தவிர்க்கப்பட வேண்டும் தற்கொலை!  
நடுப்பக்கக் கட்டுரைகள்

தவிர்க்கப்பட வேண்டும் தற்கொலை!

உலகில் ஏற்படும் மரணங்களுக்கான மூன்றாவது பெரிய காரணமாக தற்கொலை செய்து கொள்ளும் நிகழ்வுகள் அமைந்துள்ளதைப் பற்றி...

இரா. சாந்தகுமார்

உலக சுகாதார நிறுவனத்தின் சமீபத்திய அறிக்கையின்படி 2021-ஆம் ஆண்டில் உலக அளவில் 7,27,000 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். உலகில் ஏற்படும் மரணங்களுக்கான மூன்றாவது பெரிய காரணமாக தற்கொலை செய்து கொள்ளும் நிகழ்வுகள் அமைந்துள்ளன. நம் நாட்டில் 1995-ஆம் ஆண்டு முதல் 2015-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் சுமார் 3 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

2022-ஆம் ஆண்டில் மட்டும் 11,290 விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். விளைபொருள்களுக்கு உரிய விலையின்மை, கடும் வறட்சியால் விளைச்சலின்மை, மழை வெள்ளத்தால் பயிர்களுக்குச் சேதம், கடன் சுமை, பயிர்க் காப்பீடு செய்வது குறித்து விழிப்புணர்வின்மை ஆகியவையே விவசாயிகளின் தற்கொலைக்கான பிரதான காரணங்களாகும்.

வாழ்வில் எதிர்கொள்ளும் சவால்களை வெல்வது கடினம் என மனதில் உருவாகும் எதிர்மறை எண்ணங்கள் மற்றும் அதன் விளைவாக ஏற்படும் மன அழுத்தமுமே தற்கொலைகளுக்குக் காரணமாக அமைகின்றன.

ஆண்களோடு ஒப்பிடும்போது பெண்களே அன்றாட வாழ்க்கையில் அதிக அளவிலான சவால்களை எதிர்கொள்கின்றனர். அந்தச் சவால்களுக்கு எவ்வாறேனும் தீர்வு காண முடியும் என்ற மனவலிமை ஆண்களைக் காட்டிலும் பெண்களிடம் அதிகம் உள்ளது.

மன அழுத்தத்துக்கு உள்ளாகி தற்கொலை செய்துகொள்ளும் பெண்களின் எண்ணிக்கையைவிட ஆண்களின் எண்ணிக்கை இருமடங்கு இருப்பதே இதற்கு சான்று. மேலும், இதன்மூலம் பெண்கள் மனதால் பலவீனமானவர்கள் எனும் கற்பிதம் உண்மையல்ல என்பதும் நிரூபணமாகிறது.

தற்கொலை செய்து கொள்பவர்களில் இளவயதினரே அதிக அளவில் உள்ளனர். குறிப்பாக, 15 வயது முதல் 29 வயது வரையிலான இள வயதினர் அதிக எண்ணிக்கையில் தற்கொலை செய்துகொள்கின்றனர்.

தற்காலச் சூழலில் 60 வயதைக் கடந்த முதியவர்களும் தற்கொலை செய்துகொள்வதாக ஊடகங்களில் தகவல்கள் அவ்வப்போது வெளியாகின்றன. தற்கொலை செய்து கொள்வோரில் சுமார் 10% பேர் முதியவர்களாவர்.

ஒருவர் தற்கொலை செய்து கொள்வதன் மூலம் தான் சந்திக்கும் பிரச்னை முற்றுப் பெறுவதாகக் கருதலாம். ஆனால், தற்கொலை செய்துகொள்ளும் நபர், தான் எதிர் கொண்ட பிரச்னையைபோல் பன்மடங்கு பிரச்னையை தன்னைச் சார்ந்தவர்களுக்கு விட்டுச் செல்கிறார் என்பதே உண்மை.

கடனாளியான ஒருவர் தற்கொலை செய்துகொள்வதன் மூலம், தான் வாங்கிய கடனால் உண்டான பிரச்னையை தனது மனைவி, பிள்ளைகள் தோளில் ஏற்றி விட்டுச் செல்கிறார். குடும்பத் தலைவர் ஒருவர் தற்கொலை செய்துகொள்ளும்போது அவர் குடும்பமே பாதிக்கப்படுகிறது.

பல நேரங்களில் தற்கொலைகளுக்குத் தேவையற்ற எதிர்மறையான கற்பனைகளும், அச்சமுமே காரணங்களாக உள்ளன. பள்ளி இறுதித் தேர்வை சரியாக எழுதவில்லை என நினைத்து தற்கொலை செய்துகொண்ட பள்ளி மாணவி ஒருவர், அவர் எழுதிய தேர்வில் தேர்ச்சி பெற்றதோடு நல்ல மதிப்பெண் பெற்றதையும் இங்கே குறிப்பிட வேண்டும். சில பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் மீது தங்கள் விருப்பங்களைத் திணித்து அவர்களை மன அழுத்தத்துக்கு உள்ளாக்குகின்றனர்.

