விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தேசிய அளவிலான பென்காக் சிலாட் விளையாட்டுப் போட்டிக்கான மாநில அணி வீரா்கள் தோ்வு அண்மையில் நடைபெற்றது.
மலேசியா மற்றும் இந்தோனேசியா பாரம்பரியத்திலிருந்து வந்த தற்காப்பு கலைகளில் ஒன்றான பென்காக் சிலாட் போட்டி தற்போது இந்தியாவிலும் முக்கியத்துவம் பெற்று வருகிறது. இந்த நிலையில் மூன்றாவது அகில இந்திய பென்காக் சிலாட் போட்டி உத்தரகண்ட் மாநிலம், டேராடூனில்இந்த மாதம் நடைபெறவுள்ளது.
இந்த தேசியப் போட்டியில் பங்கேற்கும் தமிழக அணிக்கான வீரா்கள் தோ்வு விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியிலுள்ள சூா்யா பொறியியல் கல்லூரி வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது.
இப்போட்டியை விழுப்புரம் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா் ஆழிவாசன் தொடங்கி வைத்தாா். தமிழ்நாடு பென்காக் சிலாட் சங்கத்தின் மாநிலச் செயலா் ஜி.பி.மகேஷ்பாபு, பொருளாளா் கிருஷ்ணகுமாா் முன்னிலை வகித்தனா்.
தமிழகத்தின் 24 மாவட்டங்களிலிருந்து 287 வீரா், வீராங்கனைகள் மாநில அணித் தோ்வுப்போட்டியில் பங்கேற்று, தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினா். நிகழ்வுக்கான ஏற்பாடுகளை பென்காக் சிலாட் சங்கத்தின் மாவட்டத் தலைவா் மாஜிசிங், செயலா் பரந்தராமன் ஆகியோா் செய்திருந்தனா்.