தமிழகத் தேர்தல் களம் 2016

போடி: ஓ.பி.எஸ்.க்கு சமுதாய வாக்குகள் கைகொடுக்குமா?

தேனி மாவட்டத்தில் கடந்த 1967-ஆம் ஆண்டு வரை காங்கிரஸ் கட்சியின் கட்டுப்பாட்டில் இருந்த போடிநாயக்கனூர் சட்டப்பேரவை தொகுதியை, கடந்த 1971-இல் நடைபெற்ற தேர்தலில் திமுக கைப்பற்றியது. 1977, 1980 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.

கோ.ராஜன்

தேனி மாவட்டத்தில் கடந்த 1967-ஆம் ஆண்டு வரை காங்கிரஸ் கட்சியின் கட்டுப்பாட்டில் இருந்த போடிநாயக்கனூர் சட்டப்பேரவை தொகுதியை, கடந்த 1971-இல் நடைபெற்ற தேர்தலில் திமுக கைப்பற்றியது. 1977, 1980 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.

போடிநாயக்கனூர் தொகுதியில் கடந்த 1989-ஆம் ஆண்டு அதிமுக (ஜெ) சார்பில் ஜெயலலிதா முதன் முதலாக தேர்தலில் போட்டியிட்டு, சட்டப்பேரவைக்குள் நுழைந்தார். 1991-ஆம் ஆண்டு முதல் 2006-ஆம் ஆண்டு வரை தொடர்ந்து அதிமுக, திமுக ஆகிய கட்சிகள் மாறி மாறி தொகுதியைக் கைப்பற்றின.

மறுசீரமைக்கப்பட்ட போடிநாயக்கனூர் சட்டப்பேரவைத் தொகுதியில், கடந்த 2011-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து திமுக சார்பில் போட்டியிட்ட எஸ்.லட்சுமணன் 29,906 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

களம் இறங்கிய வேட்பாளர்கள்: இந்த முறை போடிநாயக்கனூர் தொகுதியில் அதிமுக சார்பில் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், திமுக சார்பில் எஸ்.லட்சுமணன், தேமுதிக சார்பில் அ.வீரபத்திரன், பாஜக சார்பில் வி.வெங்கடேஸ்வரன், பாமக சார்பில் ஏ.ராமகிருஷ்ணன், நாம் தமிழர் கட்சி சார்பில் பி.அன்பழகன் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.

தேமுதிகவுக்கு தொகுதியில் கணிசமாக உள்ள வாக்கு வங்கியும், அந்தக் கட்சியின் வேட்பாளர் வீரபத்திரன் தொகுதியில் பெரும்பான்மை சமுதாயங்களுள் ஒன்றான பிள்ளைமார் சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதும், கூட்டணிக் கட்சிகளும் அவருக்குப் பலம். பாஜக வேட்பாளர் வெங்கடேஸ்வரன் தொகுதியில் பெரும்பான்மையாக உள்ள சமுதாயங்களுள் ஒன்றான நாயக்கர் சமுதாயத்தைச் சேர்ந்தவர். அந்தக் கட்சிக்கு தொகுதியில் வாக்கு வங்கி இல்லாதது பலவீனம். பாமக மற்றும் நாம் தமிழர் கட்சிக்கு தேவாரம், பொட்டிப்புரம், போடி ஆகிய பகுதிகளில் ஆதரவாளர்கள் உள்ளனர்.

நேரடி மோதலில் அதிமுக- திமுக: இந்தத் தொகுதியில் 2011-இல் நடைபெற்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட நிதி அமைச்சரும், தற்போதைய எம்.எல்.ஏ.வுமான ஓ.பன்னீர்செல்வம், திமுக சார்பில் போட்டியிட்ட எஸ்.லட்சுமணன் ஆகியோருக்கு இடையேதான் இந்த முறையும் போட்டி நிலவுகிறது. ஓ.பன்னீர்செல்வம் தொகுதியில் பெரும்பான்மையாக உள்ள முக்குலத்தோர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்.

கடந்த 2011-இல் நடைபெற்ற தேர்தலில் அதிமுக வேட்பாளருக்கு கை கொடுத்த ஆதிதிராவிடர் மற்றும் ஏனையசமுதாய வாக்கு வங்கிகள் இந்த முறை சிதறும் வாய்ப்பு உள்ளது. எம்.எல்.ஏ.வை எளிதில் சந்திக்க முடிவதில்லை என்பது தொகுதி மக்களின் ஆதங்கம். கட்சியின் பலம், வேட்பாளரின் ஸ்டார் அந்தஸ்து, பிரசார உத்தி ஆகியவை தொகுதியில் மீண்டும் வெற்றிக்கு வழிவகுக்கும் என்பது அதிமுகவினரின் எதிர்பார்ப்பு.

கடந்த முறை தொகுதியில் வெற்றி வாய்ப்பை இழந்த தேவாங்கர் சமுதாயத்தைச் சேர்ந்த திமுக வேட்பாளர் எஸ். லட்சுமணனுக்கு, தொகுதியின் முக்கிய வாக்கு வங்கிகளான தேவாங்கர், செட்டியார் சமுதாயத்தினரின் ஆதரவு உள்ளது. இளைஞர், எளிதில் அணுகக் கூடியவர் என்பது வேட்பாளரின் பலம். பிள்ளைமார் சமுதாய வாக்கு வங்கியில் ஏற்பட்டுள்ள சரிவு, கூட்டணிக் கட்சிகள் மற்றும் மு.க.அழகிரி அணியினரின் பாராமுகம் ஆகியவை வேட்பாளருக்கு பலவீனம். தங்களது கட்சி மற்றும் சமுதாய வாக்கு வங்கிகளை தக்க வைத்துக் கொண்டாலே வெற்றியை எட்டிவிடலாம் என்று திமுகவினர் கருதுகின்றனர்.

-ஜி.ராஜன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெரம்பலூரில் மூதாட்டியிடம் தாலிக்கொடி பறிப்பு

நமோ பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்த பிரதமர் மோடி - புகைப்படங்கள்

இந்திய அணிக்கு மோசமான தோல்வி; அபார வெற்றியைப் பதிவு செய்த தென்னாப்பிரிக்கா!

ஆப்கானிஸ்தானில் எல்லை தாண்டி பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கடும் கண்டனம்!

தங்கத் தேரழகு துஷாரா விஜயன் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT