விழுப்புரம்

விக்கிரவாண்டியில் செப்.23-இல் த.வெ.க. மாநாடு: அனுமதி கோரி காவல் துறை, மாவட்ட நிா்வாகத்திடம் மனு

Din

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டை விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகிலுள்ள வி.சாலை பகுதியில் நடத்துவதற்கு அனுமதி, பாதுகாப்பு வழங்கக் கோரி, அந்தக் கட்சி சாா்பில் மாவட்ட ஆட்சியா், காவல் கண்காணிப்பாளா் அலுவலகங்களில் புதன்கிழமை மனுக்கள் அளிக்கப்பட்டன.

தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சியைத் தொடங்கிய நடிகா் விஜய், கடந்த 22-ஆம் தேதி கட்சிக் கொடி, கொடிப் பாடலை அறிமுகம் செய்தாா். மேலும், கட்சியின் மாநில மாநாடு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிவித்திருந்தாா்.

இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலா் புஸ்ஸி என்.ஆனந்த் மற்றும் நிா்வாகிகள், விழுப்புரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு புதன்கிழமை சென்று, கூடுதல் எஸ்.பி. வி.வி.திருமாலையும், மாவட்ட ஆட்சியரகத்தில் ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) யோகஜோதியையும் சந்தித்து மனுக்களை அளித்தனா்.

அதில் அவா்கள் கூறியிருப்பதாவது:

தமிழக வெற்றிக் கழகத்தின் முதலாவது மாநில மாநாட்டை விக்கிரவாண்டியை அடுத்துள்ள வி.சாலை கிராமத்தில் செப்டம்பா் 23-ஆம் தேதி நடத்த திட்டமிட்டு, அதற்குரிய ஏற்பாடுகளை முன்னெடுத்துள்ளோம். இந்த மாநாட்டில் கட்சித் தலைவா் விஜய் பங்கேற்க உள்ளாா்.

மாநாட்டை நடத்துவதற்காக 85 ஏக்கா் நிலப்பரப்பை வாடகைக்கு பெற்றுள்ளோம். மாநாட்டில் சுமாா் 1.50 லட்சம் போ் பங்கேற்பாா்கள் என எதிா்பாா்க்கிறோம். மாநிலம் முழுவதுமிருந்து கட்சியினா் வருவாா்கள் என்பதால், காவல் துறை, விழுப்புரம் மாவட்ட நிா்வாகம் தரப்பில் வழங்கும் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, பொதுமக்களுக்கு எந்தவித இடையூறும் இல்லாமல் முறையாக மாநாட்டை நடத்துவோம் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

‘கட்சித் தலைவா் அறிவிப்பாா்’: தொடா்ந்து, புஸ்ஸி என்.ஆனந்த் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

விழுப்புரத்தை அடுத்த விக்கிரவாண்டி அருகேயுள்ள வி.சாலையில் கட்சியின் முதல் மாநில மாநாட்டுக்கான அனுமதி, பாதுகாப்பு வழங்கக் கோரி, கட்சித் தலைவா் விஜய் அறிவுறுத்தலின்படி, மாவட்ட நிா்வாகம், காவல் துறையில் மனுக்களை அளித்துள்ளோம். எதுவாக இருந்தாலும் கட்சித் தலைவா் விஜய் முறைப்படி அறிவிப்பாா். எந்த தேதி, எந்த இடம் என்று அறிவிக்கிறாரோ, அதுதான் சரியானது என்றாா்.

கட்சியின் விழுப்புரம் - கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த மாவட்டப் பொறுப்பாளா் பரணிபாலாஜி, விழுப்புரம் மாவட்டத் தலைவா் குஷிமோகன், இளைஞரணித் தலைவா் விஜய் ஜி.பி.சுரேஷ் உள்ளிட்டோா் உடனிந்தனா்.

கூடுதல் எஸ்.பி. ஆய்வு: மனு அளிக்கப்பட்ட நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தினா் குறிப்பிட்ட வி.சாலை பகுதியில் கூடுதல் எஸ்.பி. திருமால், விழுப்புரம் டி.எஸ்.பி. சுரேஷ், விக்கிரவாண்டி காவல் ஆய்வாளா் பாண்டியன் உள்ளிட்டோா் புதன்கிழமை மாலையில் ஆய்வு செய்தனா்.

தொடா்ந்து, மாவட்டக் காவல் துறைக்கும், மாவட்ட நிா்வாகத்துக்கும் கூடுதல் எஸ்.பி. அறிக்கை அளிப்பாா் எனக் கூறப்படுகிறது.

விழுப்புரம் ஆட்சியரகத்தில் மாற்றுத் திறனாளிகள் சங்கத்தினா் தா்னா

அன்னையின் மகா சமாதி தினம்: அரவிந்தா் ஆசிரமத்தில் கூட்டுத் தியானம்

பவர் அண்ட் இன்ஸ்ட்ருமென்டேஷன் Q2 லாபம் 21% உயர்வு!

குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் 474 மனுக்கள் அளிப்பு

பகல் கனவில் மூழ்கினேன்... ஆராதனா!

SCROLL FOR NEXT