முகப்பு
சென்னை

பருவமழைக்கு முன் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை தயார்படுத்துங்கள்

பருவமழை தொடங்குவதற்கு முன்பு மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை தயார்படுத்தி வைக்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு சென்னைக் குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குநர் பி. சந்தரமோகன் கேட்டுக்கொண்டுள்ளார்.

Updated On : 12 ஜூன் 2013, 4:20 am IST
பகிர்:

பருவமழை தொடங்குவதற்கு முன்பு மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை தயார்படுத்தி வைக்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு சென்னைக் குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குநர் பி. சந்தரமோகன் கேட்டுக்கொண்டுள்ளார்.

இது குறித்து சென்னைக் குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சென்னை மாநகராட்சி மற்றும் புறநகர் பகுதிகளில் வசிப்பவர்கள் தங்கள் வீடுகள், அலுவலகங்கள், நிறுவனங்கள், உணவகங்கள், திருமண மண்டபங்கள், திரை அரங்குகள் மற்றும் இதர கட்டடங்களில் மழைநீர் சேகரிப்புக் கட்டமைப்புகளைத் தயார்படுத்தி வைக்க வேண்டும்.

மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாக நன்கு பராமரித்து வைத்துக் கொள்ள வேண்டும். இதுவரை மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை அமைக்காதவர்கள் மண்ணின் தன்மைக்கு ஏற்றவாறு இந்தக் கட்டமைப்புகளை விரைவில் அமைக்க வேண்டும்.

Advertisement

Advertisement

பராமரித்தல்: கட்டடத்தின் மொட்டை மாடியை சுத்தப்படுத்தி மழைநீர் வடிகுழாய்களில் அடைப்பு மற்றும் ஓட்டைகள் இருந்தால் சரி செய்ய வேண்டும். வடிகட்டும் தொட்டி அல்லது கசிவு நீர்க்குழாயில் உள்ள கூழாங்கற்கள் மற்றும் கருங்கல் ஜல்லியை சுத்தம் செய்து நிரப்ப வேண்டும். கட்டமைப்புகளில் மழைநீர் செல்கிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.

மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளைப் பராமரிப்பது குறித்து விளக்கம் தேவை எனில் அப்பகுதியின் சென்னைக் குடிநீர் வாரிய பகுதி மற்றும் பிரிவு அலுவலகங்களை அணுகி ஆலோசனை பெறலாம். சென்னைக் குடிநீர் வாரிய அலுவலர்களும் பொதுமக்களின் வீடுகள், கட்டடங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை ஆய்வு செய்து ஆலோசனைகள் வழங்குவார்கள். விவரங்களுக்கு மழைநீர் சேகரிப்பு பிரிவு தொலைபேசி எண்: 28454080ஐ தொடர்பு கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.