முகப்பு
விவாதமேடை

தமிழக கோயில்களில் இணையவழி முன்பதிவு தரிசன முறை அமல்படுத்தப்பட இருப்பது குறித்து வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

நமது கலாசாரத்தில், வழிபாட்டுத் தலங்களுக்குச் சென்று வழிபடுவது என்பது ஆத்திக எண்ணம் கொண்ட எல்லோருக்குமே பொதுவான ஒன்றுதான்.

Updated On : 17 ஜூன் 2026, 4:21 am IST
திருச்செந்தூர். - படம்; டிஎன்எஸ்
பகிர்:

தவறில்லை

நமது கலாசாரத்தில், வழிபாட்டுத் தலங்களுக்குச் சென்று வழிபடுவது என்பது ஆத்திக எண்ணம் கொண்ட எல்லோருக்குமே பொதுவான ஒன்றுதான். திருப்பதி, சபரிமலை உள்ளிட்ட பிரபலமான கோயில்களில் இணைய வழி முன்பதிவு தரிசன முறைதான் நடைமுறையில் உள்ளது. இதைப்போல தமிழகத்திலும் பிரபலமான கோயில்களில் நடைமுறைப்படுத்துவதில் தவறில்லை. ஒருவேளை முன்பதிவு செய்து, தரிசிக்க இயலாமல் நேரும் காலத்தில், குறிப்பிட்ட தொகையைத் திருப்பித் தர வழிவகை செய்யலாம். இது போன்ற திட்டங்களின் தேவை கட்டாயமாகிறது.

அனன்யா, பொள்ளாச்சி.

Advertisement

Advertisement

நேரில் வருபவர்க்கு...

இணையவழியில் முன் பதிவு செய்யும் முறை நடைமுறை எதிர்கொள்ளும் முக்கியமான சவால் என்னவென்றால், எல்லா பக்தர்களுக்கும் இணையவழி முன்பதிவு செய்யும் முறை தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எல்லோரின் கைப்பேசியிலும் இணையதள வசதி இருக்காது. அப்படிப்பட்டவர்களுக்கு எப்படி இந்த முறை சாத்தியப்படும். கடவுளைத் தரிசிக்க நேரில் வருபவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து அவர்களுக்கு முன்பதிவு டிக்கெட் கொடுக்கும் முறையைச் செயல்படுத்துவதுதான் எல்லோரையும் சமமாக நடத்துவதற்கு அறிகுறி.

பிரகதாம்பாள், கடலூர்.

எளியவர்களைப் பாதிக்கும்

திருவிழா}விசேஷ காலங்களில் இந்த தரிசன முறை கூட்டத்தை சமாளிக்க உதவுமே தவிர எல்லா நாள்களிலும் சரியாக இருக்காது. கோயிலுக்கு வருகிற ஏழை, எளிய பக்தர்களுக்கு இந்த முறை தரிசனத்தை கையாளத் தெரிய வாய்ப்பில்லை. தமிழக கோயில்களில் இருக்கிற கட்டண தரிசன முறையை ரத்து செய்தாலே போதும். கூட்டத்தைக் கட்டுப்படுத்தி விடலாம். கட்டண தரிசனத்துக்கு முன்னுரிமை தருவதாலேயே இலவச தரிசனத்துக்கு நேரவிரயம் ஆகிறது. முடி காணிக்கைக்கு இலவசம் என்பதுபோல கோயிலில் தரிசனம் இலவசம் என்று இருந்தாலே போதும். பக்தர்களின் சிரமங்கள் தானாக விலகி விடும்.

சீ. காந்திமதிநாதன், கோவில்பட்டி.

இணையவழியே தீர்வு

தற்போதுள்ள சூழ்நிலையில் கோயில்களில் கூடும் கட்டுக்கடங்காத கூட்டத்தை நெறிப்படுத்துவதற்காகவும், வரிசையாக பக்தர்களை ஆலயத்துக்குள் அனுமதிக்கவும், வாய்ப்புள்ளவர்களிடம் கட்டணம் வசூலிக்கலாம் என்கிற திட்டம் கடைப்பிடிக்கப்பட்டது. காத்திருக்கும் பக்தர்கள் கூட்டத்தைப் பின்தள்ளிக் குறுக்குவழியில் தரிசனம் பெற ஆலயத்தைச் சார்ந்தவர்கள் தங்களுக்குள் ஒரு கூட்டணி அமைத்து முறைகேடாகப் பணம் ஈட்டத் தொடங்கி விட்டார்கள். இதனை அறவே ஒழிக்க இணையவழி முன்பதிவு செய்வதால் மேற்கொள்ளவும் முடியும்!

இரா.இரவிக்குமார், சென்னை.

