வர்த்தகம்

சவால்களுக்கு மத்தியில் முந்திரி, உலர்பழத் தொழில்

மு. வேல்சங்கர்

பாதாம், முந்திரிப் பருப்பு, கடலைகள் மற்றும் உலர்பழங்களின் தேவை நாட்டில் பல மடங்கு அதிகரித்துள்ள நிலையில், வரும் காலங்களில் அவற்றின் தேவையைப் பூர்த்தி செய்வதில், மிகப்பெரிய சவால்களை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
புரதச் சத்து மிகுந்த உலர் பழங்கள், முந்திரி, பாதாம், அக்ரூட், வேர் கடலை உள்ளிட்ட பருப்பு, கடலைகளில் 300 வகைகளுக்கு மேல் உள்ளன. இவைகளின் நுகர்வு உலகம் முழுவதும் அதிகரித்து வருகிறது. அதிலும், இந்தியாவில் இதன் பயன்பாடு மிகப்பெரிய உச்சத்தைத் தொட்டுள்ளது. புரதச் சத்து மிக்க உணவு வகைகள் குறித்த விழிப்புணர்வு மக்கள் மத்தியில் அதிகரித்து வருவது இதன் நுகர்வு அதிகரிக்கக் காரணம் என்று கூறலாம்.
வடஇந்தியா ஆதிக்கம்: உலக அளவில் முந்திரிப் பருப்பு நுகர்வில் இந்தியா முதலிடத்தில் இருக்கிறது. இதுதவிர, பாதாம், அக்ரூட் பருப்புகள் ஆகியவையும் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது.
மகாராஷ்டிரம், உத்தரப் பிரதேசம், ஒடிஸா உள்பட பல்வேறு வட மாநிலங்களில் பாதாம், முந்திரிப் பருப்பு, அக்ரூட் மற்றும் உலர் பழங்கள் நுகர்வு மிக அதிகமாக இருக்கிறது. குறிப்பாக, தீபாவளி பண்டிகை, திருமண முகூர்த்த காலங்களில்தான் அதிக அளவு கொள்முதலும் பயன்பாடும் உள்ளது.
தென் இந்தியாவில் இவற்றின் நுகர்வு அண்மைக் காலமாக கணிசமாக அதிகரித்து வருகிறது. ஒட்டுமொத்தமாக, நாட்டில் உலர்பழங்கள், பாதாம், முந்திரி, அக்ரூட் ஆகியவற்றின் நுகர்வு ஆண்டுக்கு 12 சதவீத அளவு வளர்ச்சி பெற்று வருகிறது.
நுகர்வைப் போலவே, அவற்றின் சந்தை மதிப்பும் தற்போது பல மடங்கு உயர்ந்துள்ளது. நடப்பு சந்தை மதிப்பில், முந்திரிப் பருப்பின் பங்களிப்பு சுமார் ரூ. 15,000 கோடியாகும். ஏற்றுமதி செய்யப்படும் முந்திரிப் பருப்பு மதிப்பு ரூ. 5,000 கோடியாகும். நமது உற்பத்தி மூலம் உள்நாட்டுத் தேவை பூர்த்தியாகாமல், தற்போது இறக்குமதி செய்யப்படும் பாதாமின் மதிப்பு ரூ. 5,000 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. பிற கடலை வகைகள் மற்றும் உலர் பழங்களின் இறக்குமதி ரூ.5,000 கோடியாகவும் உள்ளது. இது தவிர, வறுக்காத முந்திரி இறக்குமதி
ரூ. 11,000 கோடியாக இருக்கிறது.
இந்தியாவில் உற்பத்தி: மகாராஷ்டிரம், கேரளம், ஆந்திரம், ஒடிஸா ஆகிய மாநிலங்களில் முந்திரி, அக்ரூட் பருப்புகள், உலர் திராட்சை ஆகியவை உற்பத்தி செய்யப்படுகின்றன. உள்நாட்டுப் பயன்பாட்டுக்கு மட்டுமல்லாமல், இவை ஐரோப்பிய நாடுகள், மத்திய கிழக்கு நாடுகள், ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
பல வகை கடலை வகைகள் அமெரிக்கா, இராக், ஸ்பெயின் ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு, உள்நாட்டுத் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது.
இந்தத் தொழிலுக்கு வரும்காலங்களில் மிகப் பெரிய சவால்கள் காத்திருக்கின்றன. தேவைக்கு ஏற்ப அளிப்பு இல்லாததுதான் இதற்கு முக்கியக் காரணம்.
இது குறித்து சர்வதேச முந்திரிப் பருப்பு, பாதாம் மற்றும் உலர்பழங்கள் தொழில் கவுன்சிலின் இந்தியாவுக்கான தூதர் பிரதாப் ஆர். நாயர் கூறியது:
இந்தத் தொழிலைப் பொருத்தவரை, இந்தியா மிகப் பெரிய சந்தையாக உள்ளது. ஆண்டுக்கு சுமார் ரூ. 25,900 கோடி அளவுக்கு வர்த்தகம் நடைபெறுகிறது.
ஆண்டுதோறும் முந்திரிப் பருப்பு, பாதாம், அக்ரூட் பருப்பு, உலர்பழங்களுக்கான தேவை அதிகரித்து வரும் நிலையில், அதற்கான சந்தை அளிப்பு குறைவாகவே உள்ளது.
இந்த வகைப் பயிர்களுக்கான விளைநிலத்தின் பரப்பளவு சுருங்கி, உற்பத்தி குறைந்து வருகிறது. இது இந்தத் தொழிலுக்கு மிகப் பெரிய சவாலாக உள்ளது.
இந்த நிலை தொடர்ந்தால், உள்நாட்டுத் தேவையையே பூர்த்தி செய்ய முடியாது என்கிற நிலை எழக்கூடும். அதைத் தொடர்ந்து பற்றாக்குறை நிலை எழுந்து விலை பல மடங்கு உயரும். எனவே நாட்டில் இந்த வகைப் பயிர்களின் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்.
நாட்டில் பயன்பாடு இல்லாத நிலங்களை உலர்பழங்கள் மற்றும் முந்திரி, அக்ரூட் போன்றவற்றின் உற்பத்திக்குப் பயன்படுத்தலாம். அதற்கான புதிய வேளாண் தொழில்நுட்பங்கள் உள்ளன. இது தொடர்பாக மத்திய அரசிடம் ஆலோசனை நடத்தி வருகிறோம். இதன் மூலம் உற்பத்தியைப் பெருக்கவும், சந்தையில் சப்ளையை அதிகரிக்கவும், ஏற்றுமதி வருவாயைப் பெருக்கவும் முடியும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார் பிரதாப் ஆர். நாயர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சின்னஞ்சிறு சித்திரமே....ரவீனா!

வேட்டையன் கதை வித்தியாசமானது: ராணா டக்குபதி

அயோத்தி ராமர் கோயிலில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வழிபாடு

இவானா டுடே!

த.செ. ஞானவேல் இயக்கத்தில் நானி?

SCROLL FOR NEXT