செய்திகள்

இலங்கைத் தமிழனாக பிறந்தது என் தவறா?: 800 பட சர்ச்சை குறித்து முரளிதரன் விளக்கம்

DIN

என்னைத் தமிழ் இனத்திற்கு எதிரானவராக சித்தரிப்பது வேதனை அளிக்கிறது என இலங்கை அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் கூறியுள்ளார்.

133 டெஸ்டுகள், 350 ஒருநாள், 12 டி20 ஆட்டங்களில் விளையாடி இலங்கையின் மகத்தான கிரிக்கெட் வீரராக அறியப்பட்டுள்ள முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்கிறார் விஜய் சேதுபதி. இப்படத்துக்கு 800 என பெயர் வைக்கப்பட்டுள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டில் 800 விக்கெட்டுகளை எடுத்துள்ளதால் இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. 

தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாகவுள்ள இந்தப் படத்தை எம்.எஸ். ஸ்ரீபதி இயக்குகிறார். இலங்கை, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா ஆகிய நாடுகளில் படமாக்கப்படவுள்ளது. அடுத்த வருடத் தொடக்கத்தில் இதன் படப்பிடிப்பு ஆரம்பமாகும். 2021 வருட இறுதியில் வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது. தமிழில் உருவாகும் இப்படம் தென்னிந்திய மொழிகளில் மட்டுமில்லாமல் ஹிந்தி, வங்காளம், சிங்களம் ஆகிய மொழிகளிலும் டப் செய்யப்படும்.

எனினும்  இலங்கை அரசுக்கு ஆதரவளிக்கும் முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் விஜய் சேதுபதி நடிக்க வேண்டுமா என்று பலரும் கேள்வி எழுப்பியுள்ளார்கள். முரளிதரனாக விஜய் சேதுபதி நடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சமூகவலைத்தளங்களில் பலரும் பதிவுகள் எழுதியுள்ளார்கள். #ShameOnVijaySethupathi என்கிற ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டானது. 

இந்நிலையில் 800 பட சர்ச்சை குறித்து முத்தையா முரளிதரன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

800 படத்தைப் பற்றி பல்வேறு சர்ச்சைகள், விவாதங்கள் எழுந்துள்ள நிலையில் சில விளக்கங்களைக் கூற விரும்புகிறேன்.

என் ஏழு வயதில் எனது தந்தை வெட்டப்பட்டார். சொந்தங்களில் பலர் பலியானார்கள். போரால் நிகழும் இழப்பு, அதனால் ஏற்படும் வலி என்ன என்பது எனக்குத் தெரியும். போர்ச்சூழ்நிலையில் மத்தியிலே தான் எங்கள் வாழ்க்கைப் பயணம் நடைபெற்றது. இந்தச் சூழ்நிலையில் இருந்து எப்படி கிரிக்கெட் அணியில் இடம்பெற்று சாதித்தேன் என்பது பற்றிய படம்தான் 800. அந்தப் படத்தைப் பல்வேறு காரணங்களுக்காக அரசியலாக்கி எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. நான் பேசிய பல கருத்துகள் தவறாகத் திரித்துச் சொல்லப்பட்டதால் வந்த விளைவுதான். 

ஒருபோதும் அப்பாவி மக்களின் படுகொலைகளை ஆதரிக்கவும் இல்லை, ஆதரிக்கவும் மாட்டேன். என்னைத் தமிழ் இனத்திற்கு எதிரானவராக சித்தரிப்பது வேதனை அளிக்கிறது. சிங்களர்கள், மலையகத் தமிழர்கள், ஈழத் தமிழர்கள் என அனைவரையும் ஒன்றாகப் பார்க்கிறேன். ஒரு மலையகத் தமிழனாக என் மக்களுக்குச் செய்த உதவிகளை விடவும் ஈழ மக்களுக்குச் செய்த உதவிகளே அதிகம். இந்தியாவில் பிறந்திருந்தால் இந்திய அணியில் இடம்பெற முயற்சி செய்திருப்பேன். இலங்கைத் தமிழராகப் பிறந்தது என் தவறா?  

என்னைப் பற்றி தவறான செய்திகள் மட்டுமே பகிரப்பட்டு வரும் நிலையில் நடுநிலையாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் இவ்விளக்கத்தை அளிக்கிறேன் என்று கூறியுள்ளார்.

முரளிதரனின் அறிக்கை

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

SCROLL FOR NEXT