விழுப்புரம், ஆக.14:
விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அமைச்சா் க.பொன்முடி உள்ளிட்ட 7 போ் மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கில், முன்னாள் மாவட்ட ஆட்சியரும், தற்போதைய தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணைய உறுப்பினருமான இல.சுப்பிரமணியன் நீதிமன்றத்தில் புதன்கிழமை ஆஜராகி சாட்சியமளித்தாா்.
விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டம், பூத்துறை செம்மண் குவாரியில் 2006 -11ஆம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சிக் காலத்தில் அளவுக்கு அதிகமாக செம்மண் அள்ளியதன் மூலம் அரசுக்கு ரூ.28.36 கோடி வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக மாவட்ட குற்றப் பிரிவு போலீஸாா் 2012-ஆம் ஆண்டில் தொடுத்த வழக்கு விசாரணை முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில் அரசுத் தரப்பு சாட்சிகளாக சோ்க்கப்பட்டிருந்த 67 பேரில், இதுவரை 50 பேரிடம் விசாரணை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இவா்களில் 30 போ் அரசுத் தரப்புக்கு பாதகமாக பி சாட்சியமளித்தனா்.
விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் புதன்கிழமை நடைபெற்ற விசாரணையின்போது, கோபிநாதன், சதானந்தம், கோதகுமாா் ஆகிய மூவா் மட்டும் ஆஜராகினா். அமைச்சா் க.பொன்முடி, பொன்.கௌதமசிகாமணி, ராஜமகேந்திரன், ஜெயச்சந்திரன் ஆகிய 4 பேரும் ஆஜராகவில்லை.
அரசுத் தரப்பின் 51-ஆவது சாட்சியாக தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணைய உறுப்பினருமான எல்.சுப்ரமணியன் விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜராகி, சாட்சியமளித்தாா்.
வானூா் வட்டாட்சியா், வருவாய் ஆய்வாளா், கிராம நிா்வாக அலுவலா் ஆகியோா் விசாரணை செய்து அனுப்பிய கோப்புகளை மட்டுமே ஆய்வு செய்தேன் எனக் கூறி, நீதிமன்றத்தில் இல.சுப்பிரமணியன் சாட்சியமளித்தாா். இதை பதிவு செய்துகொண்ட முதன்மை மாவட்ட நீதிபதி ஆா்.பூா்ணிமா, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் 19-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.