முகப்பு
சென்னை

கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்: சென்னையில் 30 பேர் விண்ணப்பம்

இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் சேர்க்கை கோரி சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் 30 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

Updated On : 12 ஜூன், 2013 at 2:53 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:12 PM

இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் சேர்க்கை கோரி சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் 30 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

அவர்களில் 15 பேரை பள்ளியில் சேர்த்துக்கொள்ள தனியார் பள்ளிகள் நிர்வாகம் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும், 6 மாணவர்கள் பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள மாதிரி மேல்நிலைப் பள்ளியில் இதுவரை 80 பேர் விண்ணப்பங்களைப் பெற்றுச் சென்றுள்ளனர்.

Advertisement

இந்த ஒதுக்கீட்டின் கீழ் உள்ள இடங்களுக்கு ஜூன் 20-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் படி, தனியார் பள்ளிகளில் மழலையர் வகுப்பு, எல்.கே.ஜி., ஒன்றாம் வகுப்பு, ஆறாம் வகுப்பு போன்ற அறிமுக வகுப்புகளில் 25சதவீதம் இடங்களில் ஏழைகள், சமூக ரீதியாக நலிவடைந்த பிரிவினரைச் சேர்க்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதற்காக, தனியார் பள்ளிகள் இந்த ஆண்டு மே முதல் வாரத்தில் விண்ணப்பங்களை வழங்க வேண்டும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது.

ஆனால், இதுதொடர்பாக போதிய விழிப்புணர்வு இல்லாததால், விண்ணப்பங்கள் கூட பல பள்ளிகளில் வழங்கப்படவில்லை.

பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் இதுதொடர்பாக தனியார் பள்ளிகளுக்கு உத்தரவிட்ட பிறகு ஒரு சில பள்ளிகளில் மட்டுமே மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன.

இதையடுத்து, விண்ணப்பம் வழங்குவதற்கான தேதியை நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களிலும் இந்த விண்ணப்பங்களை இலவசமாக பெற்றோர்கள் பெற்றுக்கொள்ளலாம் என கல்வித் துறை அறிவித்தது. இதற்காக இரண்டு வார காலம் அவகாசமும் வழங்கப்பட்டது.

தனியார் பள்ளிகளில் இந்த ஒதுக்கீட்டின் கீழ் தகுதியானவர்களுக்கு மாவட்டக் கல்வி நிர்வாகமே சேர்க்கையைப் பெற்றுத்தருகின்றன.

மாணவர் சேர்க்கை தொடர்பாக ஆய்வு: சென்னையிலுள்ள தனியார் பள்ளிகளில் 25 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் நடைபெற்றுள்ள மாணவர் சேர்க்கை தொடர்பாக இப்போது ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.

இதுவரை 120 பள்ளிகளில் ஆய்வு நடைபெற்றுள்ளதாகவும், மீதமுள்ள பள்ளிகளில் ஜூன் 14-ஆம் தேதிக்குள் ஆய்வு நடத்தி முடிக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

தனியார் பள்ளிகள் இந்த ஒதுக்கீட்டில் மாணவர்களைச் சேர்க்க ஆர்வமாக உள்ளன. பல பள்ளிகளில் இந்த மாணவர்களுக்கான கட்டண விகிதம் குறித்தும் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.

இப்போது சி.பி.எஸ்.இ. பள்ளிகளை பெற்றோர்கள் அதிகமாக நாடுவதாலேயே தனியார் மெட்ரிக் பள்ளிகள் இந்த சேர்க்கையில் ஆர்வம் காட்டுவதாகவும் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.