செய்திகள்

குடி கெடுத்த குடும்பங்களின் கதை... பாட்டல் ராதா - திரை விமர்சனம்

பாட்டல் ராதா திரைப்பட விமர்சனம்...

சிவசங்கர்

இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில் நடிகர் குரு சோமசுந்தரம் நடிப்பில் உருவான பாட்டல் ராதா இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

முதல் காட்சியில் ஏரியால் சூழப்பட்டிருக்கும் சென்னையின் ஒரு அழகான பகுதியைக் காட்டுகின்றனர். அந்த காலை நேரத்தில் ஊரே பரபரப்பாக இயங்க, கட்டட தொழிலாளியான நாயகன் ராதா (குரு சோமசுந்தரம்) வேலையைச் செய்யாமல் மது அருந்த கிளம்புகிறார். நாள்தோறும் ஓயாத குடி, பாட்டல் தீரத்தீர குடித்துக்கொண்டே இருக்கிறார். அன்பாக, ஆத்திரமாக பேசிப்பார்த்தும் இவரைத் திருத்தவே முடியாது என ஓய்ந்துபோன மனைவியாக வரும் சஞ்சனா நட்ராஜன் இறுதியாக போதை மறுவாழ்வு மையத்தில் பாட்டல் ராதாவை சேர்த்துவிடுகிறார். காவல்நிலையத்திலேயே மதுபானத்தை திருடிக்குடிக்கும் அளவிற்கு மதுஅடிமையான ராதாவை மறுவாழ்வு மையம் திருத்தியதா? தொடர்ந்து குடிப்பவர்களால் ஏற்படும் அக, புற சிக்கல்கள் என்னென்ன என்கிற கேள்விகளுக்கெல்லாம் தன் முதல் படத்திலேயே அழுத்தமாக பதிலை சொல்லியிருக்கிறார் இயக்குநர் தினகரன் சிவலிங்கம்.

மதுப்பழக்கத்தின் தீங்கையும் அதனால் ஏற்படும் உறவு இழப்புகளையும் இப்படம் பதிவு செய்துள்ளது. பல காட்சிகளில் அந்த உணர்வுகள் நன்றாகக் கடத்தப்பட்டிருக்கின்றன. முக்கியமாக, தன் கணவன் திருந்தவே மாட்டான் என சஞ்சனா அழும் காட்சிகளில் பல பெண்களின் வாழ்க்கையைக் காண்பதுபோல் இருந்தது.

மதுபானக்கூடத்தில் குரு சோமசுந்தரம் மற்றும் அவரது நண்பர்கள் குடித்துக்கொண்டே இருப்பதும் அந்தக் குடியால் மெல்ல மெல்ல வாழ்க்கை கைவிட்டுப்போகும் துயரமும் திரைக்கதையில் சிறப்பாக பேசப்பட்டிருக்கிறது.

படத்தின் திசைகாட்டியாக போதை மறுவாழ்வு மையத்தின் தேவையையும் புரிதலையும் நன்றாக கையாண்டுள்ளார் இயக்குநர். மறுவாழ்வு மையங்களில் நோயாளிகளாக வருபவர்கள் தாக்கப்படுவது குறித்து ஓரிரு காட்சிகளில் வசனங்கள் மூலம் புதிய பார்வையை அளிக்கிறார்.

குடிகாரரின் வாழ்க்கையில் நகைச்சுவைகள் இல்லாமல் இருக்குமா? அந்த தர்க்கத்தை சரி செய்யும்விதமாக மறுவாழ்வு மையத்தில் நடிகர் மாறன் தன் உடல்மொழியாலும் வசனத்தாலும் சிரிக்க வைக்கிறார்.

படம் துவங்கியதும் இருந்த எதிர்பார்ப்பும் சுவாரஸ்யமும் ஆங்காங்கே தடைபடுகின்றன. முதல்பாதியின் இடைவேளைக் காட்சி ஊகிக்கும்படியாக இருந்தது சிறிய ஏமாற்றம். ஆனால், படம் பேசவந்த உணர்ச்சிகள் எதுவும் வீணாகாமல் பார்வையாளர்களுக்கு அழுத்தமான செய்தியாகவே பதிவாகிறது.

