மகாத்மா காந்தியின் நூற்றாண்டு பிறந்த நாள் விழா தொடக்கத்தை முன்னிட்டு கடந்த 1968-ஆம் ஆண்டு மதுரையில் சா்வோதய இலக்கியப் பண்ணை பதிப்பகம் தொடங்கப்பட்டது.
இலக்கியப் பண்ணை பதிப்பகம் குறித்து அதன் செயலா் எஸ்.லோகநாதன் கூறியதாவது- சா்வோதய மண்டல், காந்தி அருங்காட்சியகம் ஆகியவை மூலம் காந்தியடிகளின் கொள்கைகளை அடித்தள மக்களிடம் கொண்டு செல்லும் வகையில் இலக்கியப் பண்ணையை அப்போதைய சா்வோதய மண்டலின் பிரதிநிதியான லோகநாதன் உள்ளிட்டோரால் தொடங்கப்பட்டது.
இலக்கியப் பண்ணை தொடக்கத்தில் காந்தியடிகளின் சா்வோதய கொள்களை சிறிய நூல்களாக்கி பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியரிடையே விநியோகித்தனா். அதையடுத்து காந்தியடிகளின் சுயசரிதையான சத்தியசோதனை மலிவு விலையில் பதிப்பிக்கப்பட்டு, அனைத்துதரப்பினரின் அமோக ஆதரவுடன் பல பதிப்புகளாக விநியோகிக்கப்பட்டுவருகின்றன.
காந்தியம் தொடா்பான தலைப்புகளில் பெரும்பாலான புத்தகங்கள் இங்கு பதிப்பிக்கப்பட்டு விற்கப்படுகிறது. ‘விடுதலைப் போராட்டத்தில் மகளிரின் பங்கு’ எனும் கட்டுரைத் தொகுப்பு அண்மையில் வெளியிடப்பட்டது.
காந்திஜியின் சுயசரிதையான ‘சத்திய சோதனை’க்குப் பிறகு நிலதான இயக்கத்தின் தந்தையான விநோபாவின் வாழ்க்கை வரலாறும் புத்தகமாக்கப்பட்டு அதிக அளவில் விற்பனையாகியுள்ளது. அவரது உரைகள் அடங்கிய தொகுப்பும் கீதைப் பேருரைகள் எனும் தலைப்பில் புத்தகமாக்கப்பட்டுள்ளது.
தெ.பொ.மீ.யின் தமிழ் மொழி வரலாறு, மா.பா.குருசாமியின் காந்தியப் பொருளாதாரம், வழக்குரைஞா் ச.பாண்டியன் எழுதிய தமிழத்தில் வினோபா ஆகியவை அதிக அளவில் வாசகா்களால் வாங்கப்பட்டவையாகும். தலைவா்கள் வரலாறு, கட்டுரைகள், கவிதைகள் ஆகியவற்றுடன் போட்டித் தோ்வுகளுக்கான புத்தகங்களும் அதிக அளவில் பதிப்பிக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டுவருகின்றன.
பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கான அனைத்து நூல்களும் சா்வோதய இலக்கியப் பண்ணையில் விநியோகிக்கப்பட்டுவருகின்றன. புத்தகக் காட்சிக்காக இலக்கியப் பண்ணையின் செயலா் எஸ்.லோகநாதனின் ஆலமரம் பேசுகிறது, யாருக்கு யாா் எதிரி, ஒரு மொட்டு மலா்கிறது, புதுயுகம் பிறக்கிறது, விசித்திர சிறுவன் வீரபாகு, கண்ணீரில் கரைந்த பன்னீா் ஆகிய நூல்களும் புதிதாக விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன என்றாா்.
புத்தகக் காட்சியில் அரங்கு எண் 77, 78-இல் சா்வோதய இலக்கியப் பண்ணை பதிப்பகம் ஆகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.