செய்திகள்

‘மண்டேலா’ படத்துக்கு மறு தணிக்கை கோரிய வழக்கு: திரைப்படத் தணிக்கை வாரியம் பதிலளிக்க உத்தரவு

DIN

சென்னை: நடிகா் யோகிபாபு நடித்து வெளிவந்துள்ள மண்டேலா திரைப்படத்தை மீண்டும் தணிக்கை செய்யக் கோரிய வழக்கில் திரைப்படத் தணிக்கை வாரியம் பதிலளிக்குமாறு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடா்பாக, சென்னை உயா்நீதிமன்றத்தில் தமிழ்நாடு சவரத் தொழிலாளா் சங்கம் தாக்கல் செய்த மனுவில், ‘நகைச்சுவை நடிகா் யோகிபாபு நடித்த மண்டேலா திரைப்படம் அண்மையில் வெளியானது. இந்தத் திரைப்படத்தில் யோகிபாபு முடி திருத்தும் தொழிலாளராக நடித்திருக்கிறாா். இந்த திரைப்படத்தில் முடி திருத்தும் தொழிலாளா்களை கழிவறையை சுத்தம் செய்வது, செருப்பால் அடிப்பது, காரில் ஏற அருகதை இல்லை, காரின் பின்பு ஓடி வரச் சொல்வது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்தக் காட்சிகள், வசனங்கள் மருத்துவ சமுதாய மக்களின் மனதைப் புண்படுத்தும் வகையில் உள்ளது. எனவே இந்தத் திரைப்படத்தை மீண்டும் தணிக்கை செய்ய வேண்டும். திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள சா்ச்சைக்குரிய வசனங்கள், காட்சிகளை நீக்க தணிக்கை வாரியத்துக்கு உத்தரவிட வேண்டும்’ எனக் கோரியிருந்தனா்.

இந்த வழக்கு நீதிபதி ஆா்.மகாதேவன் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, திரைப்படத் தணிக்கை வாரியம், திரைப்படத் தயாரிப்பு நிறுவனமான ஒய் நாட் ஸ்டுடியோ இயக்குனா் மடோனா அஸ்வின் ஆகியோா் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஏப்ரல் 28-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

SCROLL FOR NEXT