பொதுவாக, வாசிப்புத் திறன் குறைந்துவிட்டது என்று வருத்தப்படுபவர்கள் அதற்காக மாற்று நடவடிக்கை என்ன எடுத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை. ஆனால், தனி நபர்கள், நிறுவனங்கள் தன்னளவில் செயல்பட்டு வருவதைப் பார்க்க முடிகிறது. வாசிப்பில் ஆர்வம் உடைய நண்பர் ஒருவர் எப்போதும் தன் வரவேற்பறையில், நாளிதழ்களை, வார, மாத இதழ்களை வாங்கி வைத்திருப்பார்.
தேவையான நேரங்கள் தவிர, தொலைக்காட்சிப் பெட்டி அவர் வீட்டில் ஒளிர்வதே இல்லை. வந்திருப்பவர்கள் அவசர, அவசியமின்றி, கைப்பேசியைப் பயன்படுத்தினால் ஒழிய அதை அவர் நாகரிகமாகத் தவிர்க்கச் சொல்லிவிடுவார். ஆர்வத்தோடு இதழ்களைப் படிப்பவர்களுக்கு அவகாசம் அளிப்பார்; தேவையெனில், வீட்டுக்குச் சென்று படித்துவிட்டுத் தரவும் இசைவார்.
எழுத்தாள நண்பர் ஒருவர், "திண்ணை நூலகம்' ஒன்றையே தன் வீட்டில் நிறுவிச் செயல்படுத்தி வருகிறார். அழ.வள்ளியப்பாவின் புதல்வி தேவிநாச்சியப்பன், சிறுவர் சங்கத்தின் மூலமாக மாதம் ஒரு முறை தமது இல்லத்தில் சிறார்களையும் பெற்றோரையும் இணைத்து, பேசவும் நடிக்கவும் சொல்லவும் செய்து வருகிறார்.
இதுபோல், இலக்கிய ஆர்வம் உடைய மருத்துவர்கள், ஜோதிடர்கள், பொதுமக்கள் தொடர்புடைய தனியார் நிறுவனங்கள் அமைத்திருப்பவர்கள் தங்களின் வரவேற்பறையில் காத்திருப்பவர்களுக்காக நாளிதழ்களையும், பருவ இதழ்களையும், நூல்களையும் வைத்திருப்பதைப் பார்த்திருக்கிறேன்.
நாள்தோறும் நாளிதழ்களை வாங்கி வாசகர்களின் நேரத்தைப் பயனுள்ள வகையில் ஆக்கிக் கொள்ள உதவும் "மெஸ்'களும் இருக்கின்றன. சில நாள்களில் மதிய உணவு வேளைகளில், சோறு தீர்ந்துவிட்ட நிலையில் மறு உலை வைத்து ஆகும் வரை பொறுத்திருந்து உண்பவர்களாக வாடிக்கையாளர்கள் காத்திருப்பதையும் பார்த்திருக்கிறேன். அந்த வேளைகளில் அவர்களது பொறுமைக்கும் பசிக்கும் விருந்தளிப்பதாக, தினமணி உள்ளிட்ட நாளிதழ்கள் வைக்கப் பெற்றிருக்கின்றன. புதுவை "மெஸ்' ஒன்றில், இந்த வழக்கம் இன்றளவும் நடைமுறையில் இருக்கிறது.
"காலை வேளையில் இல்லப் பணிகள், அலுவலகத்துக்குக் கிளம்புதல் ஆகிய நெருக்கடிகளுக்கு மத்தியில் நாளிதழ்களைப் படிக்க நேரம் கிடைப்பதில்லை. மாலைக்குப் பிறகு, அன்றையச் செய்திகள் பழையதாகி விடுகின்றன. எனவே, மதிய வேளையில் உணவுக்கு இடையில், செய்திகள் படிக்க ஏதுவாக இந்தச் சூழல் இருக்கிறது' என்கிறார் வாடிக்கையாளர் ஒருவர்.
"தொடங்கிய காலத்தில், அதிகம் செய்தித்தாள்கள் கிடைக்காத போது, அவற்றைப் படிப்பதற்காகவே, எங்கள் மெஸ்ஸýக்கு வருவார்கள். அப்போது தொடங்கிய பழக்கம், இப்போதும் நடைமுறையில் உள்ளது' என்று அந்த மெஸ் உரிமையாளர் குறிப்பிடும்போது, ஒருவிதப் பெருமிதம் அவர்தம் முகத்தில் தவழ்ந்தது.
சென்னை மயிலாப்பூர்- திருவல்லிக்கேணி பகுதி மெஸ்களிலும் நாளிதழ்கள் இடம்பெறுவதைக் கண்டிருக்கிறேன். அதிலும் பாரதி பெயரிலான ஓர் உணவு விடுதியில் மகாகவி பாரதியார் படங்களுடன் அவரைப் பற்றிய நூல்களையும் காட்சிக்கு வைத்திருக்கப் பெற்றிருக்கின்றன.
பொதுவாக, தங்கும் விடுதிகளில் அறைகளிலும், அவற்றின் வரவேற்பறைகளிலும் செய்தித்தாள்களைப் பார்க்க முடியும். சலூன் கடைகளில் படிக்கவும் மீளப் பயன் கொள்ளவும் செய்தித்தாள்கள் வாங்குவது வழக்கம்.
சில ஆண்டுகளுக்கு முன்பு, பெங்களூரில் ஓடும் பேருந்தில் செய்தித்தாள்கள் வைக்கப்படுவதும், காலை வேளைகளில் பணிநிமித்தம் பயணம் செய்வோர் அவற்றைப் படிப்பதுமான தகவலைச் செய்தித்தாள் ஒன்றில் படித்ததும் இந்த நேரத்தில் நினைவுக்கு வருகிறது. இப்போது நடைமுறையில் இருக்கிறதா எனத் தெரியவில்லை.
அதுபோல் நெடுந்தொலைவுப் பயண வாகனங்களில் வாசிப்புக்கு உரிய இதழ்களை, சின்னஞ்சிறு நூல்களை வைத்து உதவலாம். நெடுந்தொலைவுப் பயணத்தின் போது படிப்பதற்கென்றே சில நூல்களை எடுத்துச் செல்பவர்களுக்கு மத்தியில், பயணம் தொடங்குமுன் பேருந்து, ரயில் நிலையக் கடைகளில் விற்பனை செய்யப்பெறும் இதழ்களை வாங்கி வைத்துக் கொள்வதும் பலரது நடைமுறையில் இருந்தது.
அவசரமாக வண்டியில் ஏறியவர்களுக்குக் கூடக் கிடைக்கும் வகையில் கொண்டுவந்து விற்கிறவர்கள் இருந்தார்கள். இன்றைக்கு எல்லாரது கைகளிலும் கைப்பேசிகள்; அவற்றில் பெரும்பாலும் காணொலி நிகழ்வுகளே பயணிகள் விழிகளில் பிரதிபலிக்கக் காண்கிறோம்.
ஆனாலும், வாசிப்பவர்கள் வாசித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களின் எண்ணிக்கை அளவில் சுருக்கம் நேர்ந்திருக்கிறது என்பதை மறுக்க இயலாது. இதற்கு மாற்று ஏற்பாடாக வாராந்தர வாசிப்பு இயக்கங்களை, வட்டாரம் சார்ந்து பலர் மேற்கொண்டு வருகிறார்கள்.
நான் முன்னர் பணியாற்றிய தனியார் பள்ளி ஒன்றில், வகுப்பறை தோறும் வாசிப்புத் தளம் (ரீடிங் கார்னர்) ஒதுக்கப் பெற்றிருக்கும். ஓய்வு நேரங்களில், வகுப்பு இடைவேளைப் பொழுதுகளில் வாசிக்க உதவும் வகையில் அவரவர் வாசிப்புத் தரத்துக்கேற்ப, நூல்கள் வாசிப்பு அட்டைகள் வைக்கப்பெற்று செயல்பட வைப்பது உண்டு. வாரம் ஒரு முறை நூல்களை மாற்றி வைப்பது வழக்கம்.
இன்றளவும் சில கல்விநிறுவனங்களில் "வாசிப்பரங்குகள்' (ரீடிங் க்ளப்) நடைமுறையில் இருக்கின்றன. முறை வைத்துக் கூடும் அக்கூட்டங்களில் மாணவ, மாணவிகள் தாம் வாசித்த நூல்களை அறிமுகப்படுத்தி - மதிப்பிட்டு உரை வழங்குவதும் கலந்துரையாடுவதும் உண்டு. அரசுப் பள்ளிகளில் தினம் ஒரு திருக்குறள், நாளிதழ்களில் இருந்து செய்திகளைத் திரட்டித் தொகுத்து வழிபாட்டுக் கூட்டத்தில் கூறுதல் நடைமுறைப்படுத்தப் பெறுகின்றன.
வசிப்பிடம் சார்ந்து நகர்களுக்கும் தெருக்களுக்கும், தொகுப்பு வீடுகளைக் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகளுக்கும் தனித்தனி அமைப்புகளை வைத்துச் செயல்பட்டு வருபவர்கள், மாதம் ஒரு முறையேனும் இவ்வகையில் கூடி இயங்கினால், குறைந்தபட்சம் குழந்தைகளுக்கு மத்தியில் வாசிப்புப் பழக்கம் வளரும். இதுவும் முடியாதவர்கள், தத்தம் இல்லங்களில் உணவுக் கூடத்தில் வரவேற்பறையில் கூடி, வார விடுமுறை நாள் ஒன்றில், வாசித்துக் காட்டலாம்; கலந்துரையாடலாம்.
பல பெரிய, அரிய நூல்களை அதன் பொருள் உணராமலேயே வாசித்த அனுபவங்கள் பலருக்கு வாய்த்திருக்கக் கூடும். அவை அப்போது புரியாவிட்டாலும், வளர வளர அந்த வாசிப்பின் பலனாக வாசக ஞானம் வந்து சேர்ந்திருக்கிறதுதானே! வாசக ஞானம் ஏனைய ஞானங்களில் எல்லாம் உயர்ந்தது என்பதை உணர்ந்தவர்கள் ஒவ்வொருவரும் இதைச் செயல்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம்.
இலக்கிய அன்பர்கள் சிலர், மாதம் ஒருமுறை தத்தம் பகுதியில் உள்ள பூங்காவில் கூடி, வாசித்தவற்றைக் குறித்து விவாதித்து வந்த நிகழ்வுகளில் பங்கேற்றிருக்கின்றேன். இப்போது இணைவழியிலும் இத்தகு உரையாடல்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.
இதை மேலும் விரிவாக்க என்ன செய்யலாம் என யோசனை கேட்டவர்களுக்கு அவ்வப்போது கூறியதை இங்கு நிரல்படுத்திச் சொல்லவும் வேண்டும். பொதுமக்கள் குழுமுகிற பூங்காக்களில், சமூக சேவையில் ஈடுபாடு உள்ள அரிமா சங்கம், ரோட்டரி, ஜேசீஸ் உள்ளிட்ட அமைப்புகள் வாசிப்புத் தளங்களை அனுமதி பெற்று அமைக்கலாம். ஓய்வு பெற்றவர்கள், முதியவர்கள் பலரும் வந்து நடைப்பயிற்சி முடித்து ஓய்வெடுக்கும்போது, வாசிக்கும் விதத்தில் அதை அமைக்கலாம். குழந்தைகளைக் கவரும் வகையில் சிறார் இலக்கிய நூல்களைக் குறைந்த அளவிலேனும் காட்சிப்படுத்தலாம்.
பதிப்பகத்தார்கள், உரிய அனுமதி பெற்று, அத்தகு இடங்களில் "புதிய வரவுகள்' என்கிற நிலையில், பாதுகாப்பான நிலையில், கண்ணாடிப் பெட்டிக்குள் நூல்களைக் காட்சிக்குப் படும்படி விளம்பரமாகவும் வைக்கலாம்; முடிந்தால், சிறிய அளவில் அவர்களே தம் பகுதி சார்ந்த இடங்களில் கூட்டங்களும் நடத்தலாம்.
ஓய்வு பெற்றவர்கள் நாள்தோறும் நடைப்பயிற்சி மேற்கொள்வதற்கென்றே, சங்கம் அமைத்திருக்கிறார்கள்; தத்தம் பணி சார்ந்த அமைப்புகளில் கூடிப் பேசிப் பல ஆக்கப் பணிகள் செய்து வருகிறார்கள். அவர்கள், அதற்கிடையில், வாசிப்பு தொடர்பான செயல்பாட்டுக்கும் முக்கியத்துவம் அளிக்கலாம். வாங்கிப் படித்த நாளிதழ்களை, பருவ இதழ்களுடன் நூல்களையும் தம் நண்பர்களுக்குள் பகிர்ந்து கொள்ளலாம்.
பழைய பேப்பருக்கு விற்பதை விடவும் படிப்போர்க்கு உதவும் வகையில், அந்த நூல்களைப் பார்வைக்கும் பயன்பாட்டுக்கும் கொடுக்கலாம். தேவையானவற்றை எடுத்துக் கொள்ளவும், தேவை முடிந்தவற்றைக் கொண்டு வந்து வைக்கவும் பழக்கப்படுத்திவிட்டால், இது விரைவில் நடைமுறைக்குவந்து விடும். ரயில், பேருந்து முதலான பயண இடைவேளைகளில் காத்திருப்பு இடங்களில், அறைகளில், இந்தச் சுழல் முறைப் பயன்பாட்டு நூலகம் அமைந்தால் அவரவர் இயன்ற அளவில் பங்கேற்பர்.
’வாசக ஞானத்தினால் வருமோ சுகம் பாழ்த்த பூசலென்று போமோ புகலாய் பராபரமே' என்ற தாயுமானவரின் பாடலை மேற்கோளிட்டு, "வெறுமே வாக்களவாக ஏற்பட்டிருக்கும் ஞானத்தால் ஆனந்தமெய்த முடியவில்லையே! என் செய்வோம்? பாழ்பட்ட மனம் ஓயாமல் பூசலிட்டுக் கொண்டிருக்கிறதே? இந்தப் பூசல் எப்போது தீரும்? கடவுளே, நீ அதனைத் தெரிவிப்பாய்' என்று இதன் பொருளை விளக்கிய மகாகவி பாரதியார், இதே உண்மையை உலக நீதி விஷயத்தில் ஏற்கும்படி, திருவள்ளுவர் "சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் சொல்லிய வண்ணம் செயல்' என்ற குறளால் உணர்த்துகிறார் என்கிறார்.
வாசக ஞானத்தை வளர்ப்பது குறித்து எழுதியும் பேசியும் யாது பயன்? நடைமுறைப்படுத்தினால்தானே நமது நலமும், எதிர்காலத் தலைமுறையினரின் வளமும் மேம்படும்?
- கட்டுரையாளர்: எழுத்தாளர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.