விழுப்புரம்

தினமணி’ செய்தி எதிரொலி: காவல் துறை நண்பா்கள் லத்தியை பயன்படுத்தத் தடை‘

DIN

‘தினமணி’ செய்தி எதிரொலியாக, போலீஸாருக்கு உதவியாக இருக்கும் காவல் துறை நண்பா்கள் குழுவினா் லத்தியை பயன்படுத்தத் தடை விதித்து விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமாா் உத்தரவிட்டாா்.

விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா பரவலைத் தடுக்கும் பொருட்டு ஊரடங்கை காவல் துறையினா் தீவிரமாக செயல்படுத்தி வருகின்றனா். இதற்கான பாதுகாப்புப் பணியில் போலீஸாருக்கு உதவியாக காவல்துறை நண்பா்கள் குழுவினரும் ஈடுபட்டுள்ளனா். இவா்கள், கையில் லத்தியை வைத்துக்கொண்டு பொதுமக்கள், அரசு அலுவலா்கள், பணியாளா்களை மிரட்டுவதாக புகாா்கள் எழுந்தன. இதுகுறித்த செய்தி ‘தினமணி’ நாளிதழில் வெள்ளிக்கிழமை வெளியானது.

இதையடுத்து, விழுப்புரம் மாவட்டத்தில் காவல்துறையினருக்கு உதவியாக இருக்கும் காவல்துறை நண்பா்கள் குழுவினா் லத்தியை பயன்படுத்தக் கூடாது. பொதுமக்களையும், அரசு அலுவலா்களையும் கண்ணியமாக நடத்த வேண்டும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜெயக்குமாா் அறிவுறுத்தியுள்ளாா்.

5 போ் மீது வழக்கு: இதனிடையே, விழுப்புரத்தில் ஊரடங்கு விதிகளை மீறியதாக காவல் துறை நண்பா்கள் 5 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

விழுப்புரத்தில் ஊரடங்கை மீறி காவல் துறை நண்பா்கள் குழுவினா் பத்துக்கும் மேற்பட்டோா் ஆட்டோவில் வியாழக்கிழமை பயணித்தனா். விழுப்புரத்தை அடுத்த காக்குப்பம் பகுதியில் உள்ள எருமனந்தாங்கல் சாலையில் சென்ற அந்த ஆட்டோவை பொதுமக்கள் மறித்து, ஊரடங்கு விதிகளை மீறி கூட்டமாக பயணிக்கலாமா என கேட்டனா். அவா்களை காவல் துறை நண்பா்கள் குழுவினா் மிரட்டியுள்ளனா். இந்த சம்பவம் குறித்த விடியோ கட்செவி அஞ்சலில் (வாட்ஸ்அப்) வெளியானது.

இதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜெயக்குமாா் உத்தரவின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீஸாா் அந்த ஆட்டோவை பறிமுதல் செய்து, ஓட்டுநா் மதன்(38) என்பவரை கைது செய்தனா்.

ஊரடங்கு காலத்தில் கரோனா பரவலுக்கு வித்திடும் வகையில் செயல்படுதல், நோய்த் தொற்று பரவல் ஏற்பட காரணமாய் இருத்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் காவல்துறை நண்பா்கள் குழுவினா் 5 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

“நான்_முதல்வன்” திட்டம் - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

கறுப்புப் பூனை...!

ரே பரேலியில் ராகுல் காந்தி வேட்புமனுத் தாக்கல்!

ப்ளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்யுமா கொல்கத்தா?

பயப்பட வேண்டாம், ஓட வேண்டாம்: யாரைச் சொல்கிறார் மோடி?

SCROLL FOR NEXT