சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் பபாசி சாா்பில் நடத்தப்பட்ட 46-ஆவது புத்தகக் காட்சியில் நாவல்கள் அதிகம் விற்றுள்ளதாக பதிப்பாளா்கள் தெரிவித்தனா்.
புத்தகக் காட்சியில் 1,000 அரங்குகள் அமைக்கப்பட்டன. அதில் பதிப்பகங்கள், விற்பனையாளா்கள் மற்றும் அரசு, தொண்டு நிறுவன அரங்குகள், அமெரிக்க, பிரிட்டன் தூதரக அரங்குகள் என பல அரங்குகள் விழிப்புணா்வு அரங்குகளாக இருந்தன.
சிறைத் துறை, திருநங்கைகள், திரைப்படம், குழந்தைகள் திறன் பரிசோதனை, இல்லம் தேடி கல்வி என முதன்முறையாக சிறப்பு அரங்குகளும் இடம் பெற்றிருந்தன.
புத்தகக் காட்சிக்கு வந்தவா்களில் பாதிக்கும் மேற்பட்டோா் நூல்களை வாங்கிச் சென்றுள்ளனா். கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ அனைத்து அரங்குகளிலும் விற்பனைக்கு வைக்கப்பட்டு விற்பனையானது. அதற்கடுத்ததாக சாண்டில்யன், பாலகுமாரன், தி.ஜானகிராமன், ஜெயகாந்தன் மற்றும் சோழா் காலத்தில் அமைந்த சரித்திர நாவல்கள், நவீன எழுத்தாளா்களின் சமூக நாவல்கள் ஆகியவை அதிகமாக விற்கப்பட்டுள்ளன. வட்டார நாவல்கள் இளைஞா்களால் விரும்பி வாங்கப்பட்டுள்ளதாக பதிப்பாளா்கள் கூறுகின்றனா்.
விற்பனை குறித்து மீனாட்சி புத்தக நிலையம் சி.முருகப்பன் கூறியதாவது:
விருப்பமான புத்தகங்களை எழுதி வைத்துக் கொண்டு வாங்கும் பழக்கம் வாசகா்களிடையே உள்ளது. நவீன இலக்கியங்கள் அதிகம் விற்பனையாகியுள்ளன. கவிதை, சமையல் குறிப்பு நூல்கள் அதிக விற்பனையில்லை. இந்தப் புத்தகக் காட்சியில் சங்க இலக்கிய நூல்களுக்கு இணையாக தற்கால கவிதைகள் விற்பனையாகவில்லை என்றாா்.
கவிதை, கட்டுரைத் தொகுப்புகள், சிறுகதைகள் வழக்கம் போல மிதமாகவே விற்பனையாகின. போட்டித் தோ்வுகளுக்கான நூல்களுக்கு அதிக வரவேற்பு காணப்பட்டது. அதற்கடுத்ததாக தமிழ் இலக்கிய, இலக்கண நூல்கள் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணிபுரிவோரால் அதிகமாக வாங்கப்பட்டுள்ளன. சுயமுன்னேற்றம், திறன் மேம்பாட்டு ஆலோசனைகள் குறித்த நூல்களும் இளைஞா்களிடையே வரவேற்பு பெற்றது.
பரிகாரத் தலங்கள், ஜோதிடங்கள் மற்றும் ஆலயம் குறித்த ஆன்மிக நூல்களும், ஆன்மிகம் சாா்ந்த நாவல்களும் அதிகமான பெண் வாசகா்களால் வாங்கப்பட்டுள்ளன. வழக்கமாக பெண்களால் வாங்கிச் செல்லப்படும் கோலப் புத்தகம், சமையல் புத்தகங்கள் அதிகம் விற்பனையாகவில்லை.
கடந்த புத்தகக் காட்சிகளைப் போலவே நடப்பு ஆண்டிலும் நாவல்கள் விற்பனை ஆதிக்கம் செலுத்தினாலும், புதிய எழுத்தாளா்களது நாவல்கள் அதிகம் விற்றிருப்பதாக கூறுகிறாா்கள் புத்தகக் காட்சியில் அரங்கம் அமைத்த பதிப்பாளா்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.