சீராக்கினால் போதும்

தமிழக கோயில்களில் இணைய வழி முன்பதிவு தரிசன முறை என்பது அனைத்துக் கோயில்களும் பொருந்தாது. தமிழகத்தில் ஒருசில கோயில்களில்தான் கூட்டம் கட்டுக்கடங்காமல் உள்ளது. பாமர பக்தர்கள் இன்றளவும் இணையவழியை அறியாமல் இருக்கின்றனர். ஒருசில கோயில்களில் மட்டுமே கூட்டம் என்பதால் அனைத்துக் கோயில்களுக்கும் இது பொருந்தாது. எனவே, பிரசித்தி பெற்ற பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ள கோயில்களில் தற்போதுள்ள இணையவழி முன்பதிவு முறையைச் சீராக்கினாலே போதும்.

நா.குழந்தைவேலு, மதுரை.

முறைப்படுத்த வேண்டும்

இணைய வழியில் முன்பதிவு செய்ய எல்லோருக்கும் சாத்தியமானதாக இருக்கும் நிலையில் தமிழகக் கோயில்களில் இணையவழி முன்பதிவு தரிசன முறை அமல்படுத்தப் படுத்துவது நல்ல விஷயம்தான். கூட்ட நெரிசலில் சிக்காமல் குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் தரிசனம் செய்துவிட்டு பாதுகாப்பாகவும், நிம்மதியாகவும் திரும்பி வந்துவிட முடியும். அதேசமயம், இணைய வசதி குறித்த புரிதல் இல்லாத சாமானிய மக்களுக்கு இந்த நடைமுறை சிரமமாக இருக்கும். இரண்டு முறையிலும் முறைப்படுத்தப்பட்டு சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவதே நல்லது.

ப.கோவிந்தராசு, ஊத்தங்கால்.

நேரம் மிச்சப்படும்

இன்றைய வேகமான வாழ்க்கை முறையில், பக்தர்கள் தங்களது குடும்பத்துடன் கோயில் தரிசனத்தை முன்கூட்டியே திட்டமிட இந்த முறை பெரிதும் உதவும். தரிசன நேரம், கூட்ட நெரிசல் மற்றும் காத்திருப்பு காலம் போன்ற தகவல்களை முன்பே அறிந்துகொள்ள முடிவதால் நேர விரயமும் சிரமமும் குறையும். மேலும், பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் நிர்வாக வசதிகளை மேம்படுத்தவும் இந்த எண்ம முறை உதவும். மொத்தத்தில், இது பக்தர்களின் நேரத்தை மிச்சப்படுத்தி, கோயில் நிர்வாகத்தை நவீனமயமாக்கும் சிறந்த எண்ம முன்னேற்றமாகும்.

ரமேஷ் ராஜேந்திரன், சேலம்.

பூசலார் நாயனார்போல...

தமிழக கோயில்களில் இணையவழி முன் பதிவு தரிசன முறை அமல்படுத்தப்பட இருப்பது வரவேற்கத்தக்கது. அதே சமயம் கூட்டம் என்பது அன்றாட நிகழ்வாக மாறிவிட்ட கோயில்களில் நடை திறப்பு}சாத்து முறைகளிலும், பூஜை காலங்களிலும் மாற்றம் தேவை. கோயில்}பக்தி}பிரார்த்தனை}தரிசனம் என்பதெல்லாமே மனதுக்கு அமைதியைத் தருவதற்குத்தான். என்னதான் முன் பதிவு தரிசன முறை என்றாலும் கர்ப்பக்கிரக மூர்த்தியின் தரிசனம் என்பது இமைப் பொழுதுதான். நெரிசல் தருணங்களில் "பூசலார்' போன்ற பக்குவத்துடன் பக்தர்களும் நடந்து கொண்டால் நல்லது .

ஆர்.விநாயகராமன், திசையன்விளை.

முதியவர்களுக்கு மட்டும்...

கேரளத்தில் உள்ள சில முக்கிய கோயில்களில் மட்டுமே சிறப்புக் கட்டண தரிசன முறைகள் உள்ளன. இருப்பினும், பெரும்பாலான கேரள கோயில்களில் பொதுவான தரிசன முறைக்குத்தான் முன்னுரிமை அளிக்கப்படுகிறது; அதனை நாமும் பின்பற்றலாம். இணைய வழி முன்பதிவு எனும்போது ரயில் பயணச்சீட்டு முன்பதிவு செய்வதுபோல் ஒரே நபரே முன்பதிவு செய்து அதை கூடுதல் விலைக்கு விற்கவும் வாய்ப்பு உண்டு. எனவே சீரான பொது தரிசன முறையே சிறப்பானதாக அமையும். வயதானவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு மட்டும் முன்பதிவு முறையை நடைமுறைப்படுத்தலாம்.

ச.கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார்.