நடிகர் குரு சோமசுந்தரம் ஜோக்கர் படத்திலிருந்தே தான் ஒரு சிறந்த நடிகர் என்பதை வெளிப்படுத்தி வந்தாலும் பாட்டல் ராதா அவருக்கான நடிப்பில் பல இடங்களில் தீனி போட்டிருக்கிறது. குடித்துவிட்டு கண் சிவக்க காவல்நிலையத்தில் கூனிக்குறுகி நிற்பது, போதை மறுவாழ்வு மையத்தில் குடிக்காமல் இருக்க முடியவில்லையே என பதற்றமடையும் காட்சிகளில் நிஜக் குடிகாரராக மாறியிருக்கிறார். குருவின் நடிப்பால் பல காட்சிகளில் குடியால் வாழ்க்கையைத் தொலைத்த, இறந்த யாராவது நினைவுக்கு வந்து செல்கிறார்கள்.

தமிழ் சினிமாவில் நல்ல நடிகைகளுக்கான தேவை அதிகரித்திருக்கிற சூழலில் சஞ்சனா நட்ராஜன் அந்த இடத்தைப் பிடிப்பார் என்றே தோன்றுகிறது. வணிக குறிக்கோள்களைத் தாண்டி நல்ல கதைகளில் யாரும் ஏற்கத் தயங்கும் கதாபாத்திரங்களில் நடிக்க இயக்குநர்கள் சஞ்சனாவை தேர்ந்தெடுக்கலாம். மார்க்கெட் ஊகங்களைக் நோக்காமல் சஞ்சனாவும் மனது வைத்தால் ஒரு சிறந்த நடிகை உருவாவதற்கான வாய்ப்புகள் நிறைய இருக்கின்றன.

குடிகாரக் கணவனிடம் அன்பை எதிர்பார்க்கும் இடங்களிலும், தன்னால் முடிந்தவரை தன் கணவனின் வாழ்க்கையை மாற்றப்போராடும் இடங்களிலும் பல பெண்களை நினைவுக்குக் கொண்டு வருகிறார்.

ஜமா இயக்குநர் பாரி இளவழகன், ஜான் விஜய், மாறன் உள்ளிட்டோரும் தங்களின் சிறப்பான பங்களிப்பைச் செய்துள்ளனர். ஜான் விஜய்யின் கதாபாத்திர வடிவமைப்பு கதைக்களத்திற்கேற்ப பொருத்தமாக இருந்தது.

சான் ரோல்டனின் பின்னணி இசை, ஒளிப்பதிவு என இந்தக் கதைக்கு தேவையான விஷயங்கள் சரியாக பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

நம் குடும்பத்தினரோ, நண்பர்களோ மிதமிஞ்சிய குடிப்பழக்கத்தில் இருக்கலாம். அவர்களை நோயாளியாகக் கருதி அதிலிருந்து அவர்களை மீட்க நினைப்பவர்களும் குடியின் பிடியிலிருந்து வெளியேற நினைப்பவர்களும் பாட்டல் ராதவை குடும்பத்துடன் பார்க்கலாம்.

இறுதியாக, சஞ்சனா பேசும் சில நிமிட வசனங்கள் பல பெண்களின் மனதில் கொட்டிக்கிடப்பவை. தமிழ் சினிமாவாக உருவானாலும் இக்கதை போதைப்பொருள் எங்கெல்லாம் இருக்கின்றனவோ அங்கெல்லாம் பேசப்படும் வகையிலேயே உருவாகியிருக்கிறது. நேரம் ஒதுக்கி சந்திக்கும் அளவிற்கு சிறப்பான ஆளாகவே வந்திருக்கிறார் பாட்டல் ராதா!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாலையில் நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

இந்திய குடியரசை மதவாத நாடாக மாற்ற பாஜக சூழ்ச்சி: சோனியா காந்தி குற்றச்சாட்டு

மீன் உற்பத்தியில் 103% வளா்ச்சி: மத்திய அமைச்சா் பெருமிதம்

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி இந்தியா வருகை

கொலம்பியா முன்னாள் அதிபருக்கு 12 ஆண்டுகள் வீட்டுச் சிறை

SCROLL FOR NEXT