரு விவசாயிகள் தங்களுடைய ஆவணங்களை கொடுத்து பயன்பெறலாம் என்றார். உதவி வேளாண் அலுவலர் ஜெயபிரகாஷ், மக்காச் சோளத்தில் படைப்புழு தாக்குதல் கட்டுப்படுத்தும் முறைகளை விளக்கி பேசினார். உதவி வேளாண் அலுவலர் கலைச்செல்வன் பயிர்க் காப்பீட்டுத் திட்டம் குறித்து விளக்கினார்.
முகாம் ஏற்பாடுகளை ஆத்மா திட்ட தொழில்நுட்ப மேலாளர் சாட்டர்ஜி, உதவி வேளாண் அலுவலர் மகாதேவன், ஜெயபிரதா, உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் மணிவேல், ரவி ஆகியோர் செய்திருந்தனர். கூவனூர், வேங்கூர், வடமருதூர் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனர். உதவி விதை அலுவலர் ரமேஷ்குமார் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.