கண்காணிப்பு அவசியம்

கோயில்களில் இணையவழி முன்பதிவு தரிசனமுறை அமல்படுத்தப்பட இருப்பது வரவேற்க வேண்டிய ஒன்றுதான். ஆனால், முறைகேடுகள் நடப்பதற்கு வாய்ப்புகள் அதிகம். பதிவு செய்பவர்களின் உண்மையான விவரங்கள் பதிவு செய்வது அவசியமாகும். பதிவு செய்தவர்களுக்கு தரிசன காலம், நேரம் முன்கூட்டியே தெரிவிக்கப்பட வேண்டும். இதனால் நெருக்கடிகள் குறைந்து, எல்லோரும் தரிசனம் செய்யும் வாய்ப்பு ஏற்படும். முன்பதிவில் அதிகார துஷ்பிரயோகம், கையூட்டு நிகழ்வுகள் கண்காணிக்கப்பட வேண்டும்.

அ.கருப்பையா,பொன்னமராவதி.

இன்றியமையாதது

எண்ம உலகத்தில், அதுவும் நவீன தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்து கொண்டிருக்கும் இக்காலத்தில் இந்த முறை இன்றியமையாததாகும். தம் உடலை வருத்திக் கொண்டு, நாள் கணக்கில் பாத யாத்திரை மேற்கொண்டுவரும் பக்தர்கள் கடவுள் தரிசனத்துக்காக அவ்வளவு முக்கியத்துவம் அளிக்கிறார்கள். திருப்பதி ஏழுமலையான் கோயில் போன்ற பெரிய கோயில்களில் ஏற்கெனவே இந்த முறை நடைமுறையில் இருந்து வருகிறது. குறிப்பாக, மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு இந்தச் சிறப்பு தரிசன முறையை அமல்படுத்த வேண்டும்.

ரெ. பிரபாகரன், செபஸ்தியார்புரம்.

இரண்டும் தேவை

தமிழக கோயில்களில் இணையவழி முன்பதிவு தரிசன முறை அமல்படுத்த இருப்பது நல்லதே. வயதில் முதியவர்களாக இருக்கும் பக்தர்களின் சிரமங்கள் குறையும். ஆனால், அனைவருக்கும் இணையவழி முன்பதிவு வழிமுறை சுலபமல்ல. முழுவதுமாக இணையவழி முன்பதிவு தரிசனம் என்றில்லாமல் முன்பதிவு செய்யாதவர்கள் செல்வதற்கும் ஒரு வழி அனைத்து கோயில்களிலும் இருக்க வேண்டும். இணைய பயன்பாடு இல்லாத சில பக்தர்கள் இறைச் சிந்தனையோடு வரிசைக்கிரமமாக பல கோயில்களைத் தரிசித்து வருவார்கள்; அவர்களுக்கு முன்பதிவு சாத்தியமில்லை.

ந.கோவிந்தராஜன், ஸ்ரீமுஷ்ணம்.

திறன் மேம்படும்

கோயில்களில் நிலவும் குளறுபடிகள் இந்த முறையால் தடுக்கப்பட்டு இறைவன் முன் அனைவரும் சமம் என்கிற நிலை உருவாகும். பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று கூட்ட நெரிசலில் சிக்கி சாமி தரிசனம் செய்வது தவிர்க்கப்படும். இதன்மூலம் பக்தர்கள் குறித்த நேரத்தில் தரிசனம் செய்யலாம். கோயில்களின் நிர்வாகத் திறன் மேம்பட்டு வெளிப்படைத்தன்மை அதிகரிக்கும். முதியோர், குழந்தைகள், மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவியாக இருக்கும். தரிசனத்துக்கு அனுமதிச் சீட்டு வழங்குவதில் உள்ள முறைகேடுகள் தடுக்கப்படும்.

பா.சிதம்பரநாதன், கருவேலன்குளம்.

வேண்டாம் விபரீதம்

மனிதனுக்கும் இறைவனுக்கும் இடையில் யார் வந்தாலும் அது தவறுதான். ஆலயங்களில் பெருவாரியாக தரிசனத்துக்கு வருபவர்கள் சாமனிய மக்கள்தான். அவர்களுக்கு இணையவழி குறித்துப் போதுமான புரிதல் இருக்க வாய்ப்பில்லை. இணையவழி குளறுபடிகள் குறித்து நாம் அன்றாடம் பார்த்து வருகிறோம். ரேஷன் கடைகளிலும், தேர்வு நடைமுறைகளிலும் பல குழப்பங்கள் இணையவழி செயல்பாடுகளால் ஏற்பட்டு வருகின்றன. இணையவழி அனுமதி கிடைக்காவிட்டால் அது அபசகுணமாகப் பார்க்கப்படும் அச்சம் எழுகிறது. எனவே, விபத்தை வலியப்போய் ஏற்க வேண்டாம்.

எஸ். வேணுகோபால், சென்னை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.