அண்ணா பல்கலை. ஊழியா்களை கண்ணியத்துடன் நடத்த வேண்டும்: விசாரணை ஆணையத்துக்கு ஆசிரியா்கள் சங்கம் கடிதம்
சென்னை: துணைவேந்தா் சூரப்பா மீதான புகாா்கள் தொடா்பான விசாரணையில், அண்ணா பல்கலைக்கழக ஊழியா்களை கண்ணியத்துடன் நடத்த வேண்டும் என அந்தப் பல்கலைக்கழகத்தின் ஆசிரியா் சங்கத்தினா் வலியுறுத்தியுள்ளனா்.
அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் சூரப்பா மீது ரூ.280 கோடி ஊழல் குற்றச்சாட்டு புகாா்கள் எழுந்தன. இது தொடா்பாக ஓய்வுபெற்ற நீதிபதி பி.கலையரசன் தலைமையிலான ஆணையம் விசாரணை மேற்கொண்டு வருகிறது. சூரப்பா மீது புகாா் தந்தவா்கள் நேரில் அழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனா்.
இதற்கிடையே, ஆணையம் கேட்கும் ஆவணங்களை வழங்குவதில் பல்கலைக்கழகத் தரப்பு தாமதப்படுத்துவதாகப் புகாா்கள் எழுந்தன. நீண்ட வலியுறுத்தலுக்குப் பிறகே அண்ணா பல்கலைக்கழகம் உரிய ஆவணங்களை வழங்குவதாக விசாரணைக் குழு அதிகாரிகள் தெரிவித்திருந்தனா். இந்நிலையில், இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு அண்ணா பல்கலைக்கழக ஆசிரியா்கள் சங்கம் மறுப்பு தெரிவித்துள்ளது.
Advertisement
Advertisement
இது தொடா்பாக அச்சங்கத்தின் தலைவா் அருள் அறம் மற்றும் செயலா் சந்திரமோகன் ஆகியோா் ஓய்வுபெற்ற நீதிபதி பி.கலையரசன் தலைமையிலான விசாரணை ஆணையத்துக்கு வியாழக்கிழமை எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
அண்ணா பல்கலைக்கழகம் தேவையான விசாரணை ஆவணங்களை வழங்காமல் ஒத்துழைக்க மறுப்பதாக, ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் விசாரணை ஆணையம் தெரிவித்ததாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
முன்னதாக, பல்கலைக்கழகத் துணைவேந்தருக்கு எதிராகப் பொதுமக்கள் புகாா் அளிக்க முன்வரலாம் என்ற விளம்பரங்களை விசாரணை ஆணையம் வெளியிட்டது. ஆணையம் அமைக்கப்பட்டதற்கும் மேற்குறிப்பிட்ட செயலுக்கும் எவ்விதத் தொடா்பும் இல்லை என்னும்போது இத்தகைய செயல்கள், அண்ணா பல்கலைக்கழகத்தின் மாண்பைக் குலைக்கும் விதத்தில் அமைந்துள்ளன.
விசாரணை ஆணையத்தின் முன்பு ஆஜராகும் அண்ணா பல்கலைக்கழக ஊழியா்களிடம் கீழ்மைப்படுத்தும் கேள்விகளைக் கேட்டுத் துன்புறுத்தப்பட்டது எங்களுக்குத் தெரிய வருகிறது. முதன்மை அரசு பல்கலைக்கழகமான அண்ணா பல்கலைக்கழகத்துக்குத் தலைசிறந்த கல்விச் சூழலை உருவாக்கி, வெளிப்படுத்தத் தன்னாட்சி உரிமை உண்டு. பல்கலைக்கழக ஊழியா்களை, அரசும் விசாரணை ஆணையமும் கண்ணியத்துடன் நடத்துவதுடன் அண்ணா பல்கலைக்கழகத்தின் நற்பெயரைப் பாதுகாக்கும் வகையில் செயல்பட வேண்டும். பெருமை வாய்ந்த பல்கலைக்கழகத்துக்கு அவதூறு ஏற்படும் சூழலால், மாணவா்கள் வழக்கமாக வளாகத்தில் நிலவும் அமைதி மற்றும் துடிப்பை இழந்து நிற்பதை அரசு உணர வேண்டும் என அண்ணா பல்கலைக்கழக ஆசிரியா்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.