வர்த்தகம்

விபத்துக் காப்பீடு ரூ.15 லட்சமாக உயர்வு: முறையாக பயன்படுத்தப்படுமா?

வை. இராமச்சந்திரன்

இந்தியாவில் யுனைடெட் இந்தியா, நியூ இந்தியா, நேஷனல், ஓரியண்டல் என நான்கு அரசு பொதுக்காப்பீட்டு நிறுவனங்களும், 25-க்கும் மேற்பட்ட தனியார் காப்பீட்டு நிறுவனங்களும் வாகனங்களுக்கான காப்பீடுகளை வழங்கி வருகின்றன. 

இந்நிறுவனங்களிலிருந்து, வாடிக்கையாளர்கள் நேரடியாகவும், முகவர்கள், தரகர்கள், தனியார் நிதி சேவை நிறுவனங்கள், வங்கிகள் மூலமாகவும் பிரீமியம் செலுத்தி காப்பீட்டு சேவையை பெற்று வருகின்றனர்.
பொதுவாக வாகனங்களுக்கு இருவகையான காப்பீடுகள் வழங்கப்படுகின்றன. அவை பேக்கேஜ் பாலிசி, மூன்றாம் நபர் காப்பீடு. காப்பீட்டுக் காலம் ஓராண்டு மட்டுமே. ஆனால் தற்போது புதிதாக வாங்கும் இருசக்கர வாகனத்துக்கு 5 ஆண்டுகளுக்கும், காருக்கு 3 ஆண்டுகளுக்கும் காப்பீடு (LONGTERM POLICY) செய்ய வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
வாகனங்களுக்கான இந்த இருவகையான காப்பீடுகளிலும், வாகன உரிமையாளர் மற்றும் ஓட்டுநருக்கான (OWNER CUM DRIVER) கட்டாய விபத்துக் காப்பீடும் உள்ளடங்கும்.
இந்த கட்டாய விபத்துக் காப்பீடு குறித்து பெரும்பாலான வாகன உரிமையாளர்களுக்கு புரிந்துணர்தல் இருப்பதில்லை. காப்பீட்டு நிறுவனங்களில் கேட்ட தொகையை கொடுத்துவிட்டு பாலிசியை பெற்றுச் செல்லும் வாகன உரிமையாளர்கள் ஒரு ரகம் என்றால், குறைந்த தொகையில் ஏதாவது பாலிசியை போட்டுத் தாருங்கள் என கூறி, அதில் என்னென்ன கவரேஜ் உள்ளன என்பது குறித்து அறியாமலேயே வாங்கிச் செல்லும் வாகன உரிமையாளர்கள் மற்றொரு ரகம். வாகனக் காப்பீட்டில் உள்ள கவரேஜ் குறித்து அறிந்து காப்பீடு செய்து செல்பவர்கள் சொற்ப அளவிலேயே உள்ளனர்.
விபத்துக் காப்பீட்டின் அவசியம்: குடும்பத்தின் ஒரே வருவாயை ஈட்டும் ஒருவர் திடீரென விபத்தில் சிக்கி உயிரிழக்கும்போது, அவரது குடும்பத்தினர் பொருளாதார ரீதியாக எதிர்கொள்ளும் பிரச்னைகள் ஏராளம். அந்த குடும்பத்தின் வாழ்க்கைச் சூழலையே புரட்டிப்போட்டுவிடும். 
விபத்தால் ஏற்படும் உயிரிழப்புகளை ஈடு செய்ய முடியாது என்றாலும், பின்னர் ஏற்படும் பொருளாதாரப் பிரச்னைக்குத் தீர்வு தரும் காப்பீட்டுத் திட்டம் ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு வரப்பிரசாதமாகும். 
கட்டாய விபத்துக் காப்பீட்டின்படி, வாகன உரிமையாளர் ஒருவர் இறந்தால், இரு சக்கர வாகனம் என்றால், ஒரு லட்சம் ரூபாயும், நான்கு சக்கர வாகனம் என்றால் 2 லட்சம் ரூபாயும் இழப்பீட்டுத் தொகையாக வழங்கும் வகையில், இத்திட்டம் கடந்த 2002 ஆகஸ்ட் மாதம் முதல் அமலில் இருந்து வந்தது.
விபத்தால் குடும்பத் தலைவரை இழக்கும் குடும்பம், பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுவிடக் கூடாது எனக் கருதி, அன்றைய பொருளாதார சூழ்நிலையை கணக்கில் கொண்டு, இந்த விபத்துக் காப்பீட்டுத் திட்டம் அமல்படுத்தப்பட்டது.
சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு அமலுக்கு வந்த இந்தத் திட்டத்தில், ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடு என்பது அப்போதைய குடும்பச் சூழலுக்குப் போதுமானதாக இருந்திருக்கலாம். ஆனால் தற்போது, மருத்துவச் சிகிச்சை செலவு பலமடங்கு உயர்ந்துவிட்டது.குழந்தைகளின் கல்விக் கட்டணங்கள் பல மடங்கு உயர்ந்துவிட்டன. இதனால் வாகன விபத்துகளால் உயிரிழப்பு, பலத்த காயங்கள் ஏற்படும்போது, அந்த குடும்பமே முடங்கி விடுகிறது.
எனவே, அதிகரிக்கும் மருத்துவச் சிகிச்சை செலவு, அன்றாட வாழ்க்கை செலவு உயர்வின் அடிப்படையில், அனைத்து ரக வாகனங்களிலும் கட்டாய தனிநபர் விபத்துக் காப்பீட்டுத் தொகையை, ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.15 லட்சமாக உயர்த்தும்படி, காப்பீட்டு ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையத்துக்கு (ஐஆர்டிஏஐ), அண்மையில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
ரூ.1லட்சத்திலிருந்து ரூ.15 லட்சமாக உயர்வு: இதையடுத்து காப்பீட்டு ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் அறிவுறுத்தலில், அரசு பொதுக்காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் தனியார் காப்பீட்டு நிறுவனங்கள், கடந்த செப்டம்பர் மாதம் இறுதியில் இருந்து அனைத்து ரக வாகனங்களிலும் கட்டாய தனிநபர் விபத்துக் காப்பீட்டுத் தொகையை, ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.15 லட்சமாக உயர்த்தி, இத்திட்டத்தை அமல்படுத்த தொடங்கியுள்ளன.
பிரீமியம் கடுமையாக உயர்வு: கட்டாய விபத்துக் காப்பீட்டுத் தொகை உயர்த்தப்பட்டதன் காரணமாக, இருசக்கர வாகனங்களுக்கு இரு மடங்குக்கும் மேல் பிரீமியம் அதிகரித்துள்ளது. இலகுரக, கனரக வாகனங்களுக்கு ஏற்கெனவே பெரிய தொகையில் பிரீமியம் உள்ளதால், இந்த பிரீமியம் உயர்வு பெரிதாக தெரிவதில்லை.
வாகன உரிமையாளர்கள் அதிர்ச்சி: ஏற்கெனவே வாகனக் காப்பீட்டுக்கான பிரீமியம் தொகை ஆண்டுதோறும் ஏப்.1ஆம் தேதி முதல் உயர்த்தப்பட்டுவரும் நிலையில், இந்த திடீர் பிரீமியம் உயர்வு வாகன உரிமையாளர்களுக்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
பொதுவாகவே இரு சக்கர வாகன ஓட்டிகளை பொருத்த அளவில், வாகனங்களுக்கு காப்பீடு செய்ய வேண்டுமென்றாலே ரொம்ப யோசித்தே காப்பீடு செய்வர். காரணம் காப்பீட்டு நிறுவனங்களுக்கு கட்டப்படும் பிரீமியம் அனைத்தும் வீண். நாம் என்ன கட்டிய பணத்தை திரும்பவா பெறப்போகிறோம்? எதற்காக இப்படி ஆண்டுதோறும் கட்டணத்தை அதிகரித்து கொள்ளையடிக்கிறார்கள் என்ற எண்ணம் பாமர வாகன ஓட்டிகளுக்கு மட்டுமன்றி, நன்கு படித்த வாகன ஓட்டிகளுக்கும் கூட ஏற்படுவது வழக்கம். காரணம், இவர்களைப் பொருத்த அளவில், காப்பீட்டு நிறுவனங்களுக்கு கட்டும் பணம் தேவையற்றது.
காப்பீட்டின் முக்கியத்துவம்: நாள்தோறும் நிகழும் விபத்துகளில் உயிரிழப்போர், காயமடைவோர், வாகனச் சேதங்களை சந்திப்போர் இழப்பீடு பெறும் போது, அவர்களுக்குத்தான் தெரியும் வாகனக் காப்பீட்டின் முக்கியத்துவம். இழப்பை சந்திப்பவர்களுக்கு ஈடு செய்ய இத்தகைய காப்பீடுகளால் மட்டுமே முடியும்.
புரிந்துணர்தல் அவசியம்: வாகன உரிமையாளர்களிடையே, வாகனங்களுக்கான காப்பீட்டில் கட்டாய விபத்துக்காப்பீடு உயர்த்தப்பட்டுள்ளது குறித்த புரிந்துணர்தல் அவசியம் வேண்டும்.
