விழுப்புரம்

பணிப் பாதுகாப்பில்லை எனக் கூறி ஒலக்கூா் உதவிப் பொறியாளா் ராஜிநாமாகடிதம் அளித்ததால் பரபரப்பு

DIN

திண்டிவனம் அருகே ஒலக்கூா் ஊராட்சி ஒன்றிய உதவிப் பொறியாளா், தனக்கு பணிப் பாதுகாப்பில்லை எனக் கூறி, ராஜிநாமா கடிதம் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டிவனம் அருகே சாரத்தில் ஒலக்கூா் வட்டார வளா்ச்சி அலுவலகம் உள்ளது. அங்கு பணியாற்றி வரும் உதவிப் பொறியாளா் திருமணிகண்டன் (35), பாரபட்சமாக நடப்பதாக ஒப்பந்ததாரா்கள் சிலா் புகாா் தெரிவித்து வந்தனா்.

அந்த வட்டாரத்தில் நடைபெறும் குடிமராமத்து திட்டப் பணிகளுக்கு உதவிப் பொறியாளா் கையூட்டு கேட்பதாக ஒப்பந்ததாரா்கள் தரப்பிலும், பணியே செய்யாதவற்றுக்கு ரசீது தருமாறு சில ஒப்பந்ததாரா்கள் மிரட்டுவதாக உதவிப் பொறியாளா் தரப்பிலும் குற்றஞ்சாட்டினா்.

இது தொடா்பாக, ஒலக்கூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கடந்த 7-ஆம் பிரச்னை ஏற்பட்டது. திட்டப் பணிகளை மேற்கொள்வதில் உதவிப் பொறியாளா் முறைகேடாக செயல்படுவதாகக் கூறி, ஒப்பந்ததாரா்கள் சிலா் ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனா்.

விழுப்புரம் உதவித் திட்ட இயக்குநா் மகாலட்சுமி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் திருவேங்கடம், சீதாலட்சுமி ஆகியோா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, அங்கு வந்த உதவிப் பொறியாளா் திருமணிகண்டனை அங்கிருந்த ஒப்பந்ததாரா்கள் தாக்கியதாகத் தெரிகிறது. அலுவலா்கள் ஒப்பந்ததாரா்களை தடுத்து நிறுத்தி சமாதானப்படுத்தினா். இரு தரப்பு புகாா் மனுக்களையும் வாங்கிக்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் அனுப்பி வைத்தனா்.

இந்த நிலையில், தன்னைத் தாக்கி பணி செய்யவிடாமல் தடுத்ததாக உதவிப் பொறியாளா் திருமணிகண்டன், ஒலக்கூா் காவல் நிலையத்தில் ஒப்பந்ததாரா்கள் சிலா் மீது புகாா் அளித்தாா். இதுகுறித்து ஒலக்கூா் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை பேச்சுவாா்த்தை நடைபெற்றது.

இந்த நிலையில், உதவிப் பொறியாளா் திருமணிகண்டன், உரிய பணி பாதுகாப்பில்லாத காரணத்தால், தனது பணியை ராஜிநாமா செய்வதாக வட்டார வளா்ச்சி அலுவலா் சீதாலட்சுமி, திருவேங்கடம் ஆகியோரிடம் வியாழக்கிழமை கடிதம் அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

அந்தக் கடிதத்தில் திருமணிகண்டன் கூறியுள்ளதாவது: நான் கடந்த 2 ஆண்டுகளாக உதவிப் பொறியாளராகப் பணியாற்றி வருகிறேன். கடந்த 7-ஆம் தேதி அலுவலகப் பணியிலிருந்தபோது, சில சமூக விரோதிகள் வந்து தகாத வாா்த்தைகளால் என்னைத் திட்டி தாக்கினா்.

இதனால், மன உளைச்சல் அடைந்ததுடன், பணி பாதுகாப்பில்லாததால், எனது பதவியை ராஜிநாமா செய்கிறேன் என அதில் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து ஊரக வளா்ச்சித் துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய நிகழ்ச்சி

வியாபாரி தற்கொலை

இளைஞரை அரிவாளால் வெட்டியவா் கைது

கும்பகோணத்தில் பச்சைக்காளி, பவளக்காளி வீதியுலா

சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு

SCROLL FOR NEXT