பிரபலங்கள் - புத்தகங்கள்

'பிளேட்டோவின் அரசியல்': அந்த ஞானக் குரலைக் கேட்கிறோமா? –விஜய திருவேங்கடம்

விஜய திருவேங்கடம்

ஈடு இணையற்ற நமது சுதந்திரப் போராட்டத்தின் கடைசிப்  பத்தாண்டுகளில் அது உச்சகட்டத்தை அடைந்து நாட்டு விடுதலையாக நிறைவெய்திய நேரம். சுதந்திரப் போராட்டத்தின் இலட்சிய வேகத்தில் அறிவுத் தேடல் மிகுதியாக இருந்த நேரம். பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழில் மிகுதியாக வந்துகொண்டிருந்த நேரம். பள்ளிப் பருவத்தின் மைய நிலையிலும் நான் புத்தகப் பைத்தியமாகி ஆரணி குப்புசாமி முதலியாரின் 'மின்சார மாயவ'னின் கவர்ச்சியில் மூழ்கிவிடாமல் படைப்பிலக்கியத்துக்குப் பரிச்சயமாகப் பேராசிரியர் 'கல்கி'யின் 'மணிக்கொடி' எழுத்தில் மனம் லயித்து கலைத் தேர்ச்சியை வளர்த்துக் கொண்ட நேரம்.

கற்பனைப் படைப்பே இலக்கியம் என்ற எண்ணம் நிலை கொள்ளவிருந்த அந்த நேரத்தில் அறிஞர் வெ. சாமிநாத சர்மா 'இதோ ஓர் உலகப் பேரிலக்கியம்' என்று கம்பீரமாகப் பிரகடனப்படுத்தி வெளியிட்ட 'எண்ணங்களைச் சம்பவங்களாக்குவது அரசியல், சம்பவங்களை எண்ணங்களாக்குவது இலக்கியம்' என்று ஆசிரியர் விளக்கியிருப்பதைப் போல 'பிளேட்டோவின் அரசியல்' எனும் நூல் 'அரசியல் ஞான உலகின் ஆசார வாயி'லாகத்தான் விளங்குகிறது.

அன்று முதல் இன்று வரை நான் படித்த நூல்களில் என்னை வெகுவாகப் பாதித்த நூல்களின் பட்டியலில் அறிஞர் வெ. சாமிநாத சர்மாவின் நூல்களுக்கு முதலிடம் உண்டு.

வை. கோவிந்தன் எனும் அற்புத இதழாளர், 'சக்தி' வெளியீடாக 1945-இல் இந்நூலைப் பதிப்பித்தார். தரமான நூலகப் பதிப்பு. இன்றும் ஒடியாமல், உடையாமல் கையிலெடுத்துப் படிக்கக் கூடிய நூல், என்றாலும் அதன் அருமை கருதியும், பழைய பாதிப்பு பலரிடம் இல்லாத காரணத்தாலும்,இதழியல் வல்லுநர் பெ.சு. மணியின் முயற்சியில் 'திருமகள் நூலகம்' இரண்டு புத்தகங்களாக 15 ஆண்டுகளுக்கு முன்பு வெளியிட்டனர்.

'பிளேட்டோவின் அரசியல்' மொழிபெயர்ப்பு நூல் என்றாலும்அறிஞர் சர்மாவின் நண்பர்ஒருவர் குறப்பிட்டதைப் போல, 'சாக்ரடீஸும் பிளேட்டோவும் தமிழிலேயே உரையாடியிருப்பார்களோ' என்று வியக்க வைக்கும் அளவுக்கு இயல்பாக, சரளமாக எழுதப்பட்ட நூல். பிளேட்டோ இட்ட தலைப்பு 'Republic' என்றிருக்க, 'குடியரசு' என்று மொழிபெயர்க்காமல், 'அரசியல்' என்று தலைப்பிட்டதற்குக் காரணம், இந்நூல் அரசியலின் அனைத்து அம்சங்களையும் அலசுவதும், அதை மொழிபெயர்ப்பாளர் உணர்ந்ததும்தான்.

'பிளேட்டோ ஓர் அறிவுக்கடல். அதிலிருந்து எழும் பேரலைகளின் ஒருதிவலை நான்'' என்ற பக்தி பாவத்துடன் தமது பணியை அணுகி இருப்பது இந்தப் படைப்பின் மேன்மையைக் கூட்டுகிறது. அரசியல் அறிஞர்களும், ஆட்சியாளர்களும், குடிமைக்களும் தவறாது படிக்க வேண்டிய புத்தகம்.

ஏதென்ஸ் மாநகரத்தின் திருவிழா ஒன்றில் சாக்ரடீஸும், நண்பர்களும் 'நீதி பற்றிய விசாரணை'யில் இறங்கி உரையாடியதைப் பிளேட்டோ இந்நூலாக வரைந்து வைத்தான். "சாக்ரடீஸை உலகறியச் செய்தவன் பிளேட்டோ. சாக்ரடீஸ் எதைப் பற்றியும் எழுதி வைத்துவிட்டுப் போகவில்லை. ஆனால் அவன் ஒரு சிந்தனைப் பட்டறை. அதிலிருந்து வாழ்க்கைக்குத் தேவையான சகல விஷயங்களும் உற்பத்தியாயின. அவன் மேடைப் பிரசங்கி அல்ல. ஆனால் அவனது பேச்சைக் கேட்க எப்போதும் ஜனங்கள் கூடுவார்கள். அவன் தனக்கு ஒன்றும் தெரியாதென்று சொன்னான். ஆனால் 2500 ஆண்டுகளுக்குப் பிறகு, இப்போது கூட அவனுடைய ஞானக்குரல் நமக்கு ஸ்ப்ஷ்டமாகக் கேட்கிறது" என்று அறிஞர் சர்மா குறிப்பிடுவார்.

கீதையும், குறளும் அவனது சிந்தனைகளில் இழைந்தோடுவதைச் சான்றுகளோடு எடுத்துரைப்பார். அந்த ஞானக் குரலை இன்று நம்மில் பலர் கேட்கிறோமா?

"அரசியல் என்பது ஒரு கலை. சாஸ்திரமும் கூட. அகவாழ்க்கையை ஒழுங்குபடுத்துவது கலை. புறவாழ்க்கையை பண்பட்ட நிலையில் வைத்திருப்பதற்குத் துணை செய்வது சாஸ்திரம். அகம், புற வாழ்க்கைகளை ஒன்றுபடுத்திச் செலுத்திக் கொண்டுபோவது அரசியல்".

இந்தக் கருத்தை இன்றைய அரசியல் நிலைக்குப் பொருத்திப் பார்க்கலாமா?

"அரசினுடைய இயல்பு சதா இயங்கிக் கொண்டிருப்பது. தர்ம நியாயமும், அதிகார பலமும் சேர்ந்தால்தான் அரசு நடைபெற முடியும். நாடு, மக்கள், அரசு இவை மூன்றும்தான் ஒரு 'ராஜ்ய'த்தின் அடிப்படை லட்சணங்கள்" என்றெல்லாம் எழுதிப் போவார்.

சாக்ரடீஸின் வாக்குமூலம் என்று குறிப்பிடுவது "செல்வத்திலிருந்து சீலம் உண்டாவதில்லை. ஆனால் செல்வமும், மனிதர்கள் அந்தரங்கமாகவோ பகிரங்கமாகவோ வைத்துக் கொண்டிருக்கும் மற்ற எல்லா நற்பொருள்களும் அந்தச் சீலத்திலிருந்தே உண்டாகின்றன என்று நான் உங்களுக்குச் சொல்லிக் கொண்டிருக்கிறேன்".

பிளேட்டோவின் இலட்சிய சமுதாயம் தொடங்கி, சர் தாமஸ் மூரின் யுட்டோபியா, மார்க்சிஸம், 'ஃபேபியன் சொஸைட்டி' வரையிலான உலகச் சிந்தனைகளை அறிமுகப்படுத்தி, நம்மை ஆழமாகச் சிந்திக்க வைத்து, பொறுப்புள்ள குடிமக்களாக இலட்சிய அரசியலுக்கு ஆயத்தப்படுத்திய அறிஞர் சர்மா.

பின்னாளில் முதுகலைப் பட்டப்படிப்பில் நான் 'அரசியல் தத்துவம்' பயில்கையில்அவரது நூல்கள் அனைத்தும் பெரிதும் உதவின. இன்று நாட்டுடைமையாக்கப்பட்டுள்ள அறிஞர் வெ. சாமிநாத சர்மாவின் நூல்களைத் 'தினமணி' தொடர்ந்து வெளியிட்டு அறிவியக்கம் நடத்தலாம். அதற்கு 'அரசியல் கல்வி' என்றும் பெயரிடலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண் பேசும் வார்த்தை... அதிதி ஷங்கர்!

டி20 உலகக் கோப்பைக்கான ஜாகீர் கானின் இந்திய அணியை தெரிந்து கொள்ள வேண்டுமா?

மோடி ஆட்சியில் வேலைவாய்ப்பின்மை விகிதம் அதிகரிப்பு: பிரியங்கா காந்தி

நீலநிற மேகமே... சதா!

பாலிவுட் சுந்தரி..!

SCROLL FOR NEXT