இதுவரை வாகனத்துக்கான பிரீமியத்தை உயர்த்தியதற்கும், தற்போது உயர்த்தப்பட்டுள்ளதற்கும் வித்தியாசம் உள்ளது. இதுவரை உயர்த்திய பிரீமியங்கள் எல்லாம் வாகனத்துக்கும் மூன்றாம் நபருக்கும் பாதுகாப்பு வழங்கும் வகையிலேயே அமைந்திருந்தது.
ஆனால் தற்போது உயர்த்தப்பட்டுள்ள பிரீமியம், முதல் முறையாக வாகன உரிமையாளர்களின் நலனில் அக்கறை கொண்டதாகும். இந்த கட்டாய விபத்துக் காப்பீட்டுத் தொகை உயர்வு குறித்து புரிந்து கொள்ள வேண்டும்.
எளிதாகும் இழப்பீடு கோருதல்: பொதுவாக வாகன விபத்துகளில் உயிரிழப்பு ஏற்பட்டால், அதற்கான இழப்பீட்டுத் தொகையை பெற நீதிமன்றங்களை நாட வேண்டியது இருக்கும். ஆண்டுக் கணக்கில் அலைச்சல் இருக்கும். இழப்பீட்டுத் தொகையை நீதிமன்றங்களே தீர்மானிக்கும்.
ஆனால் இந்த கட்டாய விபத்துக் காப்பீட்டுத் திட்டத்தின்படி, வாகன உரிமையாளர், அவருடைய வாகனத்தை இயக்கும்போது ஏற்படும் விபத்தால் உயிரிழப்பு ஏற்படுகையில் அந்த குடும்பத்துக்கு ரூ.15 லட்சம் இழப்பீடாக வழங்கப்படுகிறது. இதற்கு நீதிமன்றம் நாட வேண்டிய அவசியம் இல்லை. வழக்கமான இறப்பு சான்றிதழ், வாரிசு சான்றிதழ், காவல் துறையின் எப்ஐஆர் நகல், பிரேத பரிசோதனை அறிக்கை உள்ளிட்ட சில ஆவணங்களே போதுமானது.
விபத்துக் காப்பீடு தவிர்ப்பு: அரசு பொதுக் காப்பீட்டு நிறுனங்களில் சில முகவர்களும், தனியார் பொதுக்காப்பீட்டு நிறுவனங்களில் பெரும்பாலான முகவர்களும், வாகனங்களுக்கான மூன்றாம் நபர் காப்பீட்டில், கட்டாய விபத்து காப்பீட்டை எடுத்து விட்டு, சாதாரணமாக பாலிசி வழங்குகின்றனர். இது காப்பீடு செய்ய வரும் பெரும்பாலான வாகன ஓட்டிகளுக்கு தெரியாது. அவர்களை பொறுத்தளவில் கட்டும் பணம் குறைவாக இருந்தால் போதும் என்ற மனநிலையிலேயேதான் இருப்பர். விபத்து ஏற்பட்டு இழப்பு கோரும் போதுதான் பிரச்னை வரும். எனவே, வாகன உரிமையாளர்களிடம் இத்திட்டம் குறித்து புரிய வைத்து பிரீமியத்தை பெற வேண்டும். 
முகவர்கள் தங்கள் சுயநலம் கருதாமல், நீதிமன்ற ஆணைப்படியும், காப்பீட்டு ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையம் உத்தரவுப்படியும், வாகனங்களுக்கான மூன்றாம் நபர் காப்பீட்டில் தனி நபர் விபத்துக் காப்பீடாக ரூ.15 லட்சம் காப்பீட்டுத் தொகைக்கு பிரீமியத்தை பெற்று பாலிசி வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். இதன் மூலம் நாம் வாகன ஓட்டிகளின் ஒவ்வொரு குடும்பத்தையும் பாதுகாக்கிறோம் என்ற உணர்வு எழ வேண்டும்.
ஆய்வு தேவை: வட்டாரப் போக்குவரத்துத் துறையினரும், காவல் துறையினரும் வாகனச் சோதனையின்போது, வாகனங்கள் காப்பீடு செய்யப்பட்டுள்ளனவா என்பதை ஆய்வு செய்யும் போது, விபத்துக் காப்பீடு ரூ.15 லட்சத்துக்கு உள்ளதா என்பது குறித்தும் ஆய்வு செய்ய வேண்டும். 
காப்பீட்டு நிறுவனங்கள் கட்டாய விபத்துக் காப்பீட்டை எடுத்து விடாமல் இருக்கும் வகையில், பாலிசியை வடிவமைக்க வேண்டும். அரசு மற்றும் தனியார் பொதுக் காப்பீட்டு நிறுவனங்கள் ஒரே மாதிரியான பிரீமியம் வசூலிப்பதை உறுதி செய்ய வேண்டும்.

பெரும்பாலான வாடிக்கையாளர்கள் வாகனங்களுக்கு காப்பீடு செய்யும் போது, கட்டும் தொகை குறைவாக இருக்க வேண்டும், நான் எந்த இழப்பீடு கோரியும் வரமாட்டேன், போலீஸாரிடம் இருந்து தப்பிக்கவே காப்பீடு செய்கிறேன் என்று கூறியே காப்பீடு செய்ய வருகின்றனர் என்று பொதுக் காப்பீட்டு நிறுவனத்தின் முன்னணி முகவர் கூறுகிறார். 
இல்லையெனில் வாகன பதிவு புத்தகத்தில் பெயர் மாற்றம் உள்ளிட்ட ஏதாவது பணி இருப்பின் அதற்காக காப்பீடு செய்ய வருகின்றனர். மற்றபடி கண்டிப்பாக காப்பீடு செய்துதான் சாலையில் வாகனங்களை இயக்கவேண்டும் என்று கருதுபவர்கள் சிலரே. இதனாலேயே அவர்களுக்கு ஏற்ப சில பிரிவுகளை தவிர்த்துவிட்டு பாலிசி வழங்கும் சூழல் உள்ளது. 
வாகன உரிமையாளர்களிடம் விபத்துக் காப்பீட்டுத் தொகை உயர்வின் அவசியம் குறித்து போதிய விழிப்புணர்வை அரசு ஏற்படுத்த வேண்டும். அதற்கு முகவர்களும் உறுதுணையாக இருக்க வேண்டும்.
தற்போது விபத்துக் காப்பீடு கட்டண உயர்வால், நீண்ட கால பாலிசி திட்டத்தில் புதிதாக காப்பீடு செய்பவர்களுக்கு பிரீமியம் மிக அதிகமாக உள்ளது. அதை சற்று குறைக்க வேண்டும் என்றார் அவர்.

கட்டாய விபத்துக் காப்பீடு அதிகரிப்புக்கு பின்னர் பெறப்படும் (மூன்றாம் நபர் காப்பீடு மட்டும்) பிரீமியம் தொகை

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

நீா்மோா் பந்தல் திறப்பு

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

SCROLL FOR NEXT