வர்த்தகம்

மீண்டெழும் குறு, சிறு, நடுத்தரத் தொழிலகங்கள்

கு. வைத்திலிங்கம்

பாரத மிகுமின் நிறுவனத்திலிருந்து ஆர்டர்கள் கிடைத்துள்ளதால், திருச்சி மற்றும் அதன் சுற்றுப்புற மாவட்டங்களைச் சேர்ந்த குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் தேக்கநிலையிலிருந்து தற்போது மீண்டெழத் தொடங்கியிருக்கின்றன.
மத்திய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் அமைச்சகத்தின் கீழ் தொழில்கள் பட்டியலில் இயந்திரவியல், ஜவுளி, தகவல் தொழில்நுட்பம், ஆட்டோமொபைல் தொழில்நுட்பம் போன்ற பல தொழில்கள் கொண்டுவரப்பட்டிருக்கின்றன. குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் கீழ், திருச்சி மாவட்டத்தில் சுமார் 5,000 நிறுவனங்கள் இயங்கி வருவதாகவும், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் ஏறத்தாழ 1,000 நிறுவனங்கள் இயங்கி வருவதாகவும் தெரிகிறது.
பெல் நிறுவனத்திலிருந்து மூலப் பொருள்களைப் பெற்று, அந்த நிறுவனத்தின் தேவைக்கேற்ப மின் உற்பத்திக்கு தேவையான பாய்லர்கள், நீள்வடிவிலான பீம்கள் உள்ளிட்ட சாதனங்களைத் தயாரித்து வழங்குவதற்காக, திருவெறும்பூர், காட்டூர், புதுக்கோட்டை சாலை, மாத்தூர் போன்ற பகுதிகளில் சிறிய நிலை முதல் பெரிய நிலை வரையிலான 500 தொழிலகங்கள் செயல்பட்டு வந்தன.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட பொருளாதாரத் தேக்கம், பெல் நிறுவனத்துக்கு கிடைத்து வந்த ஆர்டர்களின் குறைவு போன்ற காரணங்களால், சுமார் 200 தொழிலகங்கள் தொடர்ந்து இயங்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டன. அந்த தொழிலகங்களை மீண்டும் இயங்கச் செய்ய பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும், அதற்கான பணி வாய்ப்புகள் சரிவர இல்லாததால் அவை இயங்காத நிலைக்குச் சென்றன.
இந்த நிலையில், திருச்சி பெல் நிறுவனத்துக்குத் தொடர்ந்து ஆர்டர்கள் கிடைக்கும் வகையிலான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டதன் விளைவாக தற்போது, சுமார் ரூ. 4,000 கோடி மதிப்பிலான ஆர்டர்கள் கிடைத்திருக்கின்றன. தமிழகத்தில் மட்டுமல்லாது, பிற மாநிலங்களிலும் மின் உற்பத்தி நிலையங்களுக்குத் தேவையான கொதிகலன்கள் மற்றும் இதர உதவி சாதனங்களில் குறிப்பிட்ட அளவில் தயாரித்து வழங்கும் ஆர்டர்கள் கிடைத்திருக்கின்றன.
இதனால், பெல் நிறுவனத்தைச் சார்ந்து இயங்கி வரும் தொழிலகங்களுக்கு மீண்டும் புத்துணர்வு கிடைத்திருக்கிறது. சுமார் 300 தொழிலகங்கள் மீண்டும் புத்துயிர் பெற்று, பெல் நிறுவனத்துக்குத் தேவையான உதிரி பாகங்களைத் தயாரித்து வழங்கும் பணியை மேற்கொள்ளத் தொடங்கியிருக்கின்றன.
இதுபோல, பாதுகாப்புத் துறைக்குத் தேவையான தளவாடங்களை உள்நாட்டிலேயே தயாரித்து வழங்குவதனை ஊக்குவிக்கும் வகையில், பாதுகாப்புத் தொழில் வளாகங்களை உருவாக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி வருகிறார். அதன் அடிப்படையில், தமிழகத்தில் சென்னை, சேலம், திருச்சி, ஒசூர் உள்ளிட்ட இடங்களில் இந்த வளாகங்களை உருவாக்கி, அந்தந்த பகுதியிலுள்ள தொழிலகங்களின் உதவியுடன் பாதுகாப்புத் துறைக்குத் தேவையான உதவி சாதனங்களைத் தயாரித்து வழங்குவதற்கான பணிகளை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்னெடுத்தார்.
திருச்சியில் மத்திய பாதுகாப்புத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள, படைக்கலத் தொழிற்சாலை (ஓ.எப்.டி), கனரக உலோக ஊடுருவித் தொழிற்சாலை (எச்.ஏ.பி.பி) போன்ற தொழிற்சாலைகளில் ஆய்வு மேற்கொண்ட நிர்மலா சீதாராமன், சில ஆலோசனைகளை வழங்கியிருக்கிறார்.
அதன் அடிப்படையில், படைக்கலத் தொழிற்சாலை, கனரக உலோக ஊடுருவித் தொழிற்சாலை, தங்களுக்குத் தேவைப்படும் பொருள்கள் எவை என்பதை பட்டியிலிட்டிருப்பதைத் தொடர்ந்து, அவற்றைத் தயாரித்து வழங்க விரும்பும் தொழிலகங்கள் தங்களை விற்பனையாளராகப் பதிவு செய்து கொள்ளும்படி அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதையடுத்து, பல தொழில் நிறுவனங்கள் பதிவு செய்துகொண்டு, தங்கள் நிறுவனத்துக்கு ஏற்ற வகையிலான உற்பத்திப் பொருள்களைத் தயாரித்து வழங்க முடிவு செய்திருக்கின்றன.

சரியான வாய்ப்பு

பெல் நிறுவனமாக இருந்தாலும் சரி, படைக்கலத் தொழிற்சாலையாக இருந்தாலும் சரி, தற்போது அந்த நிறுவனங்களிடமிருந்து குறு, சிறு தொழில் நிறுவனங்களுக்குப் புத்துணர்வை அளிக்கும் வகையிலான நடவடிக்கையை மேற்கொண்டிருக்கின்றன. எனவே நலிவடைந்த நிலையில் இருக்கும் நிறுவனங்கள் மீண்டும் புத்துயிர் பெறுவதற்கு இதுவே சரியான வாய்ப்பாகும்.
நிர்மலா சீதாராமன் முன்னெடுத்து வரும் பணிகளில் ஒன்றான, பாதுகாப்புத் தொழில் வளாகங்கள் அமைப்பதன் மூலம் திருச்சி மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களைச் சேர்ந்த தொழிலகங்களுக்கு பல்வேறு தொழில் வாய்ப்புகள் கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி உற்பத்திப் பொருள்களை செய்து கொடுத்து, தங்கள் நிறுவனங்களை வளர்ச்சிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார் பெல்சியா தலைவர் அசோக் சுந்தரேசன்.


பெல் போன்ற நிறுவனத்திலிருந்து மூலப் பொருள்களை வாங்கி வைத்திருக்கும்போது, அதை தயாரித்து தரும் வரையிலான காலத்தில் சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் அந்தப் பொருள் இருந்தாலும் லேபர் சார்ஜ் 18 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது. பொருள்களை தயாரிக்க மூன்று மாதங்கள் முதல் 5 மாதங்கள் வரை தேவைப்படும் நிலையில், நாங்கள் தொழிலகங்களில் வைத்திருக்கும் காலத்துக்கும் சேர்த்து லேபர் சார்ஜ் கட்ட வேண்டிய நிலை உள்ளது. எனவே ஜி.எஸ்.டி. விகிதத்தை 18 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகக் குறைத்தால் எங்களுக்கு நலம் பயக்கும்.


திருச்சி பஞ்சப்பூர் சாலையில் 10 ஏக்கர் பரப்பளவில் வர்த்தகம் மையம் அமைப்பதற்கான பூர்வாங்கப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்த மையம் அமைக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தால், குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு பெரும் பயன் தரும் நிலை ஏற்படும். தற்போதைய நிலையில், திருச்சியில் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த துறைகளில் வேலைவாய்ப்புகள் அதிக அளவில் கிடைக்கின்றன. இன்னும் அதிக அளவில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களைத் தொடங்கும்போது, வேலைவாய்ப்புகளும் அதிகரிக்கும் என்றார் திருச்சி மாவட்ட குறு, சிறு தொழில்கள் சங்கத் தலைவர் கனகசபாபதி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

4-ஆவது கட்ட மக்களவைத் தோ்தலில் 1,717 போ் போட்டி

உள்ளூா் வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை

நாகை அரசு தலைமை மருத்துவமனை சிகிச்சைப் பிரிவுகள் மாற்றம்: சிபிஎம் ஆா்ப்பாட்டம்

மணிப்பூா் இனக் கலவரம்: ஓராண்டாகியும் நீடிக்கும் பிளவு!

கட்கபுரீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

SCROLL FOR NEXT