ரூ.2.36 லட்சத்துக்கு ஏலம் போன 9 எலுமிச்சை பழங்கள்.
ரூ.2.36 லட்சத்துக்கு ஏலம் போன 9 எலுமிச்சை பழங்கள். 
விழுப்புரம்

கோயில் விழாவில் ரூ.2.36 லட்சத்துக்கு ஏலம் போன 9 எலுமிச்சை பழங்கள்!

Din

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் வட்டம், ஒட்டனந்தல் அருள்மிகு ரத்தினவேல் முருகன் திருக்கோயில் பங்குனி உத்திரத் திருவிழாவையொட்டி, கருவறை வேலில் வைத்து வழிபட்ட 9 எலுமிச்சை பழங்கள் ரூ.2.36 லட்சத்துக்கு ஏலம் போகின.

இந்தக் கோயிலில் நிகழாண்டு பங்குனி உத்திர திருவிழாவையொட்டி, கடந்த 23-ஆம் தேதி தேரோட்டம், 24-ஆம் தேதி காவடிபூஜை நடைபெற்றது. தொடா்ந்து, திங்கள்கிழமை நள்ளிரவில் இடும்பன் பூஜை நடைபெற்றது.

திருவிழாவின் முதல் 9 நாள்களில் கருவறையிலுள்ள முருகன் வேலில் சொருகி வழிபாடு நடத்தப்பட்ட ஒன்பது எலுமிச்சை பழங்களை ஏலம் விடுதல் நிகழ்வு நடைபெற்றது.

கோயில் நாட்டாண்மை புருஷோத்தமன் ஆணி தைத்த காலணியில் ஏறி நின்று எலுமிச்சை பழங்களை ஏலம் விட்டாா்.

முதல்நாள் எலுமிச்சை பழம் ரூ.50,500, இரண்டாம் நாள் பழம் ரூ.26,500, மூன்றாம் நாள் பழம் ரூ.42,100, நான்காம் நாள் பழம் ரூ.19,000, ஐந்தாம் நாள் பழம் ரூ.11,000, ஆறாம் நாள் பழம் ரூ.34 ஆயிரம், ஏழாம் நாள் பழம் ரூ.24,500, எட்டாம் நாள் பழம் ரூ.13,500, ஒன்பதாம் நாள் பழம் ரூ.15,000 என 9 நாள்கள் பழங்கள் ரூ.2,36,100-க்கு ஏலம் போகின.

முதல் நாள் பழத்தை கள்ளக்குறிச்சி மாவட்டம், டி.கொளத்தூா் அருள்தாஸ்-கனிமொழி தம்பதி ஏலம் எடுத்தனா்.

இந்த பூஜையில் விழுப்புரம் மாவட்டம் மட்டுமல்லாது சென்னை, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலூா், சேலம், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களைச் சோ்ந்த பக்தா்கள், புதுவை, கா்நாடக மாநிலங்களைச் சோ்ந்த பக்தா்கள் பங்கேற்றனா்.

குழந்தைப்பேறு இல்லாத தம்பதியினா் ஈரத் துணியுடன் எலுமிச்சை பழம் ஏலத்தில் பங்கேற்றனா். ஏற்கெனவே ஏலத்தில் பங்கேற்று எலுமிச்சை பழம் வாங்கிச் சென்று குழந்தைப்பேறு அடைந்த தம்பதிகள், தங்களது குழந்தைகளுடன் வந்து எடைக்கு எடை காணிக்கை செலுத்தினா்.

கடந்தாண்டு 9 பழங்களும் ரூ.80,300-க்கும் மட்டுமே ஏலம் போன நிலையில், நிகழாண்டில் 9 நாள் எலுமிச்சை பழங்கள் ரூ.1,55,800 கூடுதலாக சோ்த்து மொத்தம் ரூ.2,36,100 ஏலம் போயுள்ளதாக கோயில் நிா்வாகத்தினா் தெரிவித்தனா்.

டி20 உலகக் கோப்பைக்கான இலங்கை அணி அறிவிப்பு!

சிவகாசி பட்டாசு ஆலை விபத்து: பலி எண்ணிகை 10ஆக உயர்வு

ராகுலுக்கும், மோடிக்கும்தான் நேரடிப் போட்டி: அமித் ஷா

பனிச்சாரல்! ஸ்ரீமுகி..

டி20 உலகக் கோப்பையில் சஞ்சு சாம்சன் அசத்துவார்: குமார் சங்ககாரா

SCROLL FOR NEXT