உடல் நலனையும், மனநலனையும் பாதிக்கும் மன அழுத்தத்தில் இருந்து வெளியே வருவதற்கான முதல்படி, கவலை தரும் மனச்சூழலிலிருந்து வெளியே வருதலாகும். அண்மையில் புது தில்லியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் ஏறத்தாழ இரண்டு ஆண்டுகள் பணியாற்றிய நிலையில் தான் செய்துவந்த பணியை விட்டு விலகியதோடு சுய தொழிலில் ஈடுபட முடிவு செய்துள்ளார்.

பணம் சம்பாதிப்பதைவிட பணிச் சுமையால் ஏற்பட்ட மன அழுத்தத்திலிருந்து விடுபடுவதே நன்று என தான் முடிவு செய்ததாலேயே பணியிலிருந்து தான் விலகியதாக அந்த இளம் பெண் சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்.

2030-ஆம் ஆண்டுக்குள் உலகில் நடைபெறும் தற்கொலைகளில் 30% குறைக்கப்பட வேண்டுமென்பது ஐ.நா. சபையின் குறிக்கோளாக உள்ளது. ஆனால், தற்கொலைச் சம்பவங்கள் நடப்பதைத் தடுப்பதற்கான உலக நாடுகளின் தற்போதைய சுமாரான நடவடிக்கைகளே தொடரும் நிலையில், சுமார் 12% தற்கொலைகளை மட்டுமே 2030-ஆம் ஆண்டுவாக்கில் தடுக்க முடியும் எனத் தெரிகிறது.

உலகின் மொத்த மக்கள்தொகையான சுமார் 800 கோடி பேரில் 100 கோடி மக்கள் மனநலன் சார்ந்த பிரச்னைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்குப் பல்வேறு காரணங்கள் உள்ளன. கூட்டுக் குடும்ப நடைமுறை சிதைந்துபோன நிலையில், குடும்ப உறவுகளுக்குள் ஒருவர் தம் மனக்கவலையை மற்றவரிடம் பகிர்ந்து ஆறுதல் தேடுவதென்பது அரிதாகி விட்டது.

நடந்து முடிந்த சோக நிகழ்வை நினைத்துக் கவலைப்படுவதால் மன அழுத்தம் மட்டுமே மிஞ்சுகிறது. மாறாக, மனதை தேற்றிக்கொண்டு தன்னம்பிக்கையுடன் செயல்படுவதன் மூலம் மனம் மகிழும் சூழல் ஏற்படும்.

'தீதும் நன்றும் பிறர் தர வாரா ' என்பதற்கொப்ப நாம் மகிழ்ந்திருப்பதும், கவலையுற்று இருப்பதும் நம் செயல்களைச் சார்ந்ததே. ஓயாது நற்சிந்தனையில் ஆழ்ந்திருக்கும் மனதில், எவ்விதக் கவலைக்கும், மன அழுத்தத்துக்கும் இடமில்லை.

அழுத்தத்தால் மன நலன் பெருமளவில் பாதிக்கப்படுகிறது. மனநலன் பாதிக்கப்பட்ட பலர் தாங்கள் மனநலன் பாதிக்கப்படாதவர் என்பதை அறியாததுதான் வேதனையின் உச்சம். உடல் சார்ந்த நோய்களைப்போல் மனம் சார்ந்த நோய்கள் வெளிப்படையாகத் தெரிவதி‌ல்லை.

உற‌வின‌‌ர்க‌ள், ந‌ண்ப‌ர்களுட‌ன் கலகல‌ப்புட‌ன், கல‌ந்துரையாடுவது மன‌ அழு‌த்த‌த்தைக் குறைப்பதோடு, மன‌ அழு‌த்த‌த்து‌க்கு‌க் காரணமான‌ அ‌ச்சமு‌ம் கவலைகளு‌ம் விலகுவத‌ற்கான‌ தீ‌ர்வுகளு‌ம் கிû‌ட‌க்க வா‌ய்‌ப்புக‌ள் உருவாகு‌ம்.'எ‌த்துணை இட‌ர்க‌ள் வரினு‌ம், வா‌ழ்‌க்கை இனிதாக வா‌ழ்வத‌ற்கே' எ‌ன்ற‌ மன‌ உறுதியுட‌ன் வா‌ழ்‌ந்தா‌ல் த‌ற்கொலைகளைத் தவி‌ர்‌ப்பது மிக எளிது!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

யோகம் யாருக்கு? தினப்பலன்கள்!

தங்கக் கட்டுப்பாடு சட்டத்தை மீண்டும் அமல்படுத்த வலியுறுத்தல்

சமயபுரம் பகுதிகளில் நாளை மின் தடை

தூத்துக்குடி ஹோலி கிராஸ் கல்லூரியில் பொன்விழா

பூதப்பாண்டி அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை கட்டடத்துக்கு அடிக்கல்

SCROLL FOR NEXT