மார்கழி மாத உத்ஸவம்

திருப்பாவை - பாடல் 3

நாராயணனே பரம்பொருள் என்றும் அவனால் தான் நாம் வேண்டுவன அனைத்தையும் அளிக்க முடியும் என்று முதல் பாடலில் குறிப்பிட்ட ஆண்டாள்,

என். வெங்கடேஸ்வரன்

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி

நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்

தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து

ஓங்கு பெரும் செந்நெல் ஊடு கயல் உகளப்

பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப

தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி

வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்

நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்

பாடியவர் : பவ்யா ஹரி

விளக்கம்

நாராயணனே பரம்பொருள் என்றும் அவனால் தான் நாம் வேண்டுவன அனைத்தையும் அளிக்க முடியும் என்று முதல் பாடலில் குறிப்பிட்ட ஆண்டாள், அவன் பாற்கடலில் உறைகின்றான் என்று நமக்கு அந்த பரம்பொருளை இரண்டாவது பாடலில் அடையாளம் காட்டுகின்றார். அவன் தனது யோக நித்திரையிலிருந்து எழுந்து, எவ்வாறு உயிர்களுக்கு உதவி செய்கின்றான் என்பதை, இந்த பாடலில், மூன்றாவது பாடலில் குறிப்பிடுகின்றார். அவன் திரிவிக்ரமனாக உருவெடுத்து, மூன்று உலகங்களையும் மகாபலியின் பிடியிலிருந்து விடுவித்தான் என்ற செய்தி இந்த பாடலில் கூறப்படுகின்றது. வாமனனாக வந்து மூன்றடி மண் கேட்ட, திருமால் நெடியவனாக வளர்ந்து உலகினை அளந்தது, தேவர்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தினால் தானே தவிர, தனது நலத்திற்காக எதுவும் செய்ய வில்லை என்பதால், உத்தமன் என்று இங்கே ஆண்டாள் கூறுவது உணரத் தக்கது.

பொழிப்புரை

மகாபலியிடம் மூன்றடி மண்ணினை தானமாகப் பெற்ற பின்னர், நெடிய உருவம் எடுத்துத் தனது ஈரடியால் மூன்று உலகங்களையும் அளந்த உத்தமனாகிய திருமாலின் பெயர்களைப் பாடியவாறு நாங்கள், பாவை நோன்பினைத் தொடங்குகின்றோம் என்று பாவைத் தெய்வத்திற்கு உணர்த்தி நீராடுகின்றோம். இவ்வாறு நாங்கள் பரமனின் திருநாமங்களைச் சொல்வதால், நாட்டில் அதிகமான மழையால் தீங்கு ஏதும் விளையாதவாறு, மாதம் மூன்று முறை, தேவையான அளவுக்கு மழை பொழிகின்றது. இவ்வாறு பெய்யும் மழையினால், உயர்ந்து வளரும் செந்நெல் பயிர்களின் நடுவில் கயல் மீன்கள் துள்ளி விளையாடுகின்றன. மேலும் தேன் நிறைந்து காணப்படும் குவளை மலர்களில் தேனை உண்ட மயக்கத்தில் வண்டுகள் களிப்புடன் தூங்குகின்றன. இந்த சூழ்நிலையில் வளர்ந்த வளமான பசுக்கள், தங்கள் உடலினில் பாலினைத் தேக்கிக் கொள்ளாமல், பசுக்களின் பால் காம்புகளைப் பற்றி இழுக்கும் மாந்தர்கள் வைத்துள்ள குடங்கள் நிறையும் அளவுக்கு, வள்ளல் தன்மையுடன் பாலைப் பொழிகின்றன. இவ்வாறு எங்களை விட்டு செல்வம் என்றும் நீங்காத அளவு உள்ள நிலை, நாங்கள் பரமனின் திருநாமங்களைச் சொல்வதால் ஏற்படுகின்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இன்றைய ராசி பலன்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமித்தவா் மீது நடவடிக்கை : கோட்டாட்சியரிடம் மனு

திருவள்ளூா்: 10.43 லட்சம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள்

தூய்மைப் பணியாளா்களுக்கு ரூ.10 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்: நலவாரியத் தலைவா் வழங்கினாா்

ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலுக்கு 108 பால்குட ஊா்வலம்

SCROLL FOR